Icon to view photos in full screen

"பள்ளி முடிந்த உடன், வீட்டில், என் தாய்க்கு பாத்திரம் கழுவுவது, கறிகாய் நறுக்கி கொடுப்பது போன்ற பணிகளில் உதவி புரிகிறேன். கையில் பிரம்பு தடி இருப்பது நடக்க மிகவும் உபயோகமாக இருக்கிறது."

17 வயதில் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை பாதையை தட்டு தடுமாறி நிர்ணயித்து கொள்வார்கள். இது பூஜா சிங் வாழ்க்கையில் நன்றாகவே பொருந்தும்! பிறக்கும் போதே கண் பார்வை இல்லாததால், வாழ்க்கையில் பல மன உளைச்சல்களுக்கு ஆளாயிருக்கிறார். அவர் தாய் ஹேமலதா சிங் கூறுவது போல, இதிலிருந்து மீள பற்பல ஆண்டுகள் ஆயின.
 
ஹேமலதா போபால் நகரில் ASHA (Accredited Social Health Activist) அரசு தாய்-சேய் நலம் மையத்தில் பணி புரிகிறார். பூஜா பிறந்த நாள் அன்றே, குழந்தைக்கு கண் தெரியாது என்று அறிந்தவுடன், அவர் கணவன் அவர்களை ஒதுக்கி வைத்து, குழந்தை பராமரிப்புக்கு உதவி செய்ய முடியாது என்று கை கழுவி விட்டார். "என் பெற்றோர்கள் வீட்டில் ஒன்றரை ஆண்டுகள் தங்கினேன். என் புகுந்த வீட்டில் மீண்டும் வந்து இருக்குமாறு வற்புறுத்தினார்கள். ஆயினும், என் கணவர் நடத்தையில் ஒரு மாற்றமும் இல்லை. அப்போதுதான் நான் வேலைக்கு செல்வது என்று உறுதி பூண்டேன்."
 
எல்லா ASHA பணியாளர்களை போலவே, இவருக்கும் ஊதியம் மிகவும் குறைவு. மாதம் 5,000 ருபாய் மட்டுமே சம்பளம். அதிலேயே தன்னுடைய மூன்று குழந்தைகளையும் பராமரிக்கிறார். பூஜாவிற்கு 4 வயது ஆனபோது, அடுத்த குழந்தை குஷி பிறந்தாள். எல்லோரும் குஷியின் மேல் பாசம் பொழிந்தனர். "இது பூஜாவை மிகவும் வருத்தம் அடைய செய்தது. 'ஏன் யாரும் என்னை அன்புடன் நடத்துவது இல்லை?' என்று கேட்பாள். ஆனால் நான் எனக்கு அவள் மேல் உள்ள அளவு கடந்த பாசத்தை நன்கு புரிய வைத்தேன்." என்று ஹேமலதா கூறினார்.
 
குஷி பள்ளிக்கு செல்ல தொடங்கியவுடன், நிலைமை இன்னும் கடினமாக ஆனது. "பூஜா தன்னையும் பள்ளிக்கு அனுப்ப கேட்டு கெஞ்சி அழுவாள். நான் யாரிடமாவது உதவியை நாடினால், அவர்கள் 'குருடியை பள்ளிக்கு அனுப்பி என்ன சாதிக்க முடியும்? ஏன் பணத்தை வீணாக்குகிறாய்?' என்று எதிர்மறையாகவே பேசினார்கள். சிலர் பூஜாவை கண் தெரியாதவர்களுக்காக நடத்தப்படும் விடுதிக்கு அனுப்ப பரிந்துரைத்தார்கள். என் குழந்தையை விட்டு பிரிந்து வாழ எப்படி என் தாயுள்ளம் அனுமதிக்கும்?" என்று ஹேமலதா உணர்ச்சியுடன் கூறினார்.
 
நம்பிக்கையை கை விடாமல், ஹேமலதா பிறர் உதவியை நாடினார். கடைசியில் அந்த ஊர் MLA விஷவாஸ் சாரங் ஆருஷி என்னும் நிறுவனத்தை அணுக சொன்னார். ஆருஷி மாற்று திறனாளிகளுக்கான தன்னார்வு தொண்டு நிறுவனம். "நான் என் சகோதரருடன் அங்கு சென்று விசாரித்தேன். கட்டணம் ருபாய் 5000 என்று முதலில் சொன்னார்கள். பின்னர் அதை 2000ம் ஆக குறைத்தனர்."
 
இதனால் பூஜாவிற்கு பல திறமைகள் மிளிர தொடங்கின. இசை, நாடகம், மற்றும் கணினி முதலியவற்றில் பயிற்சி கிடைத்தது. சரித்திரம், அரசியல் பாடங்களிலும் ஆர்வம் காட்டினாள்.
 
