Icon to view photos in full screen

"அனைவருக்கும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) துறைகளில் படிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்"

சௌரப் பிரசாதிர்க்கு சிறு வயதிலிருந்தே glaucoma என்ற கண் உபாதை இருந்தது. இவருக்கு 11 வயது ஆன போது தன் தம்பி ராஜுடன் அவர்களின் ஜார்கண்ட் வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது 20 அடி கீழே விழுந்தார். பெரிய காயம் ஒன்றும் படவில்லை என்றாலும், glaucoma நோயின் தாக்கம் அதிகமாயிற்று. இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே கண் பார்வையை முழுவதும் இழந்தார்.

தற்போது 22 வயதான சௌரப்பின் பெற்றோர்கள் மகேஷ் மற்றும் மோனிகா பிரசாத்.பெற்றோர்களின் மூன்று குழந்தைகளில் இவர் இரண்டாவதாக பிறந்தார். காட்டு பிரதேசமான சத்ரா மாவட்டத்தில் உள்ள தண்டவா என்னும் இடத்தில் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களாக பணி புரிந்து கொண்டிருந்தார்கள். சௌரப் தன் 14 வயதில் முழுவதும் கண் பார்வையை இழந்தவுடன் அந்த ஊரில் உள்ள அரசு பள்ளியில் படிக்க போதிய வசதிகள் இல்லை. அதனால் ராஞ்சியில் உள்ள St Michael’s School என்னும் கண் தெரியாதவர்களுக்காக வசதிகள் உள்ள பள்ளியில் சேர்ந்தார். ராஞ்சி பெரிய நகரமானதால் சற்று கஷ்டப் பட்டு அந்த நகர வாழ்க்கைக்கு பழக்கப் படுத்தி கொண்டார். அவருக்கு Braille தெரியாததால், மழலையர் பள்ளியிலேயே சேர வேண்டி இருந்தது! படிப்பில் மிகுந்த நாட்டம் உள்ள அவருக்கு இது மாபெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. தன்னை வேறொரு பள்ளியில் சேர்க்குமாறு, தன் தந்தைஇடம் மன்றாடி வேண்டிக் கொண்டார். இருப்பினும், St Michael’s பள்ளியில் Braille முறையை நன்கு கற்றறிந்தார்.

அதற்கு பின்னர், டேரா டூனில் உள்ள Model School for Visually Handicapped என்கிற கண் தெரியாதவர்களுக்காக பள்ளியில் எட்டாம் வகுப்பிற்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று நுழைந்தார்."டேரா டூன் நான் பார்த்த இடங்களை விட மாறு பட்டு இருந்தது. குறிப்பாக கணிதம் மிக கடினமாக இருந்ததால், என்னால் இங்கே தொடர முடியுமா என்ற ஐயமும், பயமும் இருந்தது". ஆனால் அவரது விடா முயற்ச்சியால் தினமும் பல மணி நேரங்கள் படித்து, பயிற்சி செய்து கணிதத்தில் நிபுணத்துவம் அடைந்து, வகுப்பில் முதல் மாணவனாக திகழ்ந்தார்.

சௌரப்பிற்கு விஞ்ஞானத்தில் மிகவும் ஈர்ப்பு இருந்தது. 10ம் வகுப்பில் விஞ்ஞானத்தில் முதல் மாணவனாக திகழ்ந்தாலும், மாடல் பள்ளியில் விஞ்ஞானம் படிப்பு இருக்கவில்லை. மனிதநேயம் மற்றும் கலை படிப்பு மட்டுமே இருந்தன. விஞ்ஞானம் படிக்க இருக்கும் கட்டுக்கடங்காத ஆர்வத்தை தன் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க, அவர்களும், அதற்கிணங்கி Delhi Public School பள்ளிக்கூடத்திற்கு விண்ணப்பித்தார். நுழைவு தேர்தலில் வெற்றி பெற்றாலும், வருடத்திற்கு ஒரு லக்ஷம் ரூபாய் கட்டணம் என்பதை அறிந்தவுடன் மனம் ஒடிந்து போனார்கள். வேறு வழி இல்லாமல் பழைய பள்ளிக்கே சென்றார்.

