Icon to view photos in full screen

"இந்த பைத்தியக்கார உலகம் உன்னை பற்றி எடுக்கும் முடிவுகளை லக்ஷியம் செய்யாதே - உன் வாழ்க்கை பாதையை நீயே நிர்ணயித்துக்கொள்"

ஆந்திர பிரதேஷத்தில் உள்ள குண்டூரை சேர்ந்த 49 வயதான ஸ்ரீதர் யர்ரம்செட்டி தன் உயர் நிலை பள்ளி படிப்பை 1988ம் ஆண்டு முடித்தார். அதன் பின்பு, மருத்துவ படிப்பிற்கு அஸ்திவாரமாக இருக்க இடைநிலை படிப்பில் உயிரியல் துறையில் சேர ஆசைப் பட்டார். ஆனால் அவரை சுற்றி உள்ளவர்கள் எல்லாம் "நீ ஊனமுற்றவன் ஆகையால் மருத்துவராக ஆக முடியவே முடியாது" என தடை செய்தனர். அதனால் நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் தூரக் கல்வி மூலம் B.Com பட்டத்திற்கு சேர்ந்தார். வணிகத் துறையிலேயே முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தோடு, நடமாடும் சிற்றுண்டி வண்டி ஒன்று துவங்க வங்கிகளிடம் கடன் பெற விண்ணப்பித்தார். ஆனால், "நீங்கள் ஊனமுற்றவர் ஆதலால் இதெல்லாம் முடியாது." என்று கூறி கடன் தர மறுத்துவிட்டனர்.

இம்மாதிரி தன் திறமைகளையும், தன்னால் என்ன முடியும் என்பதை குறைத்தே மதிக்கும் பலரின் விமர்சங்களால் வெறுப்பு அடைந்து யார் தயவும் இல்லாமல் தானே தன் இலக்குகளை நிறைவேற்றி காட்ட வேண்டும் என்று ஆர்வத்துடன் செயல் பட்டார். சிலர் இவரை "தலை கனம் மிக்கவர் " என்று ஏசினார்கள். மற்றவர் என்ன கூறினாலும் இவர் லக்ஷியம் செய்யவே இல்லை. "மற்றவர் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி நான் ஏன் கவலை பட வேண்டும்? என்னை பற்றி எனக்கே தெரியும்!" என்று தன்னமிக்கையுடன் கூறுகிறார். "என் நெருங்கிய நண்பர்கள் கூட நான் திமிர் பிடித்தவன் என்று கூறுகிறார்கள்." ஆனால் இவர் தன்னுடைய சீரமைக்கப் பட்ட காரில் குண்டூரில் இருந்து கோவைக்கு, 270 கிலோமீட்டர் தூரத்தை ஒரே நாளில் ஒட்டி செல்கிறார் என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். "விடிகாலையில் குண்டூரில் இருந்து கிளம்பி, நடு இரவில் கோவை போய் சேர்ந்து விடுவேன்." என்று சர்வ சாதாரணமாக கூறுகிறார்.

ஸ்ரீதரின் தந்தை சத்தியநாராயணா குண்டூரில் வெங்காயம் விற்பனை செய்யும் விநியோகஸ்தர். தாய் லக்ஷ்மி துளசி இல்லத்தரசி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். அதில் ஸ்ரீதர் இரண்டாவதாக பிறந்தார். மூன்று வயதான போது இளம்பிள்ளை வாதத்தால் (polio) பாதிக்கப் பட்டார். இதனால் இரண்டு கால்களும் செயல் இழந்தன. ஊன்றுகோல்களை பயன் படுத்த தொடங்கினார். பலரும், இவரை "நீ முன் பிறவியில் செய்த பாவத்தின் பயனே இப்பிறவியில் இம்மாதிரி கஷ்டப் படுகிறாய்!" என்று ஏசினார்கள். இது இவரை மிகவும் கோவமுற செய்தது. ஆனால் சற்றும் ஊக்கம் குறையாமல், தன் தாயின் உதவியுடன் ஐந்தாம் வகுப்பு வரை வீட்டில் படித்தார். ஆறாம் வகுப்பு முதல் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்க சேர்ந்தார். இவரின் தந்தை அல்லது தாத்தா இவரை சைக்கிளில் தினமும் பள்ளிக்கு அழைத்து செல்வார்கள்.

