Icon to view photos in full screen

"ஊனமுற்றதற்காக நான் பரிதாபப்பட விரும்பவில்லை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்."

டெல்லியைச் சேர்ந்த 22 வயதான ஷப்னம் கான் இரண்டு ஜென்மங்களின் கொடுமைகளை சகித்துக் கொண்டுள்ளார்! 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அவர் மிகவும் மோசமாக உடல் நடுக்கம் கொண்டிருந்ததால், தன் கைகளில் எதையும் பிடிக்க முடியவில்லை என்பதுடன் தொழுநோய் நோயறிதலுடன் இது தொடங்கியது. அப்போதுதான் அவள் கன்னங்களில் நீண்ட நாட்களாக இருந்த இரண்டு இளஞ்சிவப்பு புள்ளிகள் அர்த்தமுள்ளதாக இருக்கத் தொடங்கின.
 
இந்த நோயால் அவரது இரு கைகளும் சிதைந்தன. இதன் விளைவாக ஏற்பட்ட களங்கம் அவரது பள்ளி வாழ்க்கையை சீர்குலைத்தது, மேலும் அவர் தனக்குள் பின்வாங்கினார், ஒரு சில நண்பர்களிடம் ஆறுதலைக் கண்டார். அக்கம் பக்கத்தினரிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் அவர் கேலிகளையம், ஏசல்களையும் எதிர்கொண்டார். "லூலி ஹை, அப் க்யா ஹோகா இஸ்கா, கவுன் இஸ்ஸே ஷாதி கரேங்கா" போன்ற புண்படுத்தும் கருத்துக்களை அவர்கள் அனுப்புவார்கள். யே குச் நஹி கர் பாயேகி." (அவள் முடமானவள், அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள். அவளால் ஒன்றும் செய்ய முடியாது.) அவளது பெற்றோரின் மெளனம் அவளுக்கு மிகவும் வேதனையும், ஏமாற்றத்தையும் அளித்தது. அவர்கள் அவளைப் பிடித்து கட்டி அணைத்து, "அழாதே, எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்து ஏங்கினாள். ஆனால், ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் உள்ள இந்த நடுத்தரக் குழந்தைக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை.
 
ஆனால் அவளுக்கு கிடைத்தது அவளுடைய ஆசிரியர்களின் ஆதரவு, அவளுடைய நிலைமையிலிருந்து உயர்ந்து, மென்மேலும் சாதனை புரிய அவளைத் தூண்டியது. சிகிச்சை தொடங்குவதற்குள் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, உணர்வை இழந்ததால், அவரது வலது கையில் தீக்காயங்கள் ஏற்பட்டு, ஆள்காட்டி விரலில் சேதம் ஏற்பட்டது. இது அவரது 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு முந்தைய நாள். மிகவும் சிரமப்பட்டு, ஆள்காட்டி விரலை பயன்படுத்தாமல், தேர்வு எழுதினார். அவரது மருந்துகள் அவரது இரத்த அழுத்தத்தை உயர்த்தும், இதன் விளைவாக அவ்வப்போது கோபத்தால் பொங்கி எழுவார். ஆனால் அவரது நெருங்கிய நண்பர்கள் அவளுடைய நிலைமையை புரிந்து கொண்டு அவளுக்கு ஆதரவு அளித்தனர்.
 
வீட்டு மனை தரகரான அவரது தந்தை இஸ்லாம் கான், பள்ளி முடிந்ததும் படிப்பை கைவிடுமாறு வற்புறுத்தினார், இது அவருக்கு தற்கொலை எண்ணங்களைத் தூண்டியது. கல்லூரியில் நுழைவு அனுமதி கிடைத்தபோது குடும்பத்தாரிடம் சொல்லாமல், வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக நாடகமாடினார். தனது முதலாமாண்டுத் தேர்வுகளுக்கு முன்பு சூடான மேற்பரப்பில் காலடி எடுத்து வைத்தபோது தனது கால் எரிந்ததை அவர் நினைவு கூர்கிறார். ஆனால் அதை பொறுத்துக் கொண்டு கட்டு போட்டுக்கொண்டு கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினார்.
 
குடும்பத்தில் முதல் பட்டதாரியானார் ஷப்னம்! இரண்டாம் வகுப்பில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் பி.ஏ., தேர்ச்சி பெற்ற இவர், தற்போது அரசியல் அறிவியலில் எம்.ஏ., படித்து வருகிறார். "இது மக்களுக்கு ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் இது எனக்கு ஒரு பெரிய சாதனை" என்று அவர் கூறுகிறார்.
 
