Icon to view photos in full screen

“உதட்டு சாயம் (lipstick) மற்றும் ஜீன்ஸ் (jeans) எனக்கு ரொம்ப பிடிக்கும். தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சிகளை பார்த்து என் பொழுதை கழிக்கிறேன்”

தற்போது 21 வயதான ரோஜி நிஷா இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள “இரும்பு நகரம்” என அழைக்கப்படும் பொகாரோவில் பிறந்தார். தாயின் கர்பகாலம் முடியும் முன்னரே பிறந்துவிட்டதால் பிறந்தபோது அவர் எடை 1.25 கிலோ மட்டுமே இருந்தது. அவ்வளவு சிறிய குழந்தையை தூக்கக் கூட அவர் தந்தை பயந்தார். குழந்தை வளரும் போது ஏதோ குறைபாடுகள் உள்ளதை பெற்றோர் கவனித்தனர். CT scan, EEG போன்ற பற்பல மருத்துவ சோதனைகள் செய்தனர். மருத்துவர்கள் பரிந்துரைத்ததை அவர்கள் புரிந்து கொண்ட மட்டும் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் மூளையில் போதிய அளவு ஈரப் பசை இல்லை என்றும் உணர்ந்தனர். குழந்தையின் மருத்துவ சான்றிதழில் “Mild Mental Retardation” (சற்று மனவளர்ச்சி குறைபாடு) என்று எழுதி இருந்தது).
ரோஜியின் பெற்றோர்கள் அவளுக்கு வைட்டமின் மாத்திரைகள் கொடுத்தாலே மூளை வளர்ச்சி சரி ஆகி விடும் என நம்பினார்கள். இன்று கூட “எங்களுக்கு பணம் இருந்து அவளுக்கு போதிய பாலும் பழங்களும் கொடுத்திருந்தாலே நல்ல முன்னேற்றம் கண்டிருப்பாள். தினமும் ஹார்லிக்ஸ் கொடுத்திருக்கலாம். ஆனால் அதற்கு எங்களுக்கு பண வசதி இல்லை” என்று அடிக்கடி கூறுகிறார் அவர் தந்தை. குழந்தைக்கு ஆறு வயது இருக்கும்போது ஊரில் உள்ள அங்கன்வாடியில் (அரசாங்கத்தால் நிறுவப்பட்ட தாய் சேய் நல மையம்) சேர்த்த போது குழந்தைக்கு கல்வி கற்பதில் குறைபாடு (learning disability) உள்ளது தெரிய வந்தது.

ஊனமும், குறைபாடும் அவர்கள் குடும்பத்திற்கு ஒன்றும் புதிது அல்ல. ரோஜியின் தந்தை பொகாரோ இரும்பு ஆலையில் பணி புரிந்து கொண்டிருந்த போது நிறைய நாட்கள் உடல் நலம் சரியாக இல்லாததால் வேலையை இழக்க நேர்ந்தது. வயதான 25 வயதான அவரின் மூத்த மகன் முகமது ஜாபெத் சிறு வயது முதலேயே ஒரு கண்ணில் மங்கிய பார்வை உள்ளவராக இருந்தார். இதை உணராமல் ஜாபெதின் பாட்டி அவன் கெட்ட சகவாசத்தினால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என தவறாக எண்ணி, அவரை  தன்னுடன் மேற்கு வங்காளத்தில் உள்ள புருலியா என்னும் இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கே ஜாபெத் ஒன்பதாவது வகுப்பு வரை படித்து முடித்த பிறகு தன் சொந்த ஊரை பிரிந்த ஏக்கம் மேலிட, போகரோவிற்கே திரும்பி வந்து, அங்கேயே பத்தாம் வகுப்பை முடித்தார்.

ஜாபெத் டில்லியில் வேலை பிடித்து அங்கே சென்று 24 வயதான சுரையா பர்வீன் என்னும் பெண்ணை திருமணம் புரிந்து கொண்டார். ஆனால், துரத்ருஷ்ட வசமாக, ஒரு வருடத்தில், ஜாபேத்க்கு இருந்த ஒரு நல்ல கண்ணிலும் பார்வை மங்க துவங்கியது. மருத்துவர் சரியாக சிகிச்சை அளிக்காததால் அந்த கண்ணிலும் பார்வை முழுவதும் இழந்து, பொகாரோ திரும்பினார்.

ரோஜியும் அவர் பெற்றோர்களும் அவர் மாமன் வீட்டில் ஒரு அறையில் தங்கி உள்ளார்கள். ஜாபேதும் 20 வயதான அவர் சகோதரர் ஜாஹீதும் இரண்டு அறைகள் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். பிரதம மந்திரியின் நிதியான Pradhan Mantri Awas Yojna விலிருந்து 1.2 லட்சம் ரூபாயும் குடும்பத்தினரிடம் இருந்து கடனாக கிடைத்த பணத்தையும் வைத்து இந்த வீட்டை வாங்கி உள்ளனர். அரசாங்க உதவியுடன் ஒரு கழிப்பறையையும் கட்டி உள்ளனர். இந்த வீட்டில் ஒரு அறையில் ஜாபேதும் அவர் மனைவியும் தங்கி, ஜாஹித் மற்றொரு அறையின் ஒரு பகுதியை ஒரு சிறிய கடையாக மாற்றி  அங்கே பிஸ்கட் போன்ற பொருள்களை விற்று, அதனால் மாதம் எண்ணூறு ரூபாய் ஈட்டுகிறார். இதை தவிர, ரேஷன் அரிசிலும், ரோஜியின் தந்தைக்கு வரும் ஒய்வு ஊதியத்திலும் வாழ்க்கையை நடத்துகின்றனர். 

ரோஜி தன் உடல் மற்றும் சுகாதார தேவைகளை யார் உதவியும் இல்லாமல் தானே பார்த்து கொள்கிறார். வீட்டு வேலைகளையும் செய்கிறார். அவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஏதாவது பயிற்சி அளிப்பது பற்றி அவர் பெற்றோர்கள் எந்த யோசனையும் செய்யவில்லை. இதனால் ரோஜி நாள் முழுவதும் தொலைகாட்சிகளை பார்த்தே காலம் கழிக்கிறார். தன் வயதுப் பெண்களைப் போலவே லிப்ஸ்டிக், ஜீன்ஸ், T ஷர்ட் போன்ற அலங்கார பொருள்களிலேயே கவனம் செலுத்துகிறார். அவர் பெற்றோர்களும் அவரை செல்லமாக வளர்த்து அவர் கேட்பதை எல்லாம் வாங்கி தருகிறார்கள். அவர் பள்ளிக்கு போவாரா என்பது சந்தேகமே. ஆனால், மற்ற குழந்தைகளை போல தனக்கும் பள்ளிக்கு எடுத்து செல்லும் பை (schoolbag) வேண்டும் என்று கேட்டால் அவர் பெற்ற்றோர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?

புகைப்படங்கள்:

விக்கி ராய்