1993ம் ஆண்டு தன் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது முதல் ஸ்ரீதர் குடும்ப தொழிலை எடுத்து நடத்த ஆரம்பித்தார். தன் ஆருயிர் நண்பன் சிவாவின் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள வெங்காய விற்பனையாளர்களை சந்தித்து, சந்தைகளுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அறிந்து கொண்டு சந்தை நிலவரங்களையும், விலைகளை நிர்ணயம் செய்வதை பற்றியும் நன்கு கற்று அறிந்தார். விலை எவ்வாறு மாறுகிறது என்று மிக நுட்பமாக கண்டறிந்தார். இன்று குண்டூரில் இவர் ஒரு தலை சிறந்த வெங்காய வியாபாரி.

இதெல்லாம் சாதிக்கும்போது, தான் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு யாருடைய உதவியும் இல்லாமல் செல்ல யுக்திகளையும் ஆராய்ந்து வந்தார். டில்லியில் உள்ள Indian Spinal Injuries Centre (முதுகு தண்டு காயங்களுக்கான மையம்) நிறுவனத்திலிருந்து active wheelchair என்னும் ஒரு சக்கர வண்டியை வாங்கினார். இதனால் நகருவதற்கு மிகவும் ஏதுவாக இருந்தது. மேலும், ஒரு காரை வாங்கி, அதை தன்னியக்க பரிமாற்ற (automatic transmission) வசதி உள்ளதாக, பூனாவில் உள்ள Automate India என்ற நிறுவனம் மூலம் மாற்றி அமைத்தார். ஊனமுற்றோர்களின் பயனுக்காக இம்மாதிரி செயற்பாட்டு கருவிகள் குறைந்த விலையில் விற்கப்பட்டு அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் செல்லவும், வாழ்க்கையில் மற்றவர் தயவில் வாழாது இருக்கவும் மிகவும் அவசியம் என்று அவர் திடமாக நம்புகிறார். தன்னைப் போல மற்ற ஊனமுற்றோர்களும் இவைகளை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார்.

இவருடைய மூத்த சகோதரியும், இளைய சகோதரரும், திருமணம் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஆனால் இவரை பொறுத்தவரையில், திருமணம் புரிந்துகொள்ள யாரும் உதவ முன்வரவில்லை. இவர் நண்பர் சாந்தி முகநூலில் பிரத்யேகமாக ஊனமுற்றோர்கள் சமூகத்திற்காக உள்ள குழுமத்தில் முயற்சி செய்ய பரிந்துரைத்தார். சாந்தி இவரை தனலட்சுமி என்ற பெண்ணுடன் அறிமுகம் செய்து வைத்தார். தனலட்சுமியும் போலியோவால் பாதிக்கப் பட்டு ஒரு கால் விளங்காமல் இருந்தார். முதுநிலை கல்வி முடித்து, வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தார். இவ்விருவரும் கண்டவுடனேயே ஒருவருக்கொருவர் பிடித்து விட்டது. 2013ம் ஆண்டு திருமணம் புரிந்து கொண்டனர்.

ஸ்ரீதர் தனலக்ஷ்மியிடம் சொன்னார்: "நமது வாழ்க்கையில் பாதிக்கு மேல் கடந்து விட்டது. மீதி இருக்கும் நாட்கள் நாம் இருவரும் சேர்ந்தே இருப்போம். அதாவது, திருமணத்திற்கு பிறகு, தனலட்சுமி வேலைக்கு சென்றால், பணம் அதிகமாக வந்தாலும், சேர்ந்து இருக்கும் நேரம் குறைந்து விடும்." என கூறினார். இது தனலக்ஷ்மிக்கும் ஏற்புடையதாக இருந்தது. தற்போது அவர்களுக்கு எட்டு வயதான ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அந்த குழந்தைக்கு 'மௌனங்யா' என்று பெயர். இதன் பொருள் "மௌனத்தில் உணரும் மெய் ஞானம்" என விளக்கினார்.

ஸ்ரீதருக்கென்றே பிரத்யேகமாக ஒரு நண்பர் குழாம் உள்ளது. அவர்கள் எல்லோரும், வேடிக்கை களியாட்டங்களில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் நட்புடன் சாடிக் கொள்வார்கள். அவர்கள் வேடிக்கையாக ஸ்ரீதரிடம் "நீ ரொம்ப தலை கனம் உள்ளவன். உன் திருமணம் மிக நாட்கள் தாக்கு பிடிக்காது! " என்று கூறி வந்தார்கள். ஆனால் ஸ்ரீதரோவெனில், "அவர்கள் பலரின் திருமணங்களில் பிரச்சனை வந்தபோது நான் குறுக்கிட்டு அவைகளை சரி செய்துள்ளேன். நான் அவர்களின் உதவியை நாடும் தினத்தை அவர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அந்த வாய்ப்பை நான் அவர்களுக்கு அளிக்க வில்லை!" என்று வேடிக்கையாக கூறுகிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்