Icon to view photos in full screen

“எனக்கு பள்ளியில் நிறைய நண்பர்கள் உள்ளனர். எனக்கு வங்க மொழியில் புத்தகங்கள் படிக்க மிகவும் பிடிக்கும்”

11 வயதான சோம்நாத் மோண்டல் துர்கா பூஜை விடுமுறைக்காக வீட்டுக்கு வந்துள்ளார். இவருடைய பெற்றோர்கள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் தெற்கு 24 பர்கானாஸ் தொகுதியில் உள்ள ஜார்கலி கிராமத்தில் வசிக்கிறார்கள். அவர் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்துவது, இனிப்பு பண்டங்களை ரசித்து உண்பது, நண்பர்களுடன் விளையாடுவது, அவர்களுடன் சேர்ந்து அடுத்த வீட்டிற்கு சென்று தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்ப்பது என்று உல்லாசமாக பொழுதை கழிக்கிறார் சோம்நாத். ஆனால் இதெல்லாம் ஒரு சில நாட்களுக்கே! சோம்நாத் நூறு கி.மீ தூரத்தில் உள்ள பால்லி என்னும் கிராமத்தில் தன்னுடைய உறவினருடன் வசித்து வருகிறார். அங்கே பாலி புற்பபார உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருக்கிறார். விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய பிறகு பரிட்ஷைக்கு படிக்க வேண்டும்!
 
சோம்நாத், அவருடைய பெற்றோர்களான கௌரஹரி, பண்டிதா தம்பதிகளுக்கு ஒரே குழந்தை. பிறக்கும்போதே இடது கால் சிதைவுற்று பிறந்தார். இதனால் மற்றவர்களை போல இயல்பாக நடக்க முடியவில்லை. அவருக்கு ஒன்றரை வருடங்கள் ஆனபோது, அவர் பெற்றோர்கள் கல்கத்தா நகரில் உள்ள சில மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையால் பயன் இருக்காது என்று கை விரித்து விட்டனர். இதனால் அவர் தந்தை நம்பிக்கை இழக்கவில்லை. மாறாக, அடுத்து என்ன செய்வது என்பதில் மன உறுதியுடன் முயன்றார். உழவுத் தொழில் மற்றும் அவ்வப்போது மீன் பிடிப்பது மட்டுமே கௌரஹரியின் வாழ்வாதாரம். சிறு வயதில் என்பதால் தனக்கு கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கவில்லை தன் மகனை நன்றாக படிக்க வைத்து, யாரையும் சார்ந்து இருக்காமல் வாழ கற்று கொடுக்க வேண்டும் என்பதில் மன உறுதியுடன் செயல்பட்டார்.
 
சோம்நாத்திற்கு மூன்று வயது ஆனவுடன் கௌரஹரி சோம்நாத்தை பால்லி கிராமத்தில் உள்ள தன் சகோதரர் மற்றும் பெற்றோர்களிடம் அடுப்பி வைத்தார். (தையல் தொழில் புரியும் அந்த சகோதரர் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை). இதற்கு இரு காரணங்கள்: முதலாவது பால்லி கிராமத்தில், வீட்டிற்கு மிக அருகாமையிலேயே சிறந்த பள்ளி உள்ளது. இரண்டாவதாக, பால்லி கிராமத்தின் சாலைகள் ஜார்கலி கிராமத்தை விட செவ்வனே இருந்தது. இதனால், சோம்நாத் யார் உதவியையும் நாடாமல் தானே பயணிக்க ஏதுவாக இருக்கும் என்பது ஒரு முக்கிய காரணம். சோம்நாத்தை அவருடைய பாட்டி சக்கர நாற்காலியில் பள்ளிக்கு அழைத்து செல்கிறார்.
 
“ சோம்நாத் ‘நான் படித்து விட்டு நல்ல வேலைக்கு போகப் போகிறேன்” என்று அடிக்கடி சொல்லுகிறான். ஆனால் அவன் எந்த வேலைக்கு போவான் என்று அவனுக்கு தெரியாது. அவனுக்கு சரியான வழி காட்டவும், எங்கள் குடும்பத்தில் யாரும் கல்வி .கற்றவர்கள் இல்லை. யாராவதுதான் வழி காட்ட வேண்டும்” என்கிறார் கௌரஹரி. யார் வழி காட்டுவார்கள்? ஒரு வேளை சுண்டர்பான் தன்னார்வு தொண்டு நிறுவனம் வழி காட்டுவார்களோ? சமூக மேம்பாடு, கல்வி, மருத்துவம் போன்ற பல துறைகளில் தொண்டு புரிந்து வரும் இந்த நிறுவனம்தான் விக்கி ராயை மோண்டல் குடும்பத்தை சந்திக்க உதவினார்கள்.

சோம்நாத் முதலில் கூச்சமாக இருந்தார். சற்று நேரத்திலேயே நன்றாக உல்லாசமாக, சகஜமாக அளவளாவ தொடங்கினார். பள்ளியில் தன்னை எல்லா விளையாட்டுகளிலும் சேர்த்து கொள்ள நண்பர்கள் பலர் உள்ளார்கள் என்றும், தனக்கு வங்க மொழியில் உள்ள கதை புத்தகங்கள் படிக்க மிகவும் விருப்பம் என்றும் கூறனார். விடுமுறைக்கு தன் பெற்றோர்கள் வீட்டிற்கு செல்லும்போது தன் தாய் சமைக்கும் அசைவ உணவு மிகவும் ரசித்து உண்பதாகவும் கூறினார். இன்னும் குழந்தை மனதுடன் கார் பொம்மைகளுடன் விளையாட விரும்புகிறார்!

அரசாங்கம் ஊனமுற்றோர்களுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாய் மானியம் சோம்னாத்தின் கல்வி செலவுகளில் ஒரு சிறு பங்கே. எவ்வளவு பணக் கஷ்டம் இருந்தாலும் சோம்நாத்தை படிக்க வைப்பதில் ஒரு குறையும் வைப்பதில்லை என்ற மன உறுதியுடன் இருக்கிறார் அவர் தந்தை. “சோம்நாத் ஊனமுற்று இருப்பதால், கல்வி இன்னும் மிக மிக அத்தியாவசியம்! அவன் யாரையும் சார்த்து இருக்காமல் வாழ கல்வி இன்றி அமையாதது” என்று தொலை நோக்குடன் கூறுகிறார் கௌரஹரி.

புகைப்படங்கள்:

விக்கி ராய்