Icon to view photos in full screen

“கடந்த காலத்தில் நடந்ததையே எண்ணி துவண்டு கொண்டு இருந்தால் முன்னேற முடியாது!”

“ நான் நடத்தும் தாக்குதலினால் நீ உயிர் வாழ்வாய், ஆனால் கிட்டத்தட்ட நடை பிணமாகவே இருப்பாய்!! “ இவ்வாறு சூளுரைத்தனர் மனித உருவம் பூண்ட அரக்கர்கள் சிலர். ஆனால் அவர்கள்  தைரியம் மிக்க பெண்மணிகளால் தோற்கட்டிக்க பட்டனர். “எங்கள் அசைக்கமுடியாத தன்னம்பிக்கையில் ஊறி கிடக்கும் எங்கள் தனித்தன்மையை **_யாராலும்_** அழிக்க முடியாது! அது எங்கள் ரத்தத்தில் ஊறியது, பிரிக்க முடியாதது! ” என்று வாழ்ந்து காட்டி, வெற்றி வாகை சூடி பிரகடனப் படுத்தினார்கள் அந்த பெண்மணிகள்!
  
அலோக் திக்ஷித் என்பவர் Chhanv Foundation என்னும் அறக்கட்டளையின் கீழ் Sheroes’ Hangout Café என்னும் சிற்றுண்டி மையத்தை நிறுவினார். இந்த மையம் முற்றிலும் பெண்களாலேயே நடத்த படுகிறது. சுவர்கள் பல வண்ணங்களாலும், சுவரோவியங்களாலும், புகைப்பங்களாலும் கலைத்திறன் மிக்கதாக அலங்கரிக்கப் பட்டிருந்தன. மேலும் பளபளவென்று மின்னும் இரண்டு கரண்டிகளால் அழகிய இறக்கை வடிவில் அமைக்கப் பட்டிருந்தது கண்களை கவருவதாக இருந்தது! அலமாரிகளில் பற்பல புத்தகங்கள் இருந்தன. அங்கு வருபவர்கள் அந்த புத்தகங்களை படிக்கலாம், வீட்டுக்கு எடுத்து செல்லலாம், ஒரு புத்தகத்துக்கு எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக இன்னொரு புத்தகத்தை வைக்கலாம். அங்கே நளினமான கை வேலைப்பாட்டுடன் செய்ய பட்டிருந்த கலைப்பொருள்களும், துணிகளும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. அங்கே விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு விலை ஒன்றும் நிர்ணயிக்க படவில்லை! வாங்குபவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம். நிர்பந்தம் ஒன்றும் இல்லை.
 
அங்கே பணி புரியும் அனைவரும் பெண்கள். அந்த இடத்தின் அலங்கரிப்புகளைப் போலவே மிக உயிர் துடிப்புடனும், மனதுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தனர் அங்கிருந்த பெண்கள். அவர்கள் அணிதிருந்த வெள்ளை T Shirt முன் புறத்தில் பல வண்ணங்கள் கொண்ட ஒரு பெண்ணின் முகம் வரையப்பட்டிருந்தது. அதன் கீழ் “My beauty is my smile” (என் அழகே என் புன்னகையில்தான்) என்ற வாசகம் எழுதி இருந்தது.  அந்த T Shirt பின் புறத்தில் “Stop Acid Attacks” (“அமிலம் தாக்குதலை நிறுத்த வேண்டும்”) என எழுதியிருந்தது.
 
நாம் இங்கு சென்றபோது இந்த மையம் கொரோனா நோய் தொற்று காரணமாக விருந்தினர்கள் யாரும் வராததால், மூடும் நிலைமைக்கு தள்ள பட்டிருந்தது. ஆயினும், அங்குள்ளவர்கள் எங்களை மலர்ந்த முகத்துடனும், புன்னகையுடனும் வரவேற்றனர். காலையிலும் மாலையிலும் மாறி மாறி பணி புரியும் பத்து பெண்களில் நாங்கள் ஐவரை சந்திக்க முடிந்தது. அந்த ஐவரும் ஏழை எளிய குடம்பங்களிலிருந்து வந்தவர்கள்; அவர்கள் அனைவரும் முகத்தில் அமிலம் வீசப்பட்டதால் அவதிப் பட்டவர்கள்!
 
