Icon to view photos in full screen

“சக்கர நாற்காலியில் 'கட்டுண்டு இருக்கிறோம்' என்பதை விட மோசமானது நம் மனதில் எதிர்மறை எண்ணங்களால் கட்டுண்டு, வாழ்க்கையில் தேக்க நிலை அடைவது."

ஆந்திர பிரதேஷத்தில் வசிக்கும் சாய் பத்மா குடும்பத்தில் அனைவருமே மருத்துவ துறையில் உள்ளனர். தந்தை B.S.R. மூர்த்தி அறுவை சிகிச்சை மருத்துவர். (காலம் சென்ற) தாய் ஆதி சேஷு குழந்தைப் பேறு மருத்துவராக இருந்தவர். காலம் சென்ற சகோதரர் நரேந்திரா அறுவை சிகிச்சை மருத்துவர். சகோதரி வம்சி பவானி பல் மருத்துவர். வம்சியும், அவர் கணவர் Dr வெங்கட்டும் ஒரு மருத்துவ மனையை நடத்துகின்றனர். அவர்களின் மகன் பிரதா மருத்துவப் படிப்பில் இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இப்படி குடும்பமே மருத்துவ குடும்பம் என்றால் மிகை ஆகாது!

இவ்வளவு மருத்துவர்கள் இருந்தும், இவருக்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இன்னல்களையும், உபாதைகளையும் தடுக்க இயலவில்லை. முதல் தடங்கல் வந்தபோது அதை உணரக்கூட முடியாத குழந்தை பருவம்! விசாகபட்டினத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஜபதி நகரம் என்ற ஊரில் 1972ம் ஆண்டு பிறந்த இவருக்கு மூன்று மாதங்கள் ஆன பின்பு, WHO என்னும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைத்தல்படி, போலியோ என்னும் இளம் பிள்ளை வாதத்திற்கான தடுப்பூசி கொடுக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இவருக்கு 45 நாட்களே ஆனபோது இதே நோயால் கடுமையாக தாக்கப்பட்டார். இதனால் பக்கவாதம் வந்து உடலும், குரல் நாண்களும் செயல் இழந்து போனது. அப்போது இருந்த சிகிச்சை முறைப்படி 52 தடவை மின்சார அதிர்ச்சி கொடுக்கப் பட்டது. இதனால் குரல் மறுபடியும் செயல் பட்டாலும், கைகளை சற்றேதான் அசைக்க முடிந்தது. கால்களோவெனில் முற்றிலும் செயலற்று போனது. 

சிறு வயதிலேயே பல முறை மருத்துவ மனைக்கு சென்று, உடலின் கீழ் பாகத்தில் 17 அறுவை சிகிச்சைகளை சந்தித்துள்ளார். நடக்கும்போது தண்டு தசைகள் சேதம் ஆகி, மேலும் scoliosis என்ற பாதிப்பின் தாக்கமும் அதிகமாகி முதுகெலும்பே கோணலாக ஆகிவிட்டது. இதனால் நுரையீரல் சுருங்கி போனது. 24 வயதானபோது இதற்காக முதுகெலும்பிற்கு 18 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தத்தது. இது சரியாக கிட்டத் தட்ட இரண்டு வருடங்கள் ஆயின. இதனால் மிகவும் மனம் தளர்ந்து போனார். 

பேரிடர்களை, துன்பங்களும் எவருக்கும் சிறந்த பாடங்கள் போதிக்கும்! சாய் பத்மாவின் வாழ்க்கைக்கும் இது சாலப் பொருந்தும்.  இத்துன்பங்களினால் இவர் மிகுந்த தைர்யம், மற்றும் சிறப்பாக மனதில் தோன்றியதை கூச்சம் இன்றி பேசும் திறமைகளை அடைந்தார். இவருடைய வலைப்பதிவு lotusbeats.wordpress.com படித்தால், மற்றவர்கள் பேச கூச்சப் படும் செய்திகளை பற்றி வெளிப்படையாக பேசும் தைர்யம் உள்ள ஒரு பெண்மணியை காணலாம். சக்கர வண்டியில் இருக்கும் ஒரு வயது பெண்ணின் மாத விடாய் பிரச்சனைகள், ஊனமுற்றோர்களின் பாலியல் உரிமைகள் என்பது போன்ற தலைப்புகளில் பல பதிவுகள் செய்துள்ளார். இவர் தன் நண்பரான ப்ராங்யானந் புஸ்ஸியிடம் "நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்டு, அதே மூச்சில், "நீ முடிவு செய்யும் முன் ஆழ்ந்து யோசிக்க வேண்டும்!" என்றும் எதிர்மறை எண்ணங்களையும் முன் மொழிந்தார். பிற்காலத்தில் ப்ராங்யானந் புஸ் 2008ம் ஆண்டு கணவராக ஆகி, அன்பும், பாசமும் பொழிந்து, இவர் வாழ்க்கையை ஒளி மயமாக்கினார். 

