Icon to view photos in full screen

“பாடல் பாடுவது எனக்கு மன அமைதி அளிப்பது மட்டுமின்றி, வாழ்க்கையில் ஆன்மீக உணர்வையும் கொடுக்கிறது”

ஹரியானாவில் உள்ள குருக்ராம் மாவட்டத்தில் உள்ள சொஹ்னா என்ற ஊரில் இருக்கும் 36 வயதான ராமோதர்  களிமண் பானைகளை செய்து, அவைகள் ஈரம் காய வைத்திருந்தார். 27 வயதான அவர் மனைவி சோனியா அவர்களுக்கு சொந்தமான எருமைகளை பராமரித்து விட்டு அமர்ந்திருந்தார். இப்போது இருவரும் ஓய்வெடுக்க வேண்டிய நேரம்! அம்மாதிரி நேரங்களில் அவர்களுக்கு பிடித்த இரண்டு பொழுதுபோக்கு செயல்கள் – ஹூக்கா புகைப்பது மற்றும் ஹார்மொனியம் வாசிப்பது.
 
ராமோதருக்கு இரண்டு வயது ஆகி இருக்கும்போது போலியோ நோயால் தாக்கப் பட்டார். இருப்பினும், அவரின் தந்தை மங்கள் சிங்க் தன் மகன் தன் குடும்ப தொழிலான மண் பானைகள் செய்யும் தொழிலில் ஈடுபடாமல்,  நன்கு படித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என விரும்பினார். ஆனால் ராமோதருக்கு படிப்பில் சற்றும் ஆர்வமோ ஈடுபாடோ இருக்கவில்லை. வேறு வழியின்றி, அவர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அவர் தந்தை அவருக்கு மண்பானைகள் செய்வதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். இந்த நடைமுறை கல்விதான் இன்று ராமோதருக்கு வாழ்வாதாரத்தை அளிக்கிறது.
 
மங்கள் சிங்க், மூர்த்தி தேவி தம்பதியனருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் ராமோதர் இரண்டாவது குழந்தை. மேவாட் மாவட்டத்தில் உள்ள மாலப் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த இவர்கள், அந்த ஊரில் நடந்த சமூக கலவரங்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி சொஹ்னா கிராமத்திற்கு குடி புகுந்தனர். ரமொடாருடைய மிகப் பெரிய “ஹீரோ” அவர் தந்தைதான்! 86 வயது வரை, ஒரு தடவை கூட மருத்துவரிடம் செல்லாமல் திடகாத்திரமான உடல்நிலையுடன் வாழ்ந்து வயோதிகம் காரணமாகவே மங்கள் சிங்க் காலமானார். தன் வாழ்நாட்களில் மல்யுத்தம் மற்றும் கழியாட்டம் போன்ற விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்று, கிராம பஞ்சாயத்து அங்கத்தினராகவும் செயல் புரிந்தார். ராமோதருக்கு தபலா, ஹார்மோனியும் வாசிக்கவும், பாடல்கள் பாடவும் கற்றுக் கொடுத்தார்.  
 
ராமோதருக்கு  15 வயது ஆகி இருக்கும்போது அவருடைய சதைகள் மிகவும் வலுவிழந்தன. போலியோவால் தாக்கப் பட்டவர்களுக்கு சில வருடங்கள் கழித்து இம்மாதிரி தளர்ச்சி ஏற்படுவது சகஜமே. இவ்வளவு கஷ்டங்களுக்கிடையே, அவர் எப்போதும் ஒரு பஜன் பாடிக்கொண்டு இருப்பார். அதன் பொருள் “_எப்போதும், எக்காரணத்தைக் கொண்டும், தைர்யத்தை இழக்காதே, இறைவனிடம் உள்ள நம்பிக்கையை கை விடாதே!_” எதேச்சையாக, யாரோ ஒருவர் பரிந்துரைத்து, டில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் உள்ள டாக்டர் மாத்யு வெர்கீஸ் என்பவருடன் தொடர்பு கொண்டார். அவர் ராமோதருக்கு  ஒரு அறுவை சிகிச்சை செய்ததன் பயனாக ராமோதர் “வாக்கர்” ஒன்றை பயன் படுத்தி நடக்க முடிந்தது. இதனால் இந்த டாக்டர் “மனித உருவில் உள்ள தேவதை” என்றே ராமோதர் புகழாரம் சூட்டுகிறார்!
 
