Icon to view photos in full screen

"என் கணினி திறமைகளை பலரும் உணர்ந்து புகழ வேண்டும்."

ரோமன் என்பது ஒரு விசித்திரமான, அசாதாரணமான பெயர்! ஆனால் இந்த பெயரை ஓர் நண்பர் பரிந்துரைத்தபோது ரோமனின் பெற்றோர்கள் இப்பெயரை உடனே ஒப்புக் கொண்டார்கள். (இதே நண்பர்தான் இவர்களின் இரண்டாம் குழந்தைக்கு ரூகேன் என்ற பெயரை பரிந்துரைத்தவர்). தற்போது 21 வயதான ரோமன் மிக விசித்திரமானவர்தான்!

ரோமன் பிறக்கும்போது அவர் குடும்பத்தினர் அவர் தாத்தா-பாட்டியுடன் புதுச்சேரியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருவாடிக்குப்பம் என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். இவர் தந்தை கலைவாணன் (50) கொத்தனார் வேலையில் இருந்தார். தாய் வசந்தி (48) இல்லத்தரசி. ரோமனுக்கு ஏதோ ஒரு விதத்தில் உடல்நிலை மற்றும் மன வளர்ச்சி சரியாக இல்லை என்று உணர்ந்திருந்தாலும் பின்னரே அவருக்கு Cerebral Palsy (CP) தாக்கம் இருந்தது என்றும், சற்று மனவளர்ச்சி குன்றி உள்ளது என்றும் தெரிய வந்தது. CP என்பது நரம்பியல் தொடர்பான நோய். அசைவு மற்றும் சில செயல்பாடுகளை பாதிக்கும்.

ரோமன் தன் நாலாம் வகுப்பு வரை புதுச்சேரியில் உள்ள ராணி மேரி பள்ளிக்கூடத்தில் படித்தார். பின்னர் 10ம் வகுப்பு வரை விஜயாஞ்சலி பள்ளியில் படித்தார். பள்ளி ஆசிரியர்கள் இவரை அன்புடன் நடத்தினாலும், மாணவர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். ஆனால் இதனால் எல்லாம் மனத்தளர்ச்சியோ, சோர்வோ அடையாமல் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வாழ்ந்தார். இம்மாதிரி நேர்மறை எண்ணங்கள் இவரின் மிகப்பெரிய, சக்தி வாய்ந்த ஆயுதம். 

பள்ளியில் பாடங்கள் நன்றாக புரிந்தாலும், உடல்நிலை காரணமாக எழுதுவது மிக கடினமாக இருந்தது. இதனால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இவரால் பள்ளிப் படிப்பு சமாளிக்க முடியாது என முடிவு செய்து அவர் பெற்றோர்கள் 9வது வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடிக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் ரோமன் படிப்பை தொடர வேண்டும் என மிகுந்த ஆவலுடன் இருந்தார். தன் ஆசிரியரின் பரிந்துரைத்தலின் உதவியுடன் பள்ளிக்கல்வி தொடர தன் பெற்றோர்களை ஒப்புக் கொள்ள செய்தார். பரீட்சையில் எழுத்தர் (scribe ) கொடுக்கப் பட்டதால் 10ம் வகுப்பு பரீட்சையை எழுதி அதில் தேர்வு பட முடிந்தது. இதற்கு முதல்வர் இளங்கோவன் மற்றும் சுரேஷ் அவர்கள் உறுதுணையாக இருந்தனர். அவர்களின் ஊக்குவித்தலே தன் முன்னேற்றத்துக்கு ஏதுவாக இருந்தது என்று நன்றியுடன் நினனவு கூர்ந்தார். 

"சத்யா சிறப்பு பள்ளி" மாற்று துணையாளிகளை ஒருங்கிணைக்கவும், அவர்களை மேம்படுத்தவும் புதுச்சேரியில் 2003ல் துவங்க பட்டது. ரோமன் 2016ம் ஆண்டு இங்கு சேர்ந்து கணினியில் தகவல்பதிப்பு (data entry) செய்ய கற்றுக்கொண்டார். "இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கணினி என்றாலே எனக்கு அலாதியான மோகம்!" என்று கூறுகிறார். இந்த ஆர்வம் அவரை முன்னேற்ற பாதையிலே செலுத்தியது. இங்கேயும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கம் இவருக்கு மிகவும் உதவியது.

