Icon to view photos in full screen

“Ice Age” மற்றும் “Barney the Dinosaur” என்னும் படங்களை பார்க்க எனக்கு பிடிக்கும் “

ருவாய்தா ராஜா என்னும் பதினேழு வயது பெண்ணின் “Thumbi by Ruwi” என்னும் முகநூல் பக்கத்தில் காணப்படும் “நன்றி” என எழுதி உள்ள அட்டைகளின் படங்களும், பல வண்ண நிற காகிதங்களால் அலங்கரிக்கப் பட்டு, கண்ணை கவரும் வண்ண சாயங்களால் வரையப்பட்ட அட்டை பெட்டிகளின் படங்களும் பல ஆழமான கருத்துக்களையும் வாழ்க்கை பயணத்தையும் வெளிப்படுத்துகின்றன. ஆட்டிசம் நோயால் கடுமையாக பாதிப்படைந்த ரூவியின் வாழ்க்கை பயணத்தை அவை சித்தரிக்கின்றன. இந்த பயணத்தில் முக்கியமான அங்கம் வகிப்பவர்கள் அவரின் பெற்றோர்கள். அதிலும் மிக முக்கியமாக அவருடைய தாயார் சுலேகா.

முஹம்மத் ராஜா தகவல் தொழில்நுட்ப துறையில், ஷார்ஜா நகரில் பணி புரிந்து கொண்டிருந்தார். அவர் மனைவி சுலேகா பள்ளி ஆசிரியையாக பணி புரிந்து கொண்டிருந்தார். அவர்களுக்கு ருவி மகளாக பிறந்தார். ருவிக்கு இரண்டு வயது இருக்கும்போது குழந்தைக்கு பேச்சு வரவில்லை என்பதால் பல மருத்துவ சோதனைகள் செய்தனர். மூன்று மாதம் கழித்து அந்த குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டது.. இதை அறிந்த சுலேகா இடி விழுந்தது போல மனம் நொந்து போனார். சில காலம் அழுது புலம்பியே சென்றவுடன், இம்மாதிரி அழுது கொண்டே இருந்தால் ஒன்றும் பயன் இல்லை, இந்த பிரச்சனையை தீர்க்க எதாவது செய்ய வேண்டும் என்று முழு மூச்சாக செயல் படத் தொடங்கினார். 2006ம் ஆண்டு பெங்களூரில் Com DEALL என்னும் மன வளர்ச்சி குன்றிய, மட்டும் பேச்சு வராத சிறு குழந்தைகளுக்காகவே நடத்தப்படும் பயிற்சி ஒன்றைப் பற்றி அறிந்து, அதில் பங்கு பெற பெங்களூருக்கு வந்து ஒரு வாடகை வீட்டில் ருவியுடன் மூன்று வருடம் தங்கினார்.. இந்த பயிற்சி இருவருக்குமே சற்று நம்பிக்கையை கொடுத்தது. ருவி ஒரு சில வார்த்தைகளை பேச தொடங்கினார். சுலேகாவும் “group therapy” எனப்படும் குழந்தைகளுக்கு கூட்டாக பயிற்சி அளிக்கும் முறையை கற்றுக் கொண்டார்.
 
2009ம் ஆண்டு அவர்கள் இருவரும் ஷார்ஜா திரும்பினார்கள். ஆட்டிசம் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு கடும் பயணம் என்பதை பெற்றோர் இருவரும் உணர்ந்தனர். ருவியை எல்லா குழந்தைகள் செல்லும் பள்ளிக்கு அனுப்பினார்கள். ஆனால் அங்கே ருவியால் தாக்குபிடிக்க முடியவில்லை. பல விதமான ஊனமுற்ற குழந்தைகளுக்கான பள்ளிக்கூடத்தில்  சேர்த்தால், அதுவும் சரிபட்டு வரவில்லை. ருவியை சமாளிப்பது, பராமரிப்பது என்பது நாளுக்கு நாள் மிக கடினமாக ஆகத்தொடங்கியது. இது மட்டுமின்றி ருவிக்கு epilepsy என்னும் வலிப்பு நோயும் தாக்கியது. இதற்காக மருந்துகளை எடுத்துக் கொண்டதால் பக்க விளைவுகளாலும் அவதி அதிகரித்தது.
 
ருவிக்கு ஒன்பது வயது ஆனபோது, சுலேகா ருவியுடன் இந்தியா திரும்பி வந்து, திருவனந்தபுரத்தில் தன் தாயின் உதவியை நாடினார். ஒரு வருடத்தில், ருவி அன்றாட வாழ்வில் தனக்கு தேவையானவற்றை தானே செய்து கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் முயன்றார். முக்கியமாக, ஒன்பதரை வயதில் ருவி பருவம் எய்தி விட்டதால், மாத விடாய் நாட்களில் தன் தேவைகளை தானே பார்த்துக் கொள்ள பழக்கப் படுத்த வேண்டும் என முனைந்தார். ருவி பத்து வயது ஆனபோதே தனியாகப் படுக்க துணிவும், சக்தியும் வந்தது.

2014ம் ஆண்டு, அவர்கள் மீண்டும் UAE நாட்டுக்கு திரும்பினார்கள். ஆனால் ருவியின் நடத்தை மிகவும் அடக்க முடியாததாக இருந்தது. கோபமும், மற்றவர்களை அடிப்பது போன்ற வன்முறை செயல்களும் அதிகரித்தன. இதை சமாளிக்க பெற்றோர்கள் மிகவும் கஷ்டப் பட்டனர். மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். ருவி CADRRE என்னும் ஆட்டிசம் குழந்தைகளுக்கான ப்ரத்யக பள்ளியில் சேர்ந்தார். சுலேகாவும், இந்த பள்ளியில் பயிற்சி பெற்று ஒவ்வொரு குழந்தையின் தேவைகளையும் எப்படி பூர்த்தி செய்வது, அவர்களை எப்படி கையாள்வது என்று பல யுக்திகளை அறிந்து செயல்முறை படுத்தினார். இதனால் ருவி நல்ல முன்னேற்றம் கண்டார். ஒரே செயலை திரும்ப திரும்ப பிழை இல்லாமலும், அலுத்துக்கொள்ளாமலும் செய்யும் திறமையை வண்ணப் பெட்டிகள் செய்வது போன்ற தொழில்களில்  நன்கு வெளிப்படுத்த தொடங்கினார். “எங்கள் வாழ்வில் நாங்கள் எடுத்த மிக சிறப்பான முடிவு இதுவே!” என்கிறார் சுலேகா.
 
தமிழ், மலையாளம், ஹிந்தி படப் பாடல்களை மிகவும் ஆர்வமுடன் கேட்கிறார் ருவி. TV யில் கார்டூன் படங்களையும் ரசித்து பார்க்கிறார். அவருடைய முக நூல் பக்கத்தில் அவரின் இனிமையான் குரலில் பாடும் பாட்டும், அவரின் அமைதியான செயல்பாட்டும், “ருவாய்தா” என்ற அவருடைய பேருக்கு ஏற்ப, “பதட்டமோ அவசரமோ இல்லாத மிருதுவான நடை” என இருக்கிறது!

புகைப்படங்கள்:

விக்கி ராய்