Icon to view photos in full screen

முதலில் என் ஊனம் எனக்கு பலவீனம்.. ஆனால் இப்போதோ அதே எனக்கு மிகப் பெரிய பலம்

இன்று நீங்கள் உற்சாகமான, சுறுசுறுப்பான ஆஷே கிபாவைப் பார்த்தால், அவர் குழந்தை பிராயத்தில் மிகவும் கூச்சமானவாரகவும், மிகவும் கஷ்டத்துக்கு ஆளானவர் என்றும் ஊகிக்கவே முடியாது! அவர் வளர்ந்த நாகாலாந்து மாநிலத்திலும், அவருடைய சொந்த ஊரான அகுலுடோவில் வசிக்கும் மக்களோவெனில் அவள் எதோ எதோ பெரும் சாபத்திற்கு உள்ளானவர் என்றே அவளை வெறுத்து ஒதுக்கினர். என்? அவர் கைகளும், விரல்களும் மிகவும் குட்டையாகவும் இருந்தன. சில விரல்கள் இல்லவே இல்லை. ஒரு முறை அவர் ஒரு மருந்து கடையில் மருந்து வாங்க பணம் கொடுத்தபோது, அந்த கடைக்காரர் பணத்தை அவளின் முகத்திலேயே வீசி எறிந்தார்.
 
இம்மாதிரி அவர் சந்தித்த இன்னல்களுக்கும், அடைந்த அவமானத்திற்கும் எல்லையே இல்லை! இம்மாதிரி நிகழ்வுகளால், அவர் மனம் உடைந்து, எப்போதும் தன கைகளை வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டே இருந்தார். சிண்டெரல்லா கதையில் வருவது போல யாரவது ஒரு அத்ருஷ்ட தேவதை வந்து தன் கைகளை சரி செய்ய மாட்டாரா என ஏங்கியதும் உண்டு! இந்த பிஞ்சு மனத்தில் பள்ளி விளையாட்டு போட்டிகளில் – அதிலும் குறிப்பாக கைப்பந்து ஆட்டத்தில் – பங்கேற்க வேண்டும் என்ற பேரவா இருந்தாலும், வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க முடிந்தது. பள்ளியில் மதிய உணவு வேளையில் கூட பட்டினி கிடப்பார். ஏனெனில் அவர் சாப்பிடும்போது எல்லோரும் அவரின் கைகளையே முறைத்து, ஏளனமாக பார்ப்பார்கள். இந்த காரணத்திற்காகவே அவர் மக்கள் இருக்கும் இடத்திற்கெல்லாம் செல்வதையே தவிர்த்து வந்தார்.
 
பள்ளி ஆசிரியர்கள், மற்றும் சக மாணவர்களின் ஏளனமும், கொடுமையும், அவமதிப்பும் தாங்க முடியாது, மனச்சோர்வும், மன அழுத்தமும் மிகுந்து, அவர் ஒரு கால கட்டத்தில் தற்கொலை செய்து கொள்வதென்றே எண்ணினார். உயர் நிலை பள்ளி முடிந்தவுடன் ஐந்து வருடம் ஒன்றும் செய்யாது இருந்தார். அப்போது அவர் தாயார் யஹோலி சுகுவின் உந்துதலால் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் முழு கவனம் செலுத்தி டிம்பூர் என்னும் ஊரில்  உள்ள பிரபாந்தா மகளிர் கல்லோரியிளிருந்து ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். அவர் தாயின் “கல்வி இல்லையேல் வாழ்க்கையில் ஏதும் சாதிக்க முடியாது” என்னும் அறிவுரை, அவருக்கு வாழ்க்கையின் தாரக மந்திரமாகவே அமைந்தது.
 
ஆஷே சுய பச்சாதாபத்தினாலும், மனக்கசப்பினாலும்  சோகக் கடலில் மூழ்கி தன் வாழ்க்கையையே சீரழித்திருக்கலாம்! ஆனால் அவர் வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஒரு திருப்பு முனையாக அமைந்து அவரை முன்னேற்ற பாதையிலே செலுத்தியது. கூஹெடோ கிராமத்தின் மாணவர் சங்கத்தின் தலைவராக அவரின் பெயர் இரண்டாவது முறையாக பேசப்பட்டது. தேர்தலுக்காக குழிமி இருந்த போது, ஆஷேவின் மாமாவே ஆட்சேபனை எழுப்பினார். அது மட்டுமின்றி, ஆஷே தேர்ந்தேடுக்கப்பட்டால் அது அந்த கிராமத்துக்கே ஒரு இழுக்கு. அவர் ஊனமுற்றவர் மட்டும் அல்ல, ஒரு பெண்ணும் கூட என  வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும்  உமிழ்ந்தார். இம்மாதிரி எதிர்மறை வாதங்களை முறியடித்து , வாழ்க்கையில் சாதனை புரிந்து காட்ட வேண்டும் என்ற அடங்காத வேட்கை அவரை அந்த நிமிடமே ஆட் கொண்டது.  ஜனவரி 1, 2015 அன்று அவர் தனது உரிமைக்கு மட்டுமில்லாது, அனைத்து ஊனம் உற்றோர் சார்பாகவும் குரல் கொடுத்து போராடுவது என்று உறுதி பூண்டார்.
 
இதற்குப் பிறகு, தன் ஊனத்தை பற்றிய தயக்கமோ வெட்கமோ அவரிடமிருந்து படிப்படியாக குறைய தொடங்கியது. மன வலிமையும், தைரியமும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் மலர்ந்தது. Nagaland State Disability Forum (NSDF) என்னும் நாகாலாந்து மாநிலத்தின் ஊனமுற்றோர் சங்கம் கௌஹாத்தி நகரில் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்க அவரை அனுப்பினார்கள். 2017ம் ஆண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் பூனே நகரில் நடத்தும் Tribal Leadership Programme (TLP) என அழைக்கப்படும் பழங்குடியினரின் தலைமைத்துவ பண்புக்கூறுகள் பற்றிய நிரலில் தன் வாழ்க்கை பயணத்தை விவரித்தார். 2018ல் இதே நிரலில் முதன் முறையாக தன் குட்டையான கைகளை மறைத்து கொள்ளாமல் பேசினார்!
 
இந்த திருப்புமுனைக்கு பிறகு முன்னேற்ற பாதையில் மிக வேகமாக வீறு நடை போட்டார். இன்று அவர்  NSDFன் பொது செயலாளராக உள்ளார். இதைத் தவிர, ஊனமுற்றோர் உரிமைகளை பறை சாற்றும் பல குழுமங்களிலும் முக்கிய பதவிகளை வகிக்கிறார்.
 
டிஸ்னி தயாரித்த தேவதை கதைகள் படங்களை பார்த்து ரசித்தல், பன்றி இறைச்சி சமைத்தல், Aplono Gospel Band என்னும் உள்ளூர் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்தல், தன நண்பர்களுடன் அளவளாவுதல் என்று பல விதமாக  தன் ஒய்வு நேரத்தை அவர் கழிக்கிறார்.  
 
ஊனமுற்றோர்களுக்கு அவர் வழங்கும் அறிவுரை: “தைர்யத்துடனும், துணிச்சலுடனும் இருங்கள்! நாம் ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர்கள். இதில் வெட்கப்படவோ, ஒளிக்கவோ ஏதும் இல்லை”.

புகைப்படங்கள்:

விக்கி ராய்

வீடியோ:

சந்தன் கோமேஸ்