Icon to view photos in full screen

"நான் சிறு பெண்ணாக இருக்கும்போது நான் வசித்த கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்கு கூட செல்ல முடியாமல் இருந்தேன். ஆனால் இப்பொதோவெனில், வெளி நாடுகளுக்கு சென்று கூடை பந்து ஆடுகிறேன்."

ஒரு கிராமத்தில் தினக் கூலி ஈட்டி, வயிற்றை கட்டி, வாயை கட்டி வாழ்ந்து வரும் உள்ள பெற்றோர்களின் ஒரு பெண்ணுக்கு போலியோ நோய் தாக்கம் ஏற்படுகிறது என்றும், இரண்டாவது பெண் குழந்தை நோய் நொடிகளின்றி இருக்கிறாள் என்று வைத்து கொள்வோம். இந்த இரண்டு குழந்தைகளில் யாருடைய படிப்பு பாதிக்கப்படும்? நாம் காண இருக்கும் கதையினை  கண்டால் நீங்கள் பிரமித்து போவீர்கள்!
 
ஆந்திர பிரதேஷில் உள்ள மெண்டடா கிராமத்தில் வசிக்கும் ராமு மற்றும் பங்காரம்மா மிகவும் வறுமையில் வாடி வாழ்ந்திருந்தனர்.1990ம் ஆண்டு 5 வயதான அவர்களின் பெண் குழந்தை சத்தியவதியை போலியோ தாக்கியது. அந்த இதனால் அந்த குழந்தையின் இடது கால் மிகவும் பாதிக்கப்பட்டு நடக்கவும் முடியாமல், தவழ்ந்தே செல்லும் நிலைமைக்கு தள்ள பட்டது. இதற்கு மருத்துவ செலவுக்கு .நிதி வசதி அவர்களுக்கு இல்லை. இந்த நிலையில் பங்காரம்மா மீண்டும் கர்பம் தரித்தார். தன் குழந்தையின் அன்றாட தேவைகளை கவனிக்க முடியாமலும், பராமரிக்கவும் முடியாமல் போயிற்று. அப்போது ராமுவின் தந்தை உதவ முன்வந்தார்.     இதனால் சத்தியவதி தன்னுடைய தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார். அப்போது அவரகள் இவருக்கு நாட்டு மருந்து சிகிச்சை அளித்ததால் ஓரளவு முன்னேற்றம் கண்டார்.
 
சத்தியவதி கஷ்டப்பட்டு நடக்க ஆரம்பித்த பொழுது, அவர் பெற்றோர்கள் அவரை தெலுங்கு மொழியில் பாடம் கற்று தரும் பள்ளி ஒன்றில் சேர்த்தார்கள். MPPS என்னும் வெகு பிரபலமான தனியார் பள்ளியில் சேர்ந்ததை கண்டு அனைவரும் வியப்புற்றனர். "எதற்காக பணத்தை விரயம் செயகின்றீர்கள்? பேசாமல் ஒரு சிறிய கடையை நிறுவி, அவர் பெரியவளானவுடன் அதை நிர்வகிக்க அவளுக்கு பயிற்சி கொடுங்கள்." என்று கூறினார்கள். ஆனால் அவர் பெற்றோர்கள் இம்மாதிரி ஏசுவதை எல்லாம் கேட்டு மனம் தளராமல், குழந்தை கல்வியில் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்று தங்கள் முடிவில் உறுதியாக இருந்து செயல் படுத்தினர். "நான் யாரையும் சார்ந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் மிக சிறந்த கல்வி பெற வேண்டும் என்று என் பெற்றோர்கள் பெரு முயற்சி எடுத்து கொண்டனர்." என்று சத்தியவதி கூறுகிறார். இதற்கு பெரும் செலவு ஆவதால், இரண்டாவது பெண்ணின் கல்வி தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டி இருந்தது.
 
ஐந்தாம் வகுப்பு முடித்த பிறகு ZPH School என்னும் அரசு பள்ளியில் சத்தியவதி சேர்ந்தார். 10ம் வகுப்பில் இரண்டாம் இடம் பெற்று, மாநிலத்தின் சிறந்த மாணவிகளில் ஒருவர் என்ற பிரதிபா விருதை பெற்றார். பெற்றோர்களின் நம்பிக்கையை பொய்ப்பிக்காமல், அவர்கள் கனவு மெய்ப்பட வேண்டும் என்று தன வாழ்க்கை பாதையில் நன்கு முன்னேறினார். 2002ம் ஆண்டு பள்ளிப்படிப்பு முடித்துவிட்டு கஜபதிநகரம் ஊரில் உள்ள அரசுக்கல்லூரியில் சேர்ந்து 2005ம் ஆண்டு கணித, பௌதிகம், வேதியியல் படித்து BSc பட்டம் முடித்தார். ஆசிரியர் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் B.Ed படிப்பிற்கு சேர்ந்தார்.
 
