Icon to view photos in full screen

"வாழ்க்கை கடினமாக இருந்தாலும், வெறுமனே புலம்பிக்கொண்டு இருக்காமல், உங்கள் நெஞ்சத்தையும், ஆர்வத்தையும் பின் பற்றி மகிழ்ச்சியுடன் இருங்கள்."

உத்தராகண்டில் உள்ள மிகுந்த மலை பிரதேசமான டெஹ்ரி கர்வால் மாகாணத்தில், தேவப்ரயாக் அருகே உள்ள கராகோட் என்னும் கிராமம் உள்ளது. சில நூறு மக்கள் வாழும் இந்த கிராமத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டு சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு இளம் பெண் தனியாக வாழ்கிறார். இது மட்டுமே உங்களை வியப்பில் ஆழ்த்துகிறது என்றால், 25 வயதான ப்ரீதி படோனியின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் முழுவதும் அறிந்து கொண்டால், வாயடைத்து போவீர்கள்!
 
ப்ரீதிக்கு ஒரு மூத்த சகோதரரும், ஒரு இளைய சகோதரரும் உள்ளனர். அவர்கள் தந்தை அடுத்த மாகாணமான பாரி கர்வால் மாகாணத்தில் ஸ்ரீ நகர் என்னும் ஊரில் தினக்கூலிக்கு வேலை செய்து வந்தார். கராகோட்டில் இருந்து இந்த ஊர் சுமார் இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டி இருந்ததால் பல நாட்கள் வீட்டிற்கு வரவே மாட்டார். ப்ரீதிக்கு இரண்டரை வயதானபோது அவர் தாய் காலமானார். எப்படி இக்குழந்தைகள் வீட்டை பராமரிப்பது என்ற எண்ணத்துடன் தந்தை மறுமணம் புரிந்து கொண்டார். ஆனால் இதனால் நிலைமை இன்னும் மோசமாகவே ஆனது. வீட்டு வேலைகளை செய்தால்தான் உணவும் உடையும் தங்க இடமும் உண்டு என்று கொடுமையான சட்டங்கள் வீட்டில் விதிக்கப் பட்டது. இதனால் பல நாட்கள் ப்ரீதி பட்டினி கிடந்ததுண்டு.
 
தன் 17ம் வயதில் ப்ரீதி 11ம் வகுப்பு தேர்வு பெற்றபின், அவரை திருமணம் செய்விக்க முடிவு செய்யப் பட்டது. படிப்பை தொடர முடியவில்லை என்ற ஏமாற்றம் அடைந்தாலும், வருங்கால கணவர் வெளிநாட்டில் வேலை செயகிறார் என்பதால் தன் வாழ்க்கை தரம் முன்னேறும் என கனவு கண்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக, நிச்சயதார்த்தம் முடிந்து ஏழே  மாதங்களில், 2014ம் ஆண்டு, மரத்தில் இருந்து கீழே விழுந்து முதுகுதண்டு சேதம் அடைந்தது. அவரை ஸ்ரீநகர் அழைத்து சென்றனர். ஆனால் அங்கு போதிய மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. இதனால் இவர் மூத்த சகோதரர் வேலை செய்து கொண்டிருந்த டேரா டூன் நகருக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த அரசு மருத்துவ மனையில் ஒரு உதவியும் கிடைக்கவில்லை. Shri Mahant Indiresh Hospital என்னும் மருத்துவ மனையில் மருத்துவர்கள் இவர் முதுகு தண்டில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்தனர். 15 நாட்கள் கழித்து மருத்துவ மனையிலிருந்து வெளியே வந்தபோது, இடைக்கு கீழே அசைவே இல்லாததால், சக்கர நாற்காலிக்கு தள்ளப் பட்டார்.
 
ஆனால் அவர் சோதனைகள் இத்துடன் முடிந்து விடவில்லை. இவர்களின் இளைய சகோதரர் படிப்பை முடிக்க டேரா டூனுக்கு வந்தார். ப்ரீதி வீடு திரும்பியபோது, அவர் தந்தை ஸ்ரீநகர் போய்விட்டார். சித்தியோவெனில் தன்னுடைய தாயார் வீட்டிற்கே சென்று விட்டார். ப்ரீதிக்கு உதவி செய்ய யாருமே இல்லை. இயற்கை உபாதைகளை கழிக்க உதவி தேவை படுவதாலும், அந்த உதவி கிடைக்காததாலும் பல நாட்கள் இவருடைய உடைகள் கரை படிந்துவிடும். படுக்கையிலே படுத்திருப்பதால் உடற்புண்கள் தாக்கின. மெதுவே சக்கர நாற்காலி பயன் படுத்த கற்றுக் கொண்டு கைகள் உதவியுடனேயே எல்லா இடங்களுக்கும் செல்ல பழகி கொண்டார். இரண்டு மூன்று ஆண்டுகளில் சமையல் செய்வது, வேட்டை சுத்தம் செய்வது போன்ற பல வேலைகளை செய்ய பழகிக் கொண்டார்.
 
