Icon to view photos in full screen

“எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஊனம் உள்ளவர்கள்தான். எங்கள் கண்களுக்கு எங்கள் ஊனம் தெரிகிறது, அடுத்தவர் கண்களுக்கு புலப்படவில்லை – இதுவே வித்தியாசம்”

விகேங்குனு பாதிமா கேராவின் அஞ்சல் முகவரி மிகவும் சிறியது: “உள்ளூர் மைதானத்திற்கு அருகே, குஜாமா”. நாகாலாந்து மாநிலத்தின் கோஹிமா மாவட்டத்தில் உள்ள அந்த கிராமத்தில் வசிக்கும் 5000 பேரில் பலருக்கும் இது புரியும்! அந்த கிராமத்தில் இவர் ஊனமுற்றவர்களின் உரிமைக்காக போராடுபவர் என்று நன்றாக தெரியும். ஆனால் இந்தியாவின் மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கு இவருடைய வாழ்க்கை கதை தெரியாது!

42 வயதான விகேங்குனு அவர் பெற்றோர்களான ஹோசால், ஹோவிநெல் கேராவின் பத்து குழந்தைகளில் ஒருவர். பதினெட்டு மாதங்களே ஆன போது போலியோ நோயால் தாக்கப்பட்டார். இதனால் வளைந்த கால்களும், நடப்பதற்கு இயலாமையும் ஆயிற்று. தன் குடும்பத்தின் மகத்தான ஆதரவினால் உயர்நிலை பள்ளி கல்வியை குஜாமா கிராமத்தில் 1998ம் ஆண்டு முடித்தார். ஆனால் ஜகாமா என்ற ஊரில் இருந்த செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு பேருந்தில் செல்ல வேண்டி இருந்ததால் கல்லூரி படிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும், பட்டப் படிப்பு முடிப்பதற்கு முன்னமேயே ஜகாமா நகரிலேயே தன்னுடைய உறவினர்களுடன் தங்கி அந்த கல்லூரியிலேயே  உதவி நூலகராக பணி புரிய தொடங்கிவிட்டார். 

2007 ம் ஆண்டு விகேங்குனுவின் தந்தை பக்கவாதத்தால் காலமானார். இருப்பினும் விகேங்குனு தன் பணியில் தொடர்ந்து முதுநிலை பட்டதையும் இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைகழகம் மூலம் பெற்றார்.2014ம் ஆண்டு தாயாருடன் இருக்க தன் வேலையை ராஜினாமா செய்தார். அவர் குடும்பத்தினர் இந்த முடிவை ஆதரித்தாலும், சமூகத்தில் உள்ள பலர் இவரை தூற்றினார்கள். “ஊனமுற்றவர்களுக்கு வேலை கிடைப்பதே கடினம். கிடைத்த வேலையை உதறி விட்டால், புது வேலை எவ்வாறு கிடைக்கும்?” என பயமுறுத்தினார்கள். இந்த அச்சுறுத்தல் இவரின் மன உறுதியை மேலும் பலப் படுத்தியது!
 
“2014ம் ஆண்டு, நான் என்னுடைய ஊனத்தை ஏற்றுக்கொண்டது என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது”, என்று இவர் கூறுகிறார். குஜாமா நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். M.A படிப்பு முடிந்தபின் வெறும் பொழுதுபோக்குக்காக தொடங்கிய தையல் வகுப்புகள் இவருடைய வாழ்வாதாரமான தொழிலாகவே உருவெடுத்தது. இத்துடன் கைத்தொழில் கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். மின்சக்தியால் இயங்கும் தையல் இயந்திரங்களை பயன் படுத்த தொடங்கியபின், இவரின் தையல் தொழில் நன்கு விரிவடைந்தது. 2018ம் ஆண்டு டிமாபூர் நகரில் Prodigals Home Rehabilitation Centre எனப்படும் தேவைப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணி செய்ய சென்றார். இருப்பினும் குஜாமா நகரில் தான் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை விடவில்லை. மீண்டும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே வீட்டுக்கு திரும்பினார்.
 
விகேங்குனு மாநிலத்தின் 2020-21 ம் ஆண்டின்  புகழ் பெற்ற “MykiFest Award” என்னும் விருதினை தன்னுடைய கலை நுட்பம் மிக்க கைத்தொழிலுக்கும்  மற்றும் உன்னத சமூகப் பணிகளுக்காகவும்  வென்றார். 2014ம் ஆண்டு ஊனமுற்றோர்களின் உரிமைக்கு குரல் கொடுத்து பற்பல மேலாண்மை மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் உரையாற்றி பலருக்கு உதவினார். “மற்றவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க யுக்திகளை செய்து கொடுத்தால், என்னுடைய ஊனத்தால் எனக்கு ஏற்படும் ஏமாற்றங்களையும், மனக்குமறல்களையும் சமாளிக்க முடிகிறது” என்று கூறுகிறார். 2018 முதல் இவர் நாகாலாந்து மாநிலத்தின் ஊனமுற்றோர்களின் சங்கத்தின் பொருளாளராக செயல் புரிகிறார்.
 
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தோட்டத்தில் பற்பல காய்கிறிகளை பயிர் செய்கிறார். பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், பூசணிக்காய், மிளகாய், வெள்ளரிக்காய் போன்ற பல காய்கறிகளை தன் தோட்டத்தில் தானே பயிரிடுகிறார். மேலும், தன் குடும்ப வழக்கத்திற்கு ஒப்ப, குளிர்கால இரவுகளில்,  வெப்பமான நெருப்பை சுற்றி குடும்பத்தினருடன் உட்கார்ந்து சிரித்து, அளவளாவுவது என்பது இவருக்கு மிகவும் பிடித்தது!

புகைப்படங்கள்:

விக்கி ராய்