மன உறுதியும், திடமான தன்னம்பிக்கையும் உள்ள சாய் பத்மா வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் பவனி வந்தார். கணினி மற்றும் பாரம்பரிய இசை தொகுதிகளில் டிப்ளோமா பட்டம் பெற்றார். ("அட! இது என்ன சம்பந்தமே இல்லாத இரண்டு துறைகள்!" என்று நகைச்சுவையுடன் கூறுகிறார்). பின்னர், வணிகத்துறையில் முது நிலை பட்டமும், சட்டப்படிப்பும், மற்றும் நிதி துறையில் MBA பட்டமும் பெற்றார். நிதி துறையில் பணி புரிய ஆவல் இருந்தாலும், இவ்வளவு பட்டங்களை பெற்றிருந்தாலும், எந்த நேர்காணலலிலும் வெற்றி பெற முடியவில்லை. அரசாங்கத்தின் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் நேர்காணல் இரண்டாம் மாடியில் இருந்தது. அன்று லிஃட்டும் வேலை செய்யவில்லை. எவ்வளவோ சிரமப்பட்டு நேர்காணல் அறையை அடைந்தவுடன் , அங்கு உள்ளவர்கள் "கட்டிடத்தில் தீ பிடித்தால் எப்படி கீழே செல்வாய்?" என்று கேட்டார்கள். இவர் பளிச்சென்று "இப்போது எப்படி வந்தேனோ, அப்படியே செல்வேன்!" என்று கூறி. மேலும், லிஃட் பழுதானத்தையும், கழிவறைகள் ஊனமுற்றோர் செல்ல ஏதுவாக இல்லை என்பதையும் சுட்டி காட்டி, "ஏதோ ஊனமுற்றோர்களுக்கு தர்மம் செய்வது போல அலட்சியமாக நடத்தக் கூடாது. இம்மாதிரி மனப்பான்மை இருந்தால் எல்லோரையும் ஒருங்கிணைப்பது சாத்தியமாகாது." என்று கூறினார்.

இவர் திருமணமான ஆண்டே Global AID [globalaid.in] எண்டும் தன்னார்வு தொண்டு னொருவனம் ஒன்றை நிறுவினார். இந்த நிறுவனம் ஊனமுற்றோர்கள் பயணம் செய்ய ஏதுவாக இருக்கவும், கட்டிடங்கள் ஊனமுற்றோர்கள் அணுகவும், உபயோகிக்கவும் எளிதாக இருக்கவும், மற்றும் ஊனமுற்றோர்களின் வேலை வாய்ப்புகளுக்காகவும் செயல் படுகிறது. தாழ்த்தப் பட்ட -- அதிலும் கிராமப்புறம், மற்றும் காட்டு பிரதேசங்களில் வசிக்கும் -- குழந்தைகளுக்காக தங்கும் விடுதிகளை அமைத்து, அவரக்ளுக்கு கல்வி அறிவு புகட்டி , வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இவர் துப்பாக்கி சூடுவதில் பயிற்சி பெற்றுள்ளார். துப்பாக்கி சுடுவது மற்றும் நீச்சல் அடிப்பது போன்ற செயல்பாடுகள் உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பது போல உள்ளது என்று கூறுகிறார். பொழுதுபோக்கிற்காக நிறைய படிக்கிறார். அதை தவிர, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் நிறைய எழுதவும் செயகிறார். இந்தியாவில் ஊனமுற்றோர் துறையை பற்றி புத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். விரைவில் இது வெளி வரும் என எதிர்பார்க்கலாம். ஒருங்கிணைப்பு பற்றி திரைப்படம் ஒன்றை எடுப்பது, மற்றும்  சங்கீத குழு ஒன்றை அமைப்பது போன்றவை ஊனமுற்றோர்கள் பற்றி விழுப்புணர்ச்சி ஏற்படுத்தி, நிதி திரட்ட வேண்டும் என்று பற்பல உன்னதமான லட்சியங்களை கொண்டுள்ளார். "வெறுமனே ஒரு மனிதனின் ஊனத்தை மட்டும் சுட்டிக்காட்டி, அவனிடத்தில் புதைந்து திறமைகளை பயன் படுத்தாமல் இருப்பது மனித வளத்திற்கும், ஒருங்கிணைப்பதற்கும் முரணாக உள்ளன." என்று உணர்ச்சி ததும்ப கூறுகிறார்.

"பத்மா" என்றால் தாமரை என்று பொருள். இந்த தாமரைக்கு ஆயிரக்கணக்கான இதழ்கள் உள்ளன. மேலும் எத்தனையோ ஆயிரக்கணக்கான இதழ்கள் மலரவும் உள்ளன!

புகைப்படங்கள்:

விக்கி ராய்