Icon to view photos in full screen

“பிரம்மாண்டமான அளவில் திட்டமிட்டு, விழைந்து மிகப் பெரிய மாற்றங்களை செய்ய விரும்பிகிறோம்”

புகைப்படக்காரர் விக்கி ராய் “சிஷு சரோதி” என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் 37 வயதான சில்சிலா தாஸ் என்பவரை தனியாக புகைப்படம் எடுக்க சென்றார். ஆனால் அது முடியவில்லை! ஏனென்றால் சில்சிலா ஒரு நிமிடம் கூட தன் உயிர் நண்பர்களான சிமி கலிதா (34), ருனு மேதி (35) என்பவர்களை பிரிந்து இருக்க மாட்டார்

சில்சிலா “Bijoyini Network for Women with Disability” என்னும் ஊனமுற்ற மகளிரின் மேம்பாட்டுக்காக உழைக்கும் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர். இரண்டரை வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப் பட்டார். ஒன்பது வயது நிறைந்தபோது எல்லா குழந்தைகளும் செல்லும் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் சக மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சில்சிலாவுடன் சேர அனுமதிக்கவில்லை. ஏனென்றால் சில்சிலாவிடமிருந்து போலியோ நோய் தொற்றிக்கொள்ளும் என்னும் பயமே காரணம்! சமூகத்தில் நிலவும்  இம்மாதிரி மூட நம்பிக்கைகளினாலும், அனைவரும் காட்டும் பாரபட்சத்தினாலும் மனம் தளராமல் , வாழ்க்கையில் வீறு நடை போட்டார்! இதற்கு முக்கிய காரணம் அவர் தந்தை அளித்த ஊக்கமும், துணிச்சலும், தைர்யமுமே. தேநீர் விற்கும் அவரின் ஊக்கமூட்டும் பேச்சுகளையும் “உன் வாழ்க்கையை மேம்படுத்த என்னென்ன வ்யூகங்களை வகுக்கலாம் என்று யோசிப்போம்” என்னும் அடிக்கடி சொல்லும் அவருடைய வார்த்தைகளையும் இன்னமும் சில்சிலா நினவு கூறுகிறார். பத்து வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த சில்சிலா “நான் இப்போது பணி புரிந்து பணம் ஈட்டுவதால் என் தந்தையின் ஆசையை நிறைவேற்றினேன் என்ற திருப்தியுடன் இருக்கிறேன்” என உணர்ச்சி பொங்க கூறுகிறார் சில்சிலா.

சில்சிலாவின் முதல் நண்பர் ருனு அதே நிறுவனத்தில் உதவி ஒருங்கிணைப்பாளராக பணி புரிகிறார். தாயின் கர்ப காலம் முடியும் முன்பே பிறந்தவர். அந்த பிரசவத்தில் அவருடன் பிறந்த இரட்டை குழந்தை பிறந்த உடனேயே இறந்து விட்டது. ருனுவுக்கு “Cerebral Palsy (CP)” என்ற நோய் தாக்கியத்தில் பேச்சும், நகர்வது மற்றும் இயக்கும் சக்தியை இழந்தார். அரசாங்கத்தில் பணி புரியும் அவர் தந்தை தனக்கு இருக்கும் வருமானத்தில், குழந்தைக்கு உடற்பயிற்சி சிகிச்சை (physiotherapy) அளிக்க முயன்றார். சில்சிலாவின் இன்னொரு நண்பரான சிமி ருனுவின் உறவினரே. அவரும் Cerebral Palsy (CP) நோயால் பாதிக்கப்பட்டவர். 2016ம் ஆண்டு இம்மூவரும் சந்தித்தனர். இந்த குழுமம் ஊனமுற்றோர்களுக்கு கல்வி அறிவு ஊட்டவும், அவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்து நிலை நாட்டியும், அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க பற்பல யுக்திகளை கையாண்டும் வந்தது. இணை பிரியா நண்பர்களானார்கள்.
 
“உங்கள் மூவரின் நட்பைப் பற்றி சற்று விரிவாக கூறுங்கள்” என்று கேட்டதற்கு, அவர் பாடவே தொடங்கி விட்டார்! புகழ் பெற்ற “ஷோலே”படத்தில், நினைவிலிருந்து என்றும் நீங்காத “யே தோஸ்தி, ஹம் நஹி தோடேங்கே” என்ற பாட்டை பாடினார். தங்கள் நெருங்கிய நட்பை பற்றி மிக கச்சிதமாக இந்த பாடலின் ஒரே வரியில் விளக்கி விட்டார். முஹம்மத் ரபி, லதா மங்கேஷ்கர் மற்றும் சுனிதி சவுஹான் பாடல்களை இவர் மிகவும் ரசித்து கேட்கிறார். இந்த மூவரும், சேர்ந்தே பாடவும், அளவளாவவும், திரைப்படம் செல்லவும் மிகவும் விரும்புகிறார்கள். அவர்கள் சேர்ந்து புதிய இடங்களுக்கு பயணிக்கவும் விரும்புகிறார்கள். போட்டிகளில் கலந்து கொள்ள பல நகரங்களுக்கு சென்றுள்ளார்கள். சில்சிலாவும் ருனுவும் ஷில்லாங், தேஜ்பூர், பாக்ஸா போன்ற நகரங்களுக்கு சென்றுள்ளர்கள். சிமியும், ருனுவும் டார்ஜீலிங்கில் குளிர் கால முகாம்களுக்கு சென்றுள்ளார்கள். ருனு 2020ம் வருடம் பிப்ரவரி மாதம் தன் முதல் சர்வ தேச பயணத்தை மேற்கொண்டு கொலம்போ நகருக்கு சென்றார். இதில் எட்டு நாடுகளிலிருந்து வந்த அங்கத்தினர் கொண்ட பேரவையில் உரை ஆற்றினத்தை பெருமிதத்துடன் நினைவு கொள்கிறார்.

சில்சிலா அரசியலில் குதித்து, ஊனமுற்றோர்களுக்காக உரிமைகுரல் எழுப்பி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டி, சமூகத்தில் ஒரு மாபெரும் விழிப்புணர்ச்சியையும், மாற்றத்தையும் கொண்டு வர ஆவலுடன் உள்ளார். இந்த மூன்று நண்பர்களும் புன்னகை தவழும் முகங்களுடனும், தங்கள் கனவுகளை தங்கள் ஒளி மிகுந்த கண்களில் வெளிப்படுத்திக் கொண்டும் வாழ்க்கையை ஆவலுடன் கழிக்கிறார்கள்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்