குடும்பத்தினர் உதவா விட்டால், இறைவன் சில தேவதைகளை அனுப்புவார். அப்படிப்பட்ட ஒருவர்தான் அஜய் பந்த். Samoon Foundation என்னும் நிறுவனத்தில் பணி புரியும் இவர், கிராமத்தினர் மூலம் ப்ரீதியை பற்றி அறிந்து சந்திக்க வந்தார். "வாழ்க்கை பசுமையாக இருக்கும் என எனக்கு தோன்றியதே இவரால்தான்" என்று அஜய்யுடன் தன் முதல் சந்திப்பை பற்றி ப்ரீதி நினைவு கூர்ந்தார். அஜய் ப்ரீத்தியின் மருத்துவ அறிக்கைகளை பல மருத்துவர்களிடம் காட்டி சரி செய்ய ஏதாவது வழி உண்டா என்று ஆராய்ந்தார். வழி ஏதும் இல்லை என அறிந்தவுடன், அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசித்து, ப்ரீத்திக்கு மிகவும் தேவையான அவர் அறைக்கு அருகிலேயே ஒரு சமையல் அறையும், மேற்கித்திய கழிவறையும் கட்டி தர முடிவு செய்தார். இதற்கு நிதி திரட்ட முகநூல் மூலம் முயற்சி செய்தார். இதனால் ப்ரீதி முக நூல் பயன்படுத்த பயின்று, முதுகு தண்டு பாதிக்க பட்ட பலருடன் தொடர்பு கொண்டார்.
 
ஸ்ரீநகரில் அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கும் சீமா நேகி இவருக்கு உறுதுணையாக இருந்த மற்றொருவர். ப்ரீதி சீமாவையும், அஜயையையும் "இறைவன் அனுப்பிய இரு தேவதைகள்" என்றே வர்ணிக்கிறார். ப்ரீதிக்கு தேவையான பலவற்றை இவ்விருவருமே செய்து தந்துள்ளனர். தண்ணீர் எப்போதும் வர ஒரு மோட்டார், குளிர் காலங்களில் வீட்டை வெப்பமாக வைக்க ஒரு ஹீட்டர், மிகுந்த விலை உயர்ந்த பெரியவர்களுக்கான adult diapers போன்றவைகளையும், பல துணிமணிகளையும் "சீமா மேடம்"தான் வாங்கி தருகிறார் என்று நன்றியுடன் கூறினார். மேலும், "இவர் எனக்கு தாயை போல!" என்று உணர்ச்சியுடன் கூறினார். சொந்த குடும்பத்தினர் ப்ரீதியை சற்றும் கண்டு கொள்ளாதபோது, இவ்விருவரும் சீராட்டி, பண்டிகை நாட்களில் சந்தித்து களிப்பூட்டுகிறார்கள்.
 
கராகோட் ஊரில் இருக்கும் சிலர் ப்ரீதிக்கு தங்களாலான உதவி செய்து வந்தனர். கிராமத்தில் உள்ள மளிகை கடைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தால், வேண்டியதெல்லாம் வீட்டிற்கே கொண்டு தரப்பபடுகிறது. கிராமத்தில் உள்ள வயதானவர்கள் வந்தால் அவர்களின் இள வயது கதைகளை ஆர்வத்துடன் கேட்கிறார். புது ஆட்கள் வந்தால், வீண் வம்புகளுக்கு இடம் கொடுக்காமல், கிராம தலைவரான பிரதீப் படோணியை துணைக்கு அழைக்கிறார். எங்கள் விக்கி ராய் புகைப்படம் பிடிக்க வந்த பொது பிரதீப், அவர் மனைவி யசோதா மற்றும் அவர்களின் இரண்டு மகள்களும் கூட இருந்தனர்.
 
ப்ரீதி தன்னுடைய வாழ்க்கைக்கு தன்னை நன்கு பழக்க படுத்தி கொண்டு விட்டார். புகார்களோ, வருத்தமோ ஏதும் இல்லை என கூறினார். ஏதாவது கனவுகள் உண்டா என கேட்டதற்கு அமெரிக்கா சென்று டாக்டர் ஆக வேண்டும் என்று ஆவலுடன் கூறினார்! அமெரிக்கா செல்வதே தனது குறிக்கோள் என்றும் கூறினார். தான் சக்கர நாற்காலியை சார்ந்து இருப்பதால், இம்மாதிரி மலை பிரதேசத்தில் வேலைக்கு செல்வது கடினம் என்றும் கூறுகிறார். அதனால், கணினி மற்றும் இணையதளம் மூலம் வேலை செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.


புகைப்படங்கள்:

விக்கி ராய்