Icon to view photos in full screen

"குருடனை மணக்க சம்மதித்த என் மனைவியைப் போல பலரும் இருக்க வேண்டும்!”

ஒரு அரசாங்க பள்ளி ஆசிரியரின் திருமணத்தில் பல முக்கிய பிரமுகர்களும் முன்னாள் மகாராஜாவும் வருவது என்பது சாதரணாமாக நடை முறையில் காண முடியாது. ஆனால் பிரகாஷ் சந்த் கிச்சியின் வாழ்க்கை சாதரணமானதான வாழ்க்கை அல்ல! இரு மாநிலங்களை படர்ந்த காதல் கதை – அதுவும் கண் தெரியாத ஒருவருக்கும், அவரை உளமார நேசிக்கும் காதலிக்கும் இடையே மலர்ந்த காதல் என்பது ஜோத்பூர் நகரின் மக்களுக்கு மிகவும் வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருந்தது!
 
42 வயதான பிரகாஷ் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆசாப் நகரத்தில் பிறந்தவர். ஐந்து சகோதரர்களில் இளையவர். இரண்டு வயது இருக்கும்போது influenza காய்ச்சல் வந்து, அதற்கு சரியான சிகிச்சை கிடைக்காததால் தன் கண் பார்வையை இழந்தார். எட்டாம் வகுப்பு வரை “நேத்ராஹீன் விகாஸ் சன்ஸ்தான்” என்னும் நிறுவனம் கண் பார்வை அற்றவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு பள்ளிக்கூடத்தில் பாடம் கற்றார், அதன் பிறகு ராஜஸ்தான் மாநில அரசு அவரை டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்க தேர்ந்தெடுத்தார்கள்.
 
உயர் நிலை பள்ளி கோடை விடுமுறையின் போது ஒரு நாளுக்கு இருநூறு ரூபாய் வரை ஈட்டலாம் என்று சிரோஹி பேருந்து நிலையத்தில் ஜோக் மற்றும் பொது அறிவு புத்தகங்களை விற்று வந்தார். மேலும் பணம் ஈட்ட, ஒரு பழரசக் கடையையும், தொலை பேசி பேசும் STD Boothம் நிறுவினார். இவ்வாறு பற்பல யுக்திகளை மேற்கொண்டு, சவால்களை எதிர் கொண்டு அரசியல் துறையில் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். முதுகலைப் படிப்பையும் முடித்து, மேலும் ஆசிரியர் பயிற்சியிலும் தேர்ச்சி பெற முயன்றார். ஆனால் “கண் தெரியாதவர் எப்படி ஆசிரியராக முடியும்?” என்று அரசாங்கத்தில் சிலர் ஆட்சேபித்து இதற்கு முட்டுக்கட்டை போட முயன்றனர். பிரகாஷ் சற்றும் மனம் தளராமல், நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இரண்டு வருடங்கள் கடுமையாக போராடி அரசாங்கத்திற்கு எதிரே வெற்றி பெற்று தன் உரிமையை நிலை நாட்டினார்.
 
இந்த கால கட்டத்தில், மகாராஷ்ட்ராவில் உள்ள அமராவதி நகரத்திலிருந்து மவுன்ட் அபுவுக்கு தன் சகோதரியை பார்க்க வந்த கவிதா மகாதேவ் என்னும் பெண்மணியை சந்திக்க நேர்ந்தது. பிரகாஷின் அன்பு மிக்க அணுகுமுறையும், பாசம் மிகுந்த பேச்சு திறனாலும், நன்னடத்தையாலும் கவிதா மிகவும் கவரப் பட்டார். இவர்களின் நட்பு, நாளடைவில் காதலாக மலர்ந்தது.
 
2005ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி அவர் வாழ்வில் இரண்டு முக்கிய காரணங்களுக்காக மறக்க முடியாத நாள்! முதலாவதாக அவருக்கு முதல் முதலில் பள்ளி ஆசிரியர் வேலைக்கு பணி நியமனக் கடிதம் கிடைத்தது. அன்றே அவர் கவிதாவின் பெற்றோர்களைப் பார்த்து கவிதாவுடன் திருமணம் புரிய அனுமதி கேட்க அமராவதி நகருக்கு ரயில் வண்டியில் பயணித்தார்.
 
ஆனால் கவிதாவின் பெற்றோர்களோவேனில் இந்த திருமணதிற்கு திட்ட வட்டமாக மறுப்பை தெரிவிட்டனர். எவ்வாறு நன்கு கல்வி பயின்ற தங்கள் 21 வயது இளம் பெண்ணை “ஒரு குருடனுடன் வாழ்வு என்ற பாழும் குழியில் தள்ள” சம்மதிப்பார்கள்!
 
தன் பெற்றோர்களின் ஆட்சேபங்களை கடந்து, கவிதா “மணந்தால் நான் பிரகாஷையே மணப்பேன்!” என அடம் பிடித்து, மன உறுதியுடன் இருந்தார். இரண்டு வருடங்கள் விடா முயற்சி செய்து, தன் பெற்றோர்களின் சம்மதத்தை பெற்றார்! 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் நாள் அவர்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டு, ஒன்பது நாட்கள் கழித்து ராஜஸ்தான் கலாசார முறையின்படி பிரம்மாண்டமான முறையில் திருமணத்தை கொண்டாடினார்கள். மிக அதிசயமாக அன்று மழை பொழிந்தது! வானமே இந்த திருமணத்தை கொண்டியது போல உள்ளது என்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள்! 1500 பேர் கலந்து கொண்ட அந்த திருமணத்தின் முழு செலவையும் பிரகாஷே ஏற்றுக் கொண்டார்!
 
இரண்டு பதவி உயர்வுகளுக்கு பின் 2017ல் பிரகாஷ் தலைமை ஆசிரியர் பதவி ஏற்றார். “நான் பதவி ஒய்வு பெறுவதற்கு முன்பாக, கட்டாயமாக District Education Officer என்னும் மாவட்ட கல்வி அதிகாரி பதவியை அடைந்து விடுவேன்!” என்று தன்னம்பிக்கையுடன் சூளுரைக்கிறார்!
 
கவிதா அளிக்கும் தன்னலமற்ற ஆதரவையும், ஊக்கத்தையும் நன்றி கூர்ந்து நினைவு கொள்கிறார் பிரகாஷ். கவிதாவின் சுவை மிகு சமையலையைப் பற்றியும், அவர் மகிழ்ச்சியுடன் கூர்ந்தார்! ஆதரவு தரும் மனைவி, மூன்று தங்கமான குழந்தைகள், சவுகரியமான சொந்த இரண்டு மாடி வீடு, நல்ல வருமானம்.. இவை அனைத்தும் கொண்ட பிரகாஷின் வாழ்க்கை இன்ப மயமானதுதானே!

புகைப்படங்கள்:

விக்கி ராய்