"சரி, இதுதான் நம் தலை எழுத்து" என்று மனம் ஒடிந்துபோனபோது சற்றும் எதிர்பாராமல் டில்லியில் உள்ள National Association for the Blind (NAB), கண் தெரியாதவர்களுக்கான நிறுவனம் இவர் உதவிக்கு வந்து பண உதவி அளித்தார்கள். டில்லியில் உள்ள டாகூர் சர்வதேச பள்ளியில் சேர முடிந்தது. NAB இவருக்கு 40,000 ருபாய் பணமும், போக்குவரத்து மற்றும் தங்குவதற்கான செலவையும் ஏற்று கொண்டு உதவியது. பொதுப் பள்ளியில் படிக்கும் ஒரே கண் தெரியாத மாணவன் என்பது தொடக்கத்தில் சற்று கடினமாக இருப்பினும், வெகு விரைவில் பழக்கப் படுத்திக்க கொண்டு, மிக சிறப்பான மதிப்பெண்களை பெற்றார். இதனால் பள்ளி தர வேண்டிய கட்டணங்களை தள்ளுபடி செய்தது.

அடுத்ததாக இவர் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (Indian Institute of Technology) படிக்க குறி வைத்தார்."IIT என்னுடைய நீண்ட நாள் கனவு. என் வாழ்க்கை லட்சியம் என்றே சொல்லலாம்". என்று கூறுகிறார். கொரோனா தொற்றின் காரணமாக வந்த லாக் டௌனில் ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து Joint Entrance Exam எனப்படும் IIT நுழைவு தேர்வுக்கு படித்தார். இம்முயற்சியில் IIT டில்லியில் பேராசிரியராக இருக்கும் Dr உமா மஹேஸ்வரி, மற்றும் IIT கரக்பூர் முன்னாள் பௌதிக பேராசிரியர் Dr T .K பன்சால் உதவினார்கள். பன்சால் கண் பார்வை மங்கியதால் தன் பதவியிலிருந்து வெகு சீக்கிரமாக ஒய்வு பெற்றவர். இவ்வளவு முயற்சி எடுத்தும், சௌரபிற்கு IITல் இடம் கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஏமாற்றத்தை தள்ளி விட்டு, டில்லியில் உள்ள Indraprastha Institute of Information Technology என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 23 வயதான இவருடைய மூத்த சகோதரர் சுபம் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டு இருக்கிறார்.

சௌரப் படிப்பில் மட்டும் திறம் மிகுந்த புத்தகப்புழு அல்ல! பள்ளியில் சதுரங்கம் கற்று, 2017ம் ஆண்டு Blind Relief Association நடத்திய கண் தெரியாதவர்களுக்காக சதுரங்க போட்டியில் தேசிய அளவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்."இப்போதெல்லாம் நான் சதுரங்கம் விளையாடுவது போட்டிக்காகவோ, வெற்றி பெறுவதற்காகவோ இல்லை. பொழுதுபோக்கிற்காக மட்டுமே!" கல்லூரியின் நாடக குழுவில் பங்கேற்று ஒரு நாடகத்தில் மருத்துவராகவும், மற்றொரு நாடகத்தில் இளவரசியை போலவும் நடித்தார்!

"கண் தெரியாதவர்கள் பெரும்பாலும் STEM எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் துறைகளில் படிக்க விரும்புவதில்லை. ஏனெனில் இவை மிகவும் கடினமான துறைகள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்." என்று இவர் கூறுகிறார். இந்த நிலைமையை மாற்றவே 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் கண் தெரியாதவர்களுக்கும், கண் பார்வை மங்கியவர்களுக்கும் இவர் இலவசமாக இந்த பாடங்களை கற்று கொடுக்கிறார். டில்லியில் உள்ள தன்னார்வு தொண்டு நிறுவனமான பிராத்தம் அறக்கட்டளை 25 மாணவர்களை தேர்ந்தெடுத்தது. இவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும், தன் வகுப்புகளை வீடியோ பதிவு செய்து அனுப்பியும் மாணவர்களுக்கு அறிவு புகட்டுகிறார்.

மென்பொருள் துறையில் பணி புரிவது, கணினிகளை கண் தெரியாதவர்கள் பயன் படுத்த ஏதுவாக செய்வது, எல்லோரையும் ஒருங்கிணைத்து வகுப்பு நடத்துவது போன்ற கனவுகள் இவருக்கு உள்ளன. 2021ம் ஆண்டிற்கான NCPEDP நிறுவனம் வழங்கும் ஜாவேத் அபிடி சிறப்பு ஆதரவு ஊதியம் பெற்றஇவருக்கு இருக்கும் ஊக்கமும் திறமையும் இதை எல்லாம் சாதிக்க இவருக்கு உதவும் என நம்பலாம்!

புகைப்படங்கள்:

விக்கி ராய்