Icon to view photos in full screen

"முழு வடகிழக்கு பிராந்தியமும் ஒரே சைகை மொழியில் தொடர்பு கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."

மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள பெத்தானி சொசைட்டியின் வளாகத்திற்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், பசுமை குடிலில் உள்ள காய்கறி தோட்டத்தை அமைதியாக பராமரிக்கும் ஒரு இளம் பெண்ணை நீங்கள் காணலாம். அவளிடம் பேசுவதற்கு நீங்கள் இந்திய சைகை மொழியை (ஐ.எஸ்.எல்) அறிந்திருக்க வேண்டும், அல்லது ரிதாஹுன் க்ரியாமை விளக்குமாறு கேட்க வேண்டும். நாங்கள் இப்படித்தான் செய்ய வேண்டி இருந்தது.
 
சுராய் டோசோ (35) பிறவியிலேயே காது கேளாதவர் அல்ல. நாகாலாந்தின் கோஹிமாவில் வளர்ந்த இவர், தனது பெற்றோர்களான கௌஜாங் மற்றும் கலோலு டோசோ, சகோதரர் ஜலான் மற்றும் நான்கு சகோதரிகள் ஈவா, சோன்சோன், லில்லி மற்றும் குவேசலு ஆகியோருடன் மகிழ்ச்சியான குழந்தை பருவத்தை அனுபவித்தார். அவரது தந்தை காவல்துறையில் இருந்தார் - அவரது கடைசி பதவி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தது. ஒரு நாள், அவளுக்கு ஏழு வயதாக இருந்தபோது, அவள் சாலையில் நடந்து சென்றபோது, மரங்களை வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அவளை நோக்கி, "வேகமாகச் செல்லுங்கள்!" என்று கூச்சலிட்டனர். தனது வழக்கமான வேகத்தில் சென்ற குழந்தையை இந்த திடீர் எச்சரிக்கை குழப்பமடையச் செய்தது. ஒரு மரம் அவள் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவள் உயிர் இழக்கவில்லை, ஆனால் அவள் தனது செவித்திறனை இழந்தாள்.
 
தன் குரலையோ, தன்னைச் சுற்றியுள்ளவர்களின் குரலையோ அவளால் கேட்க முடியாது என்பதால், அவள் பேசுவதை நிறுத்தினாள். அந்த நேரத்தில் கோஹிமாவில் காது கேளாதோர் பள்ளிகள் இல்லாததால் அவர் தனது பிரதான பள்ளியிலேயே படிப்பைத் தொடர்ந்தார். அவள் படிப்பில் சிரமப்பட்டாள், ஆனால் அவளுடைய தந்தை அவளை ஊக்குவித்தார், மேலும் தனது வகுப்புத் தோழர்களுடன் பழக ஊக்குவித்தார். "என் தந்தை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்," என்று அவர் கூறுகிறார்.
 
2003 ஆம் ஆண்டில், சுரோயின் எட்டாம் வகுப்பு தேர்வுகளின் போது, அவரது 51 வயது தந்தை இறந்தார். அவர் இறந்த நாளான பிப்ரவரி 5-ம் தேதி அவருக்கு ஒரு தேர்வு இருந்தது. அவளால் வினாத்தாளை வெற்றிகரமாக எழுத முடியவில்லை, வேறு எந்த பாடத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்தார். தினமும் கல்லறையில் மலர் தூவி அழுதுகொண்டே தன் தந்தையை நினைத்து கதறி அழுதாள். அந்த சோகம் பல மாதங்கள் நீடித்தது. "எனது படிப்பைத் தொடர எனக்கு வலிமை அளிக்க வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்" என்று அவர் நினைவு கூர்ந்தார். அவள் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது. 2004-ம் ஆண்டு எட்டாம் வகுப்புத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார்.
 
அப்போது சுரோயின் சித்தப்பாதான் அவளது வாழ்க்கையின் போக்கை மாற்றும் ஒரு முடிவை எடுத்தார். ஒன்பதாம் வகுப்பில் விடுதியில் சேருவதற்காக திமாபூரில் உள்ள புகழ்பெற்ற காது கேளாதவர்களுக்கான மேல்நிலைப் பள்ளிக்கு அவளை அழைத்துச் சென்றார். ஐ.எஸ்.எல் தெரியாது என்பதால் முதல் வகுப்பு குழந்தைகளுடன் உட்கார வேண்டியிருக்கும் என்று சொன்னபோது சுரோயின் அதிர்ச்சியை கற்பனை செய்து பாருங்கள்! ஆனால் அவர் விரைவாக சைகை மொழி திறன்களைப் பெற்றார் மற்றும் திறந்த பள்ளி முறையான என்.ஐ.ஓ.எஸ் மூலம் 10 ஆம் வகுப்பை ஒரு வருடத்தை கூட தவறவிடாமல் முடிக்க முடிந்தது.
 