சத்யாவின் நிறுவனர் சித்ரா ஷா மற்றும் தலைமை ஆசிரியர் கமலா கண்ணன் அவர்கள் உதவியுடன் இணையதளங்களை வடிவமைப்பதில் (web design) கணபதிச்செட்டிகுளம் என்ற ஊரில் இருக்கும் ஸ்வாமி விவேகானந்தா கிராமப்புற சமூக கல்லூரியில் பாடம் கற்றார். அதே சமயத்தில், சத்யாவில் ஆசிரியராக இருந்த நிர்மலாவின் உதவியுடன் Makerspace என்ற நிறுவனத்திற்கு மாதம் இரு முறை செல்லவும் தொடங்கினார். 

Makerspace என்பது குழந்தைகளுக்கு STEM (Science, Technology, Engineering and Math) எனப்படும் விஞ்ஞானம் , தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் துறைகளில் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டு பணி இடம். இதன் ஒருங்கிணைப்பாளர் சர்குரு திருமூலர் கூறுகிறார் "ரோமனை நான் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்தித்தேன். அவருக்கு Graphics Design துறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வத்தினால் தினமும் 21 கிலோமீட்டர் பயணம் செய்ரது எங்கள் மையத்தை அடைவார்! இங்கு வந்து கணினியில் நாள் முழுவதும் வேலை செய்து தன் திறமைகளை செவ்வனே மேம்படுத்தி கொண்டார். தனக்கு எவ்வளவு உடல் உபாதைகள் இருந்தாலும், அதை பொறுமையுடன் தாங்கி கொண்டு மற்றவர்களுடன் நன்கு கலந்து உரையாடி, பகிர்ந்து கொள்வதில் பேரார்வம் காட்டினார். இவர் இவ்வளவு தூரம் பயணம் செயகிறார் என்று பச்சாதாபம் அடைந்து, இவரை இவர் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் குயிலை பாளையம் கிராமத்தில் உள்ள Digital Empowerment Foundation (DEF) என்னும் நிறுவனத்திலேயே கணினிகளை பயன் படுத்த Makerspace அனுமதி அளித்து ஏற்பாடு செய்தனர். தற்போது இவர் தன் பெற்றோர்களுடனும், சகோதரர் ரூகேன் உடனும், இடையன் சாவடி கிராமத்தில் வசித்து வருகிறார். இங்கிருந்து (DEF) நிறுவனத்திற்கு தான் வங்கிக்கடன் மூலம் வாங்கின மின்சார ஸ்கூட்டர் ஒன்றில் தினமும் பயணம் செயகிறார். 

சத்யா மூலம் National Institute of Open Schooling (NIOS) எனப்படும் தேசிய திறந்த பள்ளி மூலம் 12ம் வகுப்பு பரீட்சை எழுத பதிவு செய்துள்ளார். நான்கு பரீட்சைகளில் (Data, Home Science, Painting and English) தேர்வு பெற்று விட்டார். Business Studies எனப்படும் வணிகப் படிப்பில் மட்டும் இன்னும் தேர்வு பெறவில்லை. ரோமன் சத்யா நிறுவனம் மூலம், சிறு கையேடுகள், பிறந்த நாள் அழைப்பிதழ் போன்றவைகளை தயாரித்து கொடுக்கிறார். எதிர் காலத்தில் இவைகளை தயாரிக்க தானே ஒரு நிறுவனம் அமைக்க வேண்டும் என்பது இவருடைய குறிக்கோள். இதை தவிர, தோட்ட கலையிலும் ஆர்வத்துடன் நாய்க்குடை வளர்ப்பதில் தேர்ச்சி பெற்றுள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம், அருகே உள்ள தனியார் தோட்டங்களை நீரிட்டு பராமரிக்கவும் செய்கிறார். 

ரோமனுக்கு வழிகாட்டியாக திகழும் சர்குரு ரோமனை பற்றி " ரோமன் மிகவும் உற்சாகமாக இருக்கும் இயல்புடையவர். கல்வி கற்பதிலும், புதுப்புது கலைகளை கற்பதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். எவ்வளவு சோதனைகள் வந்தாலும்,அவைகளை தாங்கி, முறி அடித்து வாழ்க்கையில் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற ஆர்வமும், மன உறுதியும் நிறைந்தவர்." என்று கூறுகிறார். தன்னுடைய கணினி திறமைகளை புதுச்சேரியில் உள்ள அனைவரும் பாராட்ட வேண்டும் என்று ரோமன் மிக ஆவலுடன் செயல் படுகிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்