37 வயதான ருக்கையா காட்டூன் என்பவர் அலிகர் நகரில் வாழ்ந்து வந்தார். ஏழு உடன் பிறந்தோர்களில் நான்காவதாக பிறந்தவர். 14 வயது இளம் பெண்ணாக இருக்கும் போது நவீன ஆடை அணிகலன்களை வடிவமைக்கும் தொழிலில் ஈடுபட கனாக் கண்டார். அவருடைய மூத்த சகோதரி கணவரால் துன்புறுத்தப்பட்டு, கருச்சிதைவு அடைந்தார். அவருக்கு உதவியாக இருக்க ருக்கையா அனுப்பப் பட்டார். அந்தக் கணவரின் சகோதரரும் அதே வீட்டில் வசித்து வந்தார். அவர் ருக்கையா மீட்டது மோகம் கொண்டு அவரையே திருமணம் புரிந்து கொள்ளவும் ஆசை கொண்டார், ஆனால் ருக்கையாவின் அன்னைக்கு இதில் சம்மதம் இல்லாததால், நிராகரித்து விட்டார். இதனால் கோபம் கொண்ட அந்த சகோதரர் ஓரிரவு மிகுந்த வெறியுடன் குடி போதையில் வந்து, ருக்கையா மீது அமிலம் வீசினார். வலியிலும் உடல் எரிச்சலிலும் துடித்துக் கதறி கொண்டிருந்த ருக்கையாவை சரியான நேரத்திற்கு மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. கடைசியில் அவரின் சகோதரர் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்று, தன் சைக்கிளை அடமானம் வைத்து தன்னாலான முயற்சிகளை செய்தார்.
 
20 வயதான டாலி மருத்துவராக வேண்டும் என்று கனா கண்டார். ஆனால் தன் 13ம் வயதில் அமிலத்தால் தாக்கப்பட்டார். 27 வயதான ரூபா மீது அவருடைய 14ம் வயதில் அவருடைய மாற்றாந்தாய் அமிலம் வீசினார். 40 வயதான மது தன் 17வது வயதில் தன்னை மணக்க விரும்பிய ஒருவரை நிராகரிக்க அந்த ஆண் வெறித்தனமாக அவர் மீது அமிலம் வீசினார். மேலும் “போலீஸ் புகார் செய்தால், உங்கள் மகனை கொன்று விடுவேன்” என்று  மதுவின் தாயாரை மிரட்டியதால் இதைப்பற்றி அந்த தாயும் யாரிடமும் பேசவே இல்லை. பிஜனர் நகரிலிருந்து வரும் 26 வயதான பாலா பிரஜாபதி 17 வயது இருக்கும்போது அவர் தாயின் மீது காம வெறி கொண்டு, நிராகரிக்கப் பட்ட ஒரு மனிதன் கொலை வெறியுடன் அவர் வீட்டில் இருந்த எல்லா மிருகங்களையும் கொன்றதோடு மட்டுமில்லாமல், பாலாவின் முகத்திலும் அமிலத்தை வீசி காயப் படுத்தினான். 
 
இந்த அனைவரும் அனுபவித்த மன உளைச்சலும், எல்லோராலும் ஒதுக்கப் பட்டதால் ஏற்பட்ட அவமானமும், மருத்துவமும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொள்ள பண வசதி இல்லாததால் அனுபவித்த உடல் உபாதைகளும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு கொடுமையானது! நகரப் புறத்தில் இம்மாதிரி நிலைமைகளில் மனோ தத்துவ மருத்துவர்களின் அறிவுரை (counseling) பெற்று சிகிச்சை பெற்றிருக்க முடியும். ஆனால் இவர்கள் இருந்த கிராமப்புற பகுதிகளில் இதெல்லாம் கிடைக்கவில்லை. தனிமையிலே மனம் புழங்கி, உடல் உபாதையை பொறுத்துக் கொண்டு வாழ்வதே ஒரே வழி.
 