தந்தை இறந்த பிறகு, மூத்த சகோதரர் குடும்பத்தை விட்டுவிட்டு சொந்தமாக செங்கல் சூளை நிறுவ சென்று விட்டதால், இவரே முழு குடும்ப பொறுப்பையும் சுமக்க நேர்ந்தது. ராமோதர் தன் இளைய சகோதர, சகோதரிகளுக்கு வேலை செய்து கொடுத்து, திருமணம் செய்து வைத்து அவர்களுக்கு வாழ்க்கை பாதை அமைத்து கொடுத்தார். இதனால் அவர்கள் இவரை ஒரு தந்தையின் ஸ்தானத்தில் வைத்து மிக மதிப்புடன் நடத்தினார்கள். ராமோதரின் அத்தை அவருக்கு சோனியாவின் குடும்பத்துடன் அறிமுகம் செய்து வைத்தார். சோனியாவுக்கு ராமோதர்  கூறியது:  “என் நிலைமை, மற்றும் உடல் நிலை எப்படி இருந்தாலும், உன்னை மகிழ்சியாக வைப்பதில் ஒரு குறையும் இருக்காது!” கபடமற்ற, நேர்மையான இந்த வார்த்தைகள் சோனியாவை மிகவும் கவர்ந்தன. மேலும், தனியார் காப்பீடு நிறுவனத்திற்கு முதலீட்டாளர்கள் திரட்டிக் கொண்டு வருவதால் தரகு ஈட்டி பணம் சம்பாதித்தார். இதன் மூலம் கடன் வாங்கி, ஊனமுற்றவர்களுக்கான ஸ்கூட்டர் ஒன்றையும் வாங்க முடிந்தது.
 
ஆனால், அவர் பணி புரிந்த காப்பீடு நிறுவனம் மோசடி புகார்களில் சிக்கி, மூடப் பட்டது. இதனால் வருமானத்தை இழந்த ராமோதர் மிக மன உளைச்சலுக்கு ஆளானார். ஆனால் சோனியா புத்திசாலித்தனமாக “நீங்கள் மண்பானைகள் செய்யும் கலையில் நிபுணராயிற்றே! அதையே ஏன் வாழ்வாதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது?” என பரிந்துரைத்தார். இதை ஏற்றுக்கொண்டு ராமோதர் செயல்பட்டார்., நவ்ஜோதி இந்தியா அறக்கட்டளை மூலம் இந்த தொழிலில் தன்னுடைய திறமையை மேம்படுத்திக் கொண்டார். இப்போது மண்ணை பயன் படுத்தி, தண்ணீர் குடங்கள், “குல்ஹாட்” எனப்படும் ஒளிராத தேநீர் கோப்பைகள், சில்லும் எனப்படும் ஹூக்கா புகைக்க பயன் படுத்தப்படும் கருவியின் ஒரு அங்கம், குல்லக் எனப்படும் உண்டியல்கள் போன்ற பல விதமான மட்பொருட்களை உற்பத்தி செய்கிறார்.

 இசையில் இவருக்கு அதீத ஈடுபாடு உள்ளது. பண்டிகை, திருவிழா காலங்களில் இரவு முழுவதும் பஜனைகள் பாடும் ஒரு குழுவில் அங்கத்தினராக உள்ளார். அன்பான மனைவியும், மூன்று அழகான குழந்தைகளும் உள்ள இவர் தன் குடும்பத்தை மனமார நேசித்து “என் குடும்பமே என் உலகம்” என்று கூறுகிறார்!புகைப்படங்கள்:

விக்கி ராய்