Icon to view photos in full screen

“உன்னால் என்ன முடியுமோ தள்ளிப் போடாமல் உடனே செய்து முடி! தேக்க நிலையை போல மோசமானது வேறு ஒன்றும் இல்லை”

ஒவ்வொரு நாளும் காலை எழுந்து கொள்ளும் போதும் தன்னுடைய உடலில் எந்த அங்கத்தை அசைக்க முடியும், எவ்வளவு அசைக்க முடியும், எந்த அங்கம் செயல் படும் என்பது எல்லாம் 39 வயதான சௌமிதாவிற்கு தெரியாது! கல்கத்தாவிலிருந்து வரும் சௌமிதா கடந்த பதினொரு வருடங்களாக இந்த பரிதாபமான நிலையிலேயே வாழ்ந்து வருகிறார். ஒவ்வொரு மருத்துவரும், இதற்கு ஒவ்வொரு பெயர் இட்டு அழைத்து கொண்டிருந்தனர். கடைசியாக வழங்கிய பெயர் ‘autoimmune disorder’. என்ன பெயர் இருந்தால் என்ன? இவரின் உபாதைகளுக்கு தீர்வு மட்டும் காணவில்லை. , உபாதைகளை பொருட்படுத்தாமல் வாழ்க்கையில் எப்படி முன்னேறலாம் என்று நேர்மறை எண்ணங்களுடன் சிந்தித்து செயலாற்றுகிறார். “ஒவ்வொரு நாள் இறுதியிலும் ‘இன்று நான் என்னால் முடிந்ததை நூறு சதவிகிதம் உழைப்பை கொடுத்து இருக்கிறேனா என்று எண்ணிப் பார்ப்பேன். இந்த கேள்விக்கு ‘சரி’ என்ற பதில் என் மனசாட்சி சொன்னால், நான் குழந்தை போல நிம்மதியாக உறங்கி விடுவேன்” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

28 வயதில் முதல் முதலாக இந்த வலி தலை தூக்கியது. அது வரை வளர்ச்சி திட்டங்கள் வகுக்கும் துறையில் இவர் பணி புரிந்து வந்தார். இதே துறையில் முதுகலை பட்டம் பெற நெதர்லாண்ட்ஸ் நாட்டுக்கு செல்லவும் திட்டமிட்டு இருந்தார். பத்திரிகையாளராக துவங்கி மெது மெதுவே வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சமூக நலன் துறைகளில் ஆய்வை மேற்கொண்டார். UNICEF நிறுவனத்தில் தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, கிராமங்களில் சுகாதார மேம்பாட்டுக்கான பணிகளை மேற்கொண்டார். 14 மாநிலங்களில் செவ்வனே சேவை புரிந்தார். ஊதியம் குறைவாக இருப்பினும், பற்பல சமூகத்தினருடன் நேரே தொடர்பு கொண்டு அவர்களுடன் பணி புரியும் வாய்ப்பு கிட்டியதற்கு அவர் மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.

 ஆனால் 32 வயதானபோது வலி அளவு கடந்து பொறுக்க முடியாத நிலைக்கு சென்றது. “இதனால் வருத்தப்பட கூட எனக்கு நேரம் இருக்கவில்லை. தாள முடியாத வலியினால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. என் வேலையை ராஜினாமா செய்து, படுக்கையிலேயே படுத்து முடங்கிக் கிடந்தேன். சில் சமயம் என் விரல்களை கூட அசைக்க முடியாமல் இருந்தது! வாழ்க்கையை பூரணமாக, மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக, எப்படி வாழ்வது என்ற நினைவு ஒன்றே என்னை வாட்டி எடுத்தது.” என்று கூறுகிறார். ஊனத்தால் ஏற்படும் உடல் உபாதை, மன உளைச்சல் போன்ற கஷ்டங்களை கடக்க மெது மெதுவே பழகிக் கொண்டார். புதுப்புது யுக்திகளை நன்கு சிந்தித்து நடை முறைப் படுத்தினார். பலருக்கு அறுபது வயதில் வரும் ஞானோதயம் இவருக்கு சிறு வயதிலேயே வந்தது!

இத்தனை கஷ்டமான சூழ்நிலையிலும், இவர் நகைச்சுவையுடன் கூறுகிறார்: “என்னுடைய கெட்ட கர்மா காரணமாக இந்த ஊனம் எனக்கு கடவுளால் அளிக்கப் பட்ட தண்டனை என்று சிலர் கூறினார்கள். எனக்கு இறைவன் இந்த ஊனத்தை சமாளிக்க சிறந்த யுக்திகளை கொடுத்திருக்கிறானே. அப்படி இருக்க இந்த ஊனத்தை இறைவன் அளித்த ‘தண்டனை’ என்று சொல்வது?” இவரின் குடும்பம் இவருக்கு அளித்த ஆதரவும் இவரின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம். இவர் மனம் சோர்வுற்று இருக்கும்போதெல்லாம் குடும்பத்தினரும், நண்பர்களும் பாசத்தை பொழிந்து, ஆதரவு அளித்து இவரை உற்சாகப் படுத்தி உள்ளனர். ஆண்டவன் அனுப்பிய தேவதை போல முக்கியமான நேரங்களில் சிலர் ‘திடீர்’ என எங்கிருந்தோ வந்து, உதவி புரிந்து, ஓர் நன்றி வார்த்தைக்கு கூட நிற்காமல் மாயமாய் மறைந்தும் இருக்கிறார்கள். 2019ம் ஆண்டு இவரின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும்போது, முன் பின் தெரியாதவர்கள் எல்லாம் உதவி புரிந்தார்கள்.  