Chhanv Foundation உதவியால் இவர்கள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது! புதியதொரு குடும்ப வாழ்க்கையும் மலர்ந்துள்ளது!  இவர்கள் அனைவரும், இதற்காக நன்றி செலுத்துகின்றனர். ருக்கையா இப்போது ஒரு ஒன்பது வயது மகனின் தாயார். “முன்பெல்லாம் நான் எப்போதும் என் முகத்தை ‘புர்கா’ போட்டு மூடி இருப்பேன். ஆனால் இப்போது தைரியமாக பான்ட், டீ ஷர்ட் அணித்து கொள்கிறேன்” என்கிறார் இவர், மிக களிப்புடன். முதலில் தன் சகோதரரின் நடமாடும் உணவகத்திற்கு சமையல் செய்து  கொடுத்து கொண்டிருந்தார். ஒரு நாள் இந்த விடுதியின் சமயலறையில் பணி புரிய வேண்டும் என் விழைகிறார்.
 
ரூபா மையத்தின் வரவு செலவு கணக்குகளையும், கலைப் பொருள்கள் விற்பனைகளையும் கவனித்து கொள்கிறார். மகளிர் உடைகளை வடிவமைப்பு செய்து, அவைகளை ஆன்லைனில் விற்க ஆவல் கொண்டுள்ளார். தன் தாயின் ஊக்குவிப்பு தனக்கு மிகவும் உதவியாக இருப்பதாக கூறுகிறார்.
 
டாலி தன்  மீது அமிலம் வீசியவருக்கு சிறை தண்டனை வாங்கி கொடுத்ததோடு மட்டுமில்லாமல், நஷ்ட ஈடு பணத்தையும் கொடுக்க வைத்த  அபூர்வமான ஒருவர்! மையத்திற்கு வருபவர்களுடன் குதூகலமாக அளவாடி, அவர்களுக்கு சாப்பிட என்ன வேண்டும் என்பதையும் எழுதி, கொண்டு வந்து தருகிறார். நாட்டியத்தில் ஈடுபாடு உள்ள இவருக்கு நாட்டிய பள்ளி ஒன்றை துவக்க வேண்டும் என்று அவா.
 
 மதுவின் தாயார் மதுவின் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்ட கடினமாக உழைத்தார். மது BA பட்டம் முடித்து, திருமணம் செய்து கொண்டு, மூன்று குழந்தைகளுக்கு தாய். அந்த குழந்தைகளை வளர்க்க பணி புரிந்து கொண்டிருக்கிறார். கொரோனா நோய் தொற்றினால் அவர் கணவர் வேலையை இழந்து விட்டார். இந்த சோதனை மிக்க கால கட்டத்தில் Chhanv Foundation பெண்களுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவும் பல்வேறு துறைகளிலும், திறன்களிலும் பயிற்சி அளித்தது. அதில் ஒன்று video editing எனப்படும் காணொளி தொகுப்பாக்கம். மது இதிலும், மேலும் கணினியை பயன்படுத்துவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். Data entry மிகவும் நன்றாக செய்வார்.
 
“என் கிராமத்தில் பல பெண் குழந்தைகள் ஐந்தாவது வகுப்பிற்கு பிறகு படிக்க அனுமதிக்க படுவதில்லை. ஆனால் Chhanv Foundation மூலம் பணி புரிந்து கொண்டே படிப்பையும் தொடர எனக்கு வாய்ப்பு கிடைத்தது.“ மேலும் இங்கு பணி புரியும் அனைத்து பெண்களின் சார்பாகவும் இவர் கூறுவது “எங்கள் முகத்தில் வடு விழுந்ததால் மட்டும் எங்கள் வாழ்வு முடிவுக்கு வந்து விடவில்லை. தொடர்ந்து வாழ்ந்து காட்டுகிறோம்!”

புகைப்படங்கள்:

விக்கி ராய்

வீடியோ:

சந்தன் கோமேஸ்