Icon to view photos in full screen

“எதுவும், யாரும் என்னை துவண்டு போக வைக்க முடியாது”

டில்லியில் அரசு பள்ளியில் படித்து கொண்டிருந்தபோது, நியாஸ் ஹுசைன் மிகுந்த கலை ஆர்வம் மிக்கவராகவும், கலையே தனக்கு உறுதுணையாக இருக்கும் எனவும், தன் தனிமைக்கு அருமருந்தாக இருக்கும் எனவும் திடமாக நம்பினார். இரண்டு வயது ஆகும்போதே போலியோ நோயால் தாக்கப்பட்டதால் நண்பர்களால் ஒதுக்கப்பட்டு, விளையாட்டுகளிலும் , மற்ற நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார். ஆனாலும் வகுப்பு நேரங்களில் பின்புற மேசைகளில் அமர்ந்து, ஆசிரியர்களின் படங்களை வரைந்து புன்னகை பூத்து கொண்டு இருப்பார். இந்த கால கட்டத்தில் அவரின் தாயாரே உறுதுணையாக இருந்தார். “என் வாழ்க்கை முடிந்து போனாலும், யாரையும் சார்ந்து இருக்காமல், நீயே உனக்கு ஆதரவாக இருந்து வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும்!”
அவருக்கு மூன்று இளைய சகோதரர்களும், ஒரு இளைய சகோதரியும் உள்ளனர். தானே மூத்தவர் என்பதால் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அவர் தானே முன்வந்து ஏற்றுக்கொண்டார். பள்ளி நேரம் முடிந்த பின் அவர் சந்தையில் காய்கறிகளை விற்று, அதன் மூலம் பணம் ஈட்டினார். மேலும், நேரம் கிடைக்கும் போதேல்லாம் வயல் வெளிகளிலும் மற்ற இடங்களிலும் உழைக்கும் தொழிலாளிகளைப் உன்னிப்பாக கவனித்து அவர்களை ஓவியமாக  சித்தரிப்பதில் பேருவகை அடைந்தார். இவருடைய இந்த கலை ஆர்வத்தை கவனித்த சிலர், “காய்கறிகள் விற்பதில் நேரம் செலவழிக்காமல், முழு நேரமும் உந்தன் கலைத் திறனை மேம்படுத்தி கொள்வதில் கவனம் செலுத்து!” என்று ஆலோசனையும், அறிவுரையும் அளித்தார்கள்.

2015ம் ஆண்டு, பள்ளி விட்டு நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு,ஜாமியா மில்லா பல்கலைகழகத்தில் நுண்கலை துறையில் இளங்கலை பட்டம் பெற நுழைவு தேர்வு எழுதினர். இந்த பல்கலை கழகத்தின் கட்டணம் மற்ற இடங்களை விட அரை மடங்கே இருந்தது என்பதால் இவ்விடத்தை தேர்ந்தெடுத்தார். பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல பணம் இல்லாததால், இவர் தன் சொந்த முயற்சியிலேயே தானே பரீட்சைக்கு படித்து, இந்த பரிட்சையில் தேர்வு பெற்றார். இந்த நான்கு வருட படிப்பு மிகவும் கடினமானது மட்டுமல்ல, இதற்கு தேவைப்படும் கலை பொருட்களும் மிகவும் விலை உயர்ந்தவை. அத்தனை நிதி வசதி இல்லாததால் அவர் மறுசுழற்சி செய்யப்பட காகிதம் மற்றும் இதர உபரி பொருள்களையே உபயோகித்தார். வரைவதற்கு பயன் படுத்தும் பென்சில்கள் விலை அதிகம் என்பதால் விலை குறைவான பேனாக்களையே பயன் படுத்தினார். இவரின் ஓவியங்கள் பல கண்காட்சி சாலைகளில் ஆதரவைப் பெற்றதால் கிடைத்த பரிசுப் பணத்தை தன் படிப்புக்கு பயன் படுத்தினார்.

2011ம் ஆண்டு தன் முதல் ஓவியத்தை மிகக் குறைவான விலைக்கே விற்க முடிந்தது. ஆனால் இன்றோவெனில், பல விருதுகளை வென்று உள்ளார். பல இடங்களை அவருடைய கலை நயம் மிக்க ஓவியங்கள் அலங்கரிக்கின்றன! இரவு நேரங்களில் ஓவியம் வரைவதும், பகல் நேரங்களில் சிறிது நேரம் ஒய்வு எடுப்பதுமாக இவர் கடுமையாக உழைக்கிறார். “என் கலையே என் வாழ்க்கை! ஓவியம் வரைய தொடங்கி விட்டால், நான் என்னையே மறந்து விடுகிறேன்!” என்று பெருமிதத்துட கூனும் ஆர்வத்துடனும் கூறுகிறார். சிறு வயது முதல் நண்பராக இருந்த மீனு என்னும் பெண்ணை 2020ம் ஆண்டு திருமணம் புரிந்து கொண்டார். வாழ்வாதாரத்திற்கு பணம் போதவில்லை என்றாலும், ஓவியக் கலையில் தனக்குள்ள ஈடுபாட்டை இவர் சற்றும் குறைத்து கொள்ளவில்லை. “என்னுடைய ஓவியங்கள் மனித எண்ணங்களின் பிரதிபலிப்பு. அவை ஒவ்வொன்றும், பல கதைகளை சொல்லும்! எனக்கு எவ்வளவு வயதானாலும், என் ஓவியங்கள் என்றென்றும் இளமை மாறாதே இருக்கும்!” என்று தம் கலையில் உள்ள அளவற்ற பக்தியையும், தன்னம்பிக்கையையும் மிக தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்