Icon to view photos in full screen

“நாம் எதை இழந்தோம் என்பதை பற்றியே வருத்தப் படாமல், நம்மிடம் என்ன உள்ளது என்று நினைக்க வேண்டும்”.

அது 2000 வருடம். 17 வயது இளைஞனான வள்ளிநாயகம் கோடை விடுமுறைக்காக தன்னுடைய கிராமமான வீர நாராயண மங்கலத்திற்கு சென்றிருந்தார். அவர் தந்தை நில உரிமையாளர் நிலத்தில் உழவு தொழில் செய்து கொண்டிருந்தார். அந்த உரிமையாளர் இளநீர் வேண்டும் என கேட்கவே வள்ளிநாயகம் ஒரு தென்னை மரம் மேலே ஏற தொடங்கினார். ஆனால் கால் தடுக்கி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். அதற்கு பிறகு வாழ்க்கையே தடம் மாறி போய் விட்டது.

தினக்கூலிக்கு வேலை செய்யும் அவர் தந்தை பகவனார் பண வசதி இல்லாததால் அருகில் இருக்கும் ஒரு சிறிய மருத்துவ மனைக்கே அழைத்து செல்ல முடிந்தது. அங்கே மிகக் குறைந்த அளவு சிகிச்சையே பெற முடிந்தது. படுத்துக் கொண்டே இருந்தால் உடம்பில் வரும் புண்களை எப்படி தவிர்க்க வேண்டும், paraplegia என்னும் உடலின் கீழ் பாகம் பக்கவாதம் வந்ததால், சிறுநீரக தொற்று வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும் என்பது போன்ற அடிப்படை மருத்துவ பரிந்துரைகள் கூட கொடுக்கப்படவில்லை. 2003ம் வருடம் அவரின் உடலில் ஆறு இன்ச் ஆழமான புண் வந்ததால் சென்னையில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை மூலம் 90 தையல்கள் போடப் பட்டன.

அந்த சோதனை மிக்க காலகட்டங்களில், அவரின் தந்தையும், சகோதரர்களுமே அவருக்கு உறுதுணையாக இருந்தனர். தன் குடும்பத்திற்கு சொந்தமான சிறிய பெட்டிக் கடையில் தண்ணீர் நிரப்பப்பட்ட தலையணையின் மேல் உட்கார்ந்து தன் தாய் கிருஷ்ணம்மாள் செய்த வடைகளை விற்பார். அப்போது அவர் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே இருந்தது. 2005ம் ஆண்டு தென்காசி நகரில் ஆயிக்குடி அமர் சேவா சங்கம் Ayikudi Amar Seva Sangam (AASA) என்னும் நிறுவனம் நடத்திய 14 மாத பயிற்சி பாடத்தை அங்கேயே தங்கி தன் அடிப்படை தேவைகளை தானே கவனித்துக் கொள்ள பயின்றார்.
  
இதனால் உந்துவிக்கப் பட்ட வள்ளிநாயகம் துணிகளுக்கு இஸ்திரி போடுதல், தையல் போன்ற பல்வேறு சிறி சிறு தொழில்களை செய்தார். 2006ம் ஆண்டு ஊனமுற்றவர்களுக்கு ஏதுவாக இருக்கும்படி மாற்றப்பட்ட ஒரு ஆடோ ரிக்ஷாவை வாங்கினார். இதில் கையால் இயக்கக் கூடிய பிரேக்கும், கால்களை சப்பளம் இட்டு உட்கார்ந்து வண்டி ஓட்ட வசதியும் இருந்தன. 2009ம் ஆண்டு கைப்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்யும் கடை ஒன்றை தொடங்கினார். பின்னர் ஒரு கணினி வாங்கி, வீர நாராயண மங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களின்  பிரத்யேகமான கணினி மற்றும் வலைத்தள மையமாக திறம்பட செயலாக்கினார்.
 
வள்ளிநாயகம் பல தடவை தன் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு மற்ற ஊர்களுக்கு பயணித்து அங்கே தண்டுவடம் காயத்தால் அவதிப்படுபவர்களின் உபாதைகளை பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார். இதற்காக SIPA (Spinal Injured Persons Association) என்னும் சுய உதவி இயக்கத்தை நடத்தினார். தண்டுவடம் காயங்களுக்கான நாளாக அனுசரிக்கப்படும் செப்டம்பர் ஐந்தாம் நாள் அவரும், மற்றும் சிலரும் பல இடங்களுக்கு சென்று இம்மாதிரி காயங்களை அடைந்தவர்களை சந்தித்து பரிந்துரைகள் வழங்கி ஊக்குவிப்பார்கள். கொரோனா தொற்றின் போது பல பேர்களை மருத்துவ மனைகளுக்கு அழைத்து செல்வது, அவர்களுக்கு தேவையானதை கொண்டு கொடுப்பது போன்ற பல உதவிகளை செய்து சமய சஞ்சீவியாக அவரின் ஆடோ பயன் பட்டது.

வள்ளிநாயகம் audio books மற்றும் YouTube மூலம் தன்னுடைய அறிவுத்திறனை மேம்படுத்தி கொள்கிறார். அவர் தன் வீட்டில் கோழிகளை வளர்த்து, அவைகள் இடும் முட்டைகளை அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கு விற்கிறார். நம்மாழ்வார் என்ற இயற்கை விவசாய நிபுணரின் அறிவுரைகளால் உந்தப் பட்டு, இம்மாதிரி இயற்கையாக வளர்க்கப் படும் உணவுப்பண்டங்களையே உட்கொள்கிறார். “நல்ல உணவே சிறந்த மருந்து” என்பதே இவர் கொள்கை! இவருக்கு மிகவும் பிடித்த உணவு புளித்த சாதமும், வெங்காய ஊறுகாயுமே!

புகைப்படங்கள்:

விக்கி ராய்