2014ம் ஆண்டு இவருக்கு இன்னும் முழு நேர வேலை கிடைக்காதபோது, விஜயநகரம் நகரில் தலைமை அலுவலகம் உள்ள Global AID நிறுவனத்தை அணுகுமாறு ஒரு உறவினர் பரிந்துரைத்தார். இதனால் இவர் வாழ்க்கையில் ஒரு பெரும் மலர்ச்சி ஏற்பட்டது. இந்நிறுவனத்தையும், இதன் ஆற்றல் மிக்க நிறுவனர் சாய் பத்மா பற்றியும் நாம் இந்தத் EGS இணையதளத்தில் 2022 வருடம் ஏப்ரல் மாதம் ஏற்கனவே பார்த்துள்ளோம். சாய் பத்மா இவருக்கு ஒரு வழிகாட்டியாகவும், ஊக்கம் அளிப்பவராகவும் இருந்தார். ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளராக இருந்ததை தவிர, தனக்கு விளையாட்டுகளில் உள்ள ஆர்வத்தையும், திறமையையும் சத்தியவதி உணரத் தொடங்கினார்.
 
2016ம் ஆண்டு சாய் கீதாவின் உந்துதலால் சக்கர நாற்காலியில் இருந்து கூடை பந்து விளையாடும் பயிற்சி ஹைதராபாதில் சத்தியவதி பெற்றார். ஆனால் அவர்கள் இருவரும் எதிர்பார்த்ததை விட விளையாட்டு துறையில் சத்தியவதி மிக விரைவில் முன்னேறினார். 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த மூன்றாவது தேசிய சக்கர வண்டி கூடை பந்து போட்டியில் ஆந்திரா குழுவுக்கு ஆடி, அந்த குழு அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேற முடிந்தது.
 
2017ம் ஆண்டு இவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதும், உற்சாகமானதும் ஆனது. தாய்லாந்து நாட்டில் நடந்த சக்கர வண்டி கூடைப்பந்து போட்டியில் பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்டார். "11 நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் வந்திருந்தனர். இதை தவிர ஸ்வீடன், நெதெர்லாண்ட்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து தலை சிறந்த பயிற்சியாளர்களுக்கு வந்திருந்தனர். இதனால் அங்கே நான் பற்பல நுண்ணிய நுட்பங்களையும், பயிற்சியையும் கற்றறிந்தேன். " என்று கூறுகிறார். 90 விளையாட்டு வீரகளிலிருந்து இந்தியாவிற்கு நான்காவது பாலி கோப்பை இந்தோனேசியாவில் விளையாட தேர்ந்தெடுக்க பட்ட 12 வீரர்களில் சத்தியவதியும் ஒருவர். ஆஸ்திரேலியா பயிற்சியாளர் நெஸ் பிராட்லி இந்தியா அணிக்கு பயிற்சி அளித்தார். இதனால் இந்தியா அணி வெண்கல பதக்கத்தை வென்றது. நவம்பர் மாதம் ஹைதராபாதில் நடந்த நான்காவது தேசிய கூடை பந்து போட்டியில் பங்கேற்றார்.
 
2018ம் ஆண்டு சத்தியவதியின் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. Global AID நிறுவனத்தின் ஆதரவுடன் பயிற்சியாளர்கள் பயிற்சி ஒன்றில் பங்கேற்றார். பயிற்சி அளிப்பதற்கான தகுதியையும், சான்றிதழ் ஒன்றையும் பெற்றார். "எனக்கு தெரிந்த வரையில், ஊனமுற்ற பயிற்சியாளர்களில், நானே முதல் பெண். கொரோனா தோற்று எல்லோர் வாழ்விலும் ஒரு பின்னடைவு ஏற்படுத்தியது. நான் மீண்டும் விளையாட துவங்குவது மட்டுமின்றி, பலருக்கும் பயிற்சி அளிக்க போகிறேன்." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
 
விளையாட்டில் தான் கடந்து வந்த வாழ்க்கை பாதையையும், வெற்றிகளையும் எண்ணி இது ஒரு நம்ப முடியாத அதிசயம் என்று அவரே வியப்புறுகிறார். தன் வழிகாட்டியான சாய் பத்மாவையும் Global AID நிறுவனத்தையும் மிகவும் நன்றியுடன் நினைவு கொள்கிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்