 தன் ஊனத்தினால் சௌமிதா சில சமயங்களில் மன உளைச்சல் அடைகிறார். இரண்டரை வயதிலேயே பரத நாட்டியத்தில் பயிற்சி பெற்று, நாட்டியத்தின் மேல் இருந்த ஆர்வத்தினால் “ballroom dance” எனப்படும் மேற்கத்திய நடனத்திலும் தேர்ச்சி பெற்றார். ஆனால் இப்போது இம்மாதிரி நடனங்களை எல்லாம் செய்ய முடிய வில்லை! கோபம் வந்தால் கதவை ஓங்கி அடித்து அறையிலிருந்து வெளியேறவும் முடியவில்லை! சுவையான உணவை ரசித்து உண்ண பிடித்தாலும், உடல்நிலை காரணமாக, எதை உண்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. மிக திறமையாக பூண்டு அரைக்க தெரிந்தாலும், தற்போது அவர் விரல்கள் ஒத்துழைக்க மறுக்கின்றன. தன் தொடுதிரை மடிக்கணினி (touch screen laptop) மூலம் எழுதுகிறார். இந்த கணினியும், smartphone ம்தான்  இவர் வாழ்வின் அச்சாணி. இவை இல்லாமல் இவருக்கு வாழ்க்கையே இல்லை.
 
எல்லோரிடமும் இத்துணை அன்பும், ஆதரவும், உதவியும் பெற்றிருக்கும்போது தன்னால் இயன்ற வரை சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இவருக்கு உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை தியான முறைகளை (meditation ) செய்ய இணைய தளம் வழியாக கற்று தருகிறார். 34 வயதிலேயே, தன் தலை முடியை கத்தரித்து, புற்று நோயால் பாதிக்கப் பட்டர்வர்களுக்கு தானமாக அளித்தார். முடி வளர வளர, மீண்டும் மீண்டும் அதை கத்தரித்து வழங்கிக் கொண்டே இருக்கிறார்! காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14 ம் தேதி  இவரது பிறந்து நாளும் கூட. அன்று யார் வேண்டுமாலும் தங்கள் பிரச்சனைகளை பற்றி வெளிப் படுத்தி அதை பொறுமையாக செவி சாய்க்கவும், ஆறுதல் அளிக்கவும் தான் தயாராக உள்ளதாக சமூக வலை தளங்களில் அறிவித்தார்.  
மேலும் இவர் 60 வயதான தன் தாய் அமிதா ராய் சௌத்ரி பாசுவுடன் Zyenika என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். ஊனமுற்றோருக்காக பிரத்யேகமாக ஆடைகள் வடிவமைப்பதே இந்த நிறுவனத்தின் வணிகம். ஊனமுற்றோர்களின் உடலமைப்பு வெவ்வேறு மாதிரி இருக்கும். ஏன் அவரவர் உடலமைப்புக்கு ஏற்ற பிரத்யேகமான ஆடைகளை வடிவமைத்து தைத்து கொடுக்க முடியாது? கைகளை பயன் படுத்த முடியாதவர்களுக்காக அவர்கள் தேவைக்கு ஏற்ப ஏன் ஆடைகளை உற்பத்தி செய்யக் கூடாது? தொடு உணர்ச்சியில் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஏற்றார்  போல படிக அமைப்பு உள்ள துணிகளை ஏன் வடிவமைக்க கூடாது? இம்மாதிரி நூதமான யோசனைகளை செய்து இந்த கேள்விகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் ஆடைகளை Zyenika மூலம் தயாரித்தார்.. “இவ்வளவு முக்கியமான ஒன்றை ஏன் இதுவரை யாருமே செய்ய முயற்சிக்கவில்லை?” என்று இவர் வியக்கிறார்.

Zyenika ஒரு வணிக நிறுவனமாக இருந்தாலும், அதன் குறிக்கோள் ஊனமுற்றோர்களின் நன்மைக்காக என்னும் புரிதலுடனும், அவர்கள் படும் இன்னல்கள் மீது அனுதாபப் பட்டும் செயல் படுவதே. தனக்கு கிடைத்த அன்பையும் ஆதரவையும் நன்றியுடன் இந்த சமுதாயத்திற்கு திரும்பி தர வேண்டும் என்ற உன்னதமான ஒரு பெண்மணியின் நல்ல உள்ளமே இதற்கு மூல காரணம்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்