"கடந்த ஆறு வருடங்களாக பள்ளிக்கு சென்று கொண்டு இருக்கிறாள். இப்போதெல்லாம், ஆசிரியருக்கு உதவி புரிகிறாள். இவள் மிகவும் திறமை உள்ளவள் என்றும், mainstream பள்ளிக்கே அனுப்பலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதற்கு எனக்கு போதிய பண வசதி இல்லை." என்றார் ஹேமலதா.
 
ஹேமலதா சந்திக்கும் சோதனைகளுக்கு அளவோ, முடிவோ இல்லை. குஷி RST Memorial Public School என்னும் பள்ளிக்கு செல்கிறாள். "நான் ஒருவளே சம்பாதிப்பதால், பள்ளிக்கும் செலவழித்து, உணவுக்கும் செலவழிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இதனால், குஷியை 7ம் வகுப்புக்கு பிறகு பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. இதில் எனக்கு மிகவும் மன வருத்தம். ஆனால் என்ன செய்வது? பணம் போதவில்லையே!" என்று ஹேமலதா வருத்தத்துடன் கூறுகிறார்.
 
ஹேமலதாவின் கடைசி குழந்தை தனுவிற்கு இப்போது 11 வயது. ஆறாம் வகுப்பில் படிக்கிறாள். "இவளுடைய படிப்புக்கும், புத்தகங்களுக்கும் செலவழிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தனுவிற்கு சரியான காலணிகள் கூட இல்லை. என் கணவர், என்னுடனும், குழந்தைகளுடனும் ஒரே வீட்டில் இருந்தாலும், ஒரு பொறுப்பும் எடுத்து கொள்ளாமல் விட்டேத்தியாக இருக்கிறார். எங்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை." என்று ஹேமலதா கூறினார். தந்தையின் இந்த பொறுப்பற்ற நடத்தையை ஈடு செய்யவோ என்னவோ, மூன்று குழந்தைகளும் மிக ஒற்றுமையாக இருக்கின்றன! "எப்போதாவது, விளையாட்டுக்காக பூஜாவை விடுதியில் சேர்த்து விடுவேன் என்று மிரட்டினால், மற்ற இருவரும் மிகுந்த பாசத்துடன் அப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று கெஞ்சுகின்றனர். இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி" என்று அந்த தாய் பெருமிதத்துடன் கூறினார்.
 
பள்ளியில் பூஜா நன்கு மிளிர்ந்து வருகிறாள். அதிலும், தன் சங்கீத ஆசிரியர் மீது அலாதி பிரியம்! "எனக்கு பாட மிகவும் பிடிக்கும். பாடினால் மன நிம்மதியும், இன்பமும் அடைகிறேன். அடிப் அஸ்லாமின் ‘Tere sang yaara’ பாடல் மிகவும் பிடிக்கும்." என்று கூறினாள். அவள் தாயும், "பூஜாவிற்கு பாடகியாக ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால் என்ன செய்வது, அதற்கு பண வசதி என்னிடம் இல்லை. அவள் அல்கா யாக்னிக்கின்  ‘Choti si pyari si nanhi si’ பாடலை மிக நன்றாக பாடுவதை கேட்டால் எனக்கு பேரானந்தம் உண்டாகிறது." என்று கூறினார்.
 
பள்ளி மாணவர்களை போபால் நகரில் மட்டும் அல்ல, மும்பை போன்ற நகரங்களுக்கும் இசை  நிகழ்ச்சிகளுக்கு அந்த பள்ளி அனுப்புகிறது. இதனால் பள்ளி பூஜாவிற்கு மிகவும் பிடிக்கும். பள்ளியில் மஹிமா, மற்றும் பூர்வி என்ற பெண்கள் இவரின் நெருங்கிய தோழிகள்.
  
பள்ளி முடிந்த உடன், வீட்டில், தன் தாய்க்கு பாத்திரம் கழுவுவது, கறிகாய் நறுக்கி கொடுப்பது போன்ற பணிகளில் உதவி புரிகிறாள். கையில் பிரம்பு தடி பிடித்துக் கொண்டு தானே யார் உதவியும் இல்லாமல் நடக்கிறாள்.
 
சிறந்த பாடகியாகவோ, நாடகம் போன்ற கலை துறையிலோ சிறந்து விளங்க வேண்டும் என்பதே பூஜாவின் லட்சியம். "நான் சிறுமியாக இருந்தபோது என் உறவினர்கள் என் தங்கைகளின் மீது மட்டுமே அன்பாக இருந்து என்னை உதாசீனப் படுத்தியது எனக்கு மிக மன வருத்தம் அளித்தது. ஆனால், என் தாய் எனக்கு உறுதுணையாக இருந்து என் மீது பாசத்தை பொழிந்து, என்னை எப்போதுமே ஊக்குவித்து வருகிறார்." என்று நினைவு கூர்ந்தார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்