பல்வேறு குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கான பெத்தானியாவின் ஜோதி ஸ்ரோத் என்ற எல்லோரையும் உள்ளடக்கிய பள்ளியில் (Sroat Inclusive School) படிக்க ஷில்லாங்கிற்குச் சென்றபோது விடுதி வாழ்க்கை தொடர்ந்தது. திமாப்பூரில் அவர் கற்றுக்கொண்ட சைகை மொழி மேகாலயாவில் கற்பிக்கப்பட்ட ஐ.எஸ்.எல்லில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்ததால் தகவல்தொடர்பில் சில ஆரம்ப சிக்கல்களை அவர் அனுபவித்தார், ஆனால் அவர் விரைவாக என்.ஐ.ஓ.எஸ் (NIOS) மூலம் 12 ஆம் வகுப்பை முடித்தார்.
 
சுரோய் ஷில்லாங்கில் உள்ள புனித அந்தோணியார் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இது வேறு காது கேளாத மாணவர்கள் இல்லாத ஒரு பிரதான கல்வி நிறுவனம் என்பதால், முதலில் அவருக்கு உகந்த இடம் இல்லை என்று நினைத்தார். ஆனால் ஜோதி ஸ்ரோட்டிடமிருந்து குறைந்த பார்வை கொண்ட ஒரு சிறுவனும் இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவர்கள் ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்பார்கள், அவர் குறிப்புகளுடன் அவளுக்கு உதவுவார்; அவள் பாடங்களைப் புரிந்துகொள்வதை உறுதி செய்வதற்காக ஒரு ஆசிரியரும் அவள் மீது சிறப்பு கவனம் செலுத்தினார்.
 
படிக்கும் போதே பெத்தானியாவில் தங்கி வேலை பார்த்து வந்த அவர், தனது சகாக்களுடன் மெல்ல மெல்ல நட்பை ஏற்படுத்திக் கொண்டார். "நான் இப்போது பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டேன்," என்று அவர் எங்களிடம் கூறுகிறார். "பெத்தானியாவில் அவர்கள் அனைவரையும் சமமாக நடத்துகிறார்கள். காது கேளாதவர்களுக்கும் காது கேளாதவர்களுக்கும் இடையே சமத்துவம் உள்ளது. இங்கு பணிபுரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்."  சுரோய் ஒரு தேனீயைப் போலவே ஓய்வில்லாமல் உழைக்கிறார் - தோட்டத்தைப் பராமரிப்பது மற்றும் எலும்பியல் செயற்கை காலணிகள் தயாரித்தல், தையல், அடுதல் (baking ) (அவர் ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில் உணவு சமைத்து பரிமாறுதல் - catering பயிற்சி பெற்றுள்ளார்.) கைவினை காகிதத்திலிருந்து வாழ்த்து அட்டைகள் மற்றும் பிற பொருட்களைத் தயாரிப்பது மற்றும் நிச்சயமாக ஐ.எஸ்.எல் கற்பிப்பதில் ஈடுபட்டுள்ளார். ஒரு வருட கம்ப்யூட்டர் படிப்பையும் முடித்துள்ளார். படிப்பது, பயணம் செய்வது, கால்பந்து மற்றும் கிரிக்கெட் பார்ப்பது இவரது பொழுதுபோக்குகள்.
 
சுரோய் உலகத்திற்கு சில எளிய ஆனால் ஆழமான அர்த்தம் உள்ள வார்த்தைகளைக் சொல்கிறார்: "ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். ஒருவருக்கொருவர் உதவுங்கள். சண்டை போடாதீர்கள். அனைவரும் ஒரே சைகை மொழியில் தொடர்பு கொள்ள வேண்டும். கற்றுக்கொள்வது மிகவும் எளிதானது, அது நம் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும்."

புகைப்படங்கள்:

விக்கி ராய்