Icon to view photos in full screen

“முயற்சி எடுத்தால்தான் முன்னேற முடியும்”

நின்சி மிரியம் மான்ட்லீ மருத்துவராகி, மனித உடலை ஆராய வேண்டும் என கனவு கண்டார். ஆனால் 2014 வருடம், paramedical எனப்படும் துணை மருத்துவர் பயிற்சி பாடத்தில் முதல் வருடம் முடிந்த போது, அவரே அறுவை சிகிச்சைக்கு ஆளாக வேண்டியிருந்தது! மிக உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து  தண்டு வடம் (spinal cord) அடி பட்டதால் தன் உடலின் கீழ் பாகத்தை அசைக்க கூட முடியாமல் போயிற்று. கிட்டத்தட்ட ஒரு வருடம் சிகிச்சை பெற மருத்துவ மனையிலேயே தங்க வேண்டி இருந்தது. இந்த விபத்து நடந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டாலும், இப்போதும் சக்கரநாற்காலியை சார்ந்தே இருக்கிறார்.

“இந்த விபத்து எனக்கு மிகவும் அதிர்ச்சிகரமாகவும், வலி மிகுந்ததாகவும் இருப்பினும், என்னுள் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கி உள்ளது” என உணர்ச்சி ததும்ப கூறுகிறார் திருவனந்தபுரத்தை சேர்ந்த இந்த 26 வயது பெண்மணி. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவும், அன்பும், மேலும் இறைவன் மேல் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையும் இவருடைய தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் வெகுவாக அதிகரித்து உள்ளன. மருத்துவ மனையிலிருந்து இவர் திரும்பியபோது இவரின் தந்தை சக்கர நாற்காலி வீட்டில் எளிதாக வருவதற்கு ஒரு சரிவுப் பாதையை அமைத்து கொடுத்தார். வீட்டின் உள்ளே எளிதில் சக்கர வண்டியை செலுத்த அவரின் தாய் சில மாற்றங்களை செய்து கொடுத்தார்.
இவ்வாறு அவர் குடும்பத்தினர் செய்த மாற்றங்களை தவிர, ஓவியக்கலையின் மேல் இவருக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத ஆர்வமும், உத்வேகமும் துன்பங்களை மறக்கவும், வலியை பொறுத்துக் கொள்ளவும் இவருக்கு அரு மருந்தாக விளங்குகிறது. முதலில் பொழுதுபோக்காக இருந்த இந்த கலை ஆர்வம், நாட்பட நாட்பட இவரிடமிருந்து  இணை பிரியாததாக மாறிவிட்டது! இவருடைய ஓவியங்கள் இவரின் எண்ணங்களின் ஓட்டத்தை மிக துல்லியமாக பிரதிபலிக்கின்றன. “என்னுடைய ஓவியங்கள் என் திறமைக்காக மட்டுமல்ல, என்னுடனேயே பேசுகின்றன!” என பெருமிதத்துடன் கூறுகிறார்.

வெளி உலகுடன் ஒருங்கிணைந்து வாழ்வது என்பது ஒரு சவாலாகவே இருந்தது. அதனால் தொலைதூர கல்வி முறையிலேயே உளவியல் துறையில் பட்டம் பெற்று, பின்னர் மனோதத்துவ ரீதியில் குடும்பங்களுக்கு பிரச்சனைகளை சமாளிக்க அறிவுரை கூறுவதிலும் (Counselling and Family Therapy) முதுகலைப்பட்டம் பெற்றார். இந்த துறைகளில் தேர்ச்சி பெற்றதால், தன்னுடைய சொந்த உணர்சிகளையும் கட்டுக்குள் வைக்கவும், தன் அறிவாற்றலை முழுவதும் பயன் படுத்தவும் உதவியாக இருந்தது. “உன்னுடைய மனம் வலுவாக, திடமாக இருந்தால், உன் உடலும் முன்னேறும்” என்று அனைவருக்கும் இவர் போதிக்கிறார்.

“பால்லியம்இந்தியா” என்ற நிறுவனம் நடத்தும் வருடாந்தர் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பங்கெடுத்துக் கொண்டு, சக்கர நாற்காலி பயன் படுத்துவோரின் தேவைகளைப் பற்றி வலியுறித்தினார். மாநில தலைநகரில் சக்கர நாற்காலியில் செல்பவர்களுக்கு எந்த வித தடங்கலும் தடையும் இன்றி செல்ல ஏதுவாக இருக்க வலியுறித்தினார். “The Freedom Art Exhibition 2016 என்னும் அரங்கினில் “முதல் முதலாக என் திறன்களை வெளிப்படுத்தினேன், இயலாமையையோ ஊனத்தையோ அல்ல!”, என நினைவு கூறுகிறார்.

2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நின்சி “ப்ளூம் ப்ளூம்” என்ற பல்கலை கழகத்தில் பணி புரிகிறார். இங்கே ஆறு முதல் பதினெட்டு வயது வரை வயதுள்ள குழந்தைகளுக்கு தங்களுடைய பிரத்யேகமான வலிமைகளையும், ஆர்வங்களையும் கூட்டாக சேர்ந்து கண்டுபிடித்து கொண்டு, உணர்ந்து பயன் படுத்திக் கொள்ள பயின்றனர். தானே ஒரு நிறுவனத்தை நிறுவி, இம்மாதிரி கல்வி திட்டங்களை வகுத்து, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் இவர் விழைகிறார்.

தன் தாயார் சமைக்கும் உணவையே இவர் மிகவும் விரும்பி புசிக்கிறார். ஆனால், விபத்திற்கு பிறகு, தன் வாசனை உணர்வையும் ருசி உணர்வையும் இழந்து விட்டார். தன் குடும்பத்தோடு செலவிடும் நேரமும், அவர்கள் இவர் மேல் பொழியும் அன்பும், பாசமும் இவருக்கு மிகுந்த இன்பத்தை அளிக்கிறது. “நான் இதுவரை சாதித்தர்க்கெல்லாம் இறைவனுக்கே நன்றி சொல்ல வேண்டும். என்னை இறைவன் இம்மாதிரி அன்பை பொழியும் குடும்பத்தில் பிறக்க வைத்ததே நான் செய்த மாபெரும் பாக்கியம்!” என்று உவகை அடைகிறார்!

புகைப்படங்கள்:

விக்கி ராய்