பள்ளியில் படிக்கும் போதே, அரசு நிறுவனங்களால் இலவசமாக வழங்கப்படும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சில்லறை வணிகத்தில் ஒரு படிப்பை முடித்தார். பட்டப்படிப்பு முடிந்ததும், ஒரு கன்சல்டன்சி நிறுவனத்தில் சிறிது காலம் பணிபுரிந்து, ஆவணங்களை சரிபார்த்தார். பின்னர் அவர் வேலைக்காக பல இடங்களில் விண்ணப்பித்தார், ஆனால் அவரது உடல் நிலை, குறிப்பாக அவரது கைகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக அவர் வேலைக்கு செல்லவில்லை. இந்த நேரத்தில், அவர் ஒரு கணினி படிப்பை முடித்தார். இறுதியாக, அவரது நண்பர் ஒருவர் மூலம், அவருக்கு வாடிக்கையாளர் சேவை நிர்வாகியாக (customer care executive) வேலை கிடைத்தது. இருப்பினும், அவரது தாயார் சரிபான் ஒரு விபத்தில் சிக்கினார், மேலும் அவர் வீட்டை நிர்வகிக்க உதவுவதற்காக வெளியேற வேண்டியிருந்தது.
 
தொழிற்கல்வி படிப்புகளை வழங்கும் மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் சர்தக் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைப் பற்றி ஒரு நண்பர் அவளிடம் கூறினார். இரண்டு மாதங்களுக்கு முன், அவர்களுடன் சேர்ந்த அவர், தற்போது திறன் மேம்பாடு, சில்லரை விற்பனை, தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றை கற்பிக்கும் வகுப்புகளில் பங்கேற்று வருகிறார்.
 
சுதந்திரமாக வாழ்வதற்காக அரசுப் பணித் தேர்வுகளுக்கும் தயாராகி வருகிறார். அவர் உடல் ரீதியாக மிகவும் பலவீனமாக இருப்பதாக அவர்கள் கருதுவதால் அவரது குடும்பத்தினர் இன்னும் மிகவும் ஆதரவாக இல்லை. அவளுடைய மனவலிமையை அவர்கள் கணக்கிடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஷப்னம் கூறுகையில், "நீங்கள் தொடர்ந்து காயமடையும் போது, மக்கள் உங்களை முரட்டுத்தனமாக நினைக்கிறார்கள், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. என்னைத் தவிர வேறு யாரும் எனக்கு உதவப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும்."
 
அவரது சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி, 20 வயதே ஆன அவரது தம்பிக்கு, நல்ல வேலை இருப்பதால், திருமண அழைப்பிதழ்கள் வருகின்றன. "நான் இப்போது திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை; நான் முதலில் என் சொந்த காலில் நிற்க விரும்புகிறேன். ஏனென்றால் நான் இப்போது திருமணம் செய்துகொண்டால், அவர்கள் என்னை மதிக்க மாட்டார்கள். ஊனமுற்ற ஏழைப் பெண்ணாக நான் பரிதாபப்பட விரும்பவில்லை. மக்கள் என்னைப் பார்த்து, 'அவளைப் பாருங்கள், அவளுடைய நிலையைப் பொருட்படுத்தாமல், அவள் என்ன சாதிக்க முடிந்தது என்பதைப் பாருங்கள்' என்று சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்."
 
ஓய்வு நேரத்தில், ஷப்னம் தனது தாயாருக்கு வீட்டு வேலைகளில் உதவுகிறார். அவர் ஓவியங்கள் வரைவது மற்றும் திரைப்படங்களை பார்ப்பது அல்லது தொலைபேசியில் இசையைக் கேட்பது ஆகியவற்றை விரும்புகிறார். கலகலப்பான இசையைக் கேட்கும்போது அவளால் நகராமல் இருக்க முடியாது, ஒரு திருமணத்திலோ அல்லது விருந்திலோ நடனமாடுவதில் வெட்கப்படுவதில்லை.
 
மக்கள் துன்பங்களுக்கு அதிக புரிதலுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். "உங்களால் உதவ முடியாவிட்டால், குறைந்தபட்சம் அவர்களை புண் படுத்த வேண்டாம். மக்கள் ஒரு நல்ல சாலையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள், ஆனால் அதை உருவாக்க எவ்வளவு கடின உழைப்பும் வியர்வையும் செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லை அல்லது கற்பனை செய்வதில்லை. வாழ்க்கையும் அப்படித்தான். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும்."

புகைப்படங்கள்:

விக்கி ராய்