Icon to view photos in full screen

"இது எனக்கு என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பணி புரியும் நிறுவனம் அளித்த ஜென்மம்"

உத்தராகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 42 வயதான நரேந்திரா பிஷ்ட் தான் பணி புரியும் DHL நிறுவனத்தை பற்றி வாய் ஓயாமல் புகழ்ந்து கொண்டே இருக்கிறார். இவருக்கு 25 வயதான போது, வேலைக்கு சேர்ந்து சில மாதங்களே ஆன போது சாலை விபத்தில் முதுகெலும்பு காயம் அடைந்தது. அப்போது முதல் அனைவரும் தன்னை ஆதரவுடனும், புரிதலுடனும் நடத்துகிறார்கள் என்று கூறினார்.
 
துர்கா சிங்க் பிஷ்ட்(64), ஹன்சி பிஷ்ட்(58) களின் மூத்த மகன் நரேந்திரா. சித்தார்கஞ் என்ற ஊரில் உள்ள சர்க்கரை ஆலையில் துர்கா சிங்க் பணி புரிந்து கொண்டிருந்தார். இந்த ஊரில்தான் நரேந்திரா 12ம் படித்தார். அதற்கு பிறகு நைனிதாலில் உள்ள Kumaon Universityஎன்னும் கழகத்திலிருந்து B.Sc. பட்டம் பெற்றார். அதற்கு பிறகு சமூகவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் (M.A. in Sociology) பெற்றார். டேரா டூன் நகரில் Jaiprakash Associates என்னும் நிறுவனத்தில் மூன்று வருடங்கள் பணி புரிந்தார். பின்னர் 2004ம் ஆண்டு மே மாதம் அதே நகரில் DHL நிறுவனத்தில் சேர்ந்தார்.
 
2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் நரேந்திராவும் அவருடைய நான்கு சக ஊழியர்களும் ரூத்ராப்பூர் என்னும் ஊருக்கு வேலை நிமித்தமாக சென்று இரவு நேரம் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கார் எதிரே வந்த பேருந்துடன் மோதியது. அவர்களில் இருவர் ஒரு காயமும் இல்லாமல் தப்பித்தார்கள். ஒருவர் ஒரே ஒரு பல்லை மட்டும் இழந்தார். இன்னொருவருக்கு சின்ன எலும்பு முறிவு ஆனது. காரின் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த நரேந்திராதான் பெரும் காயத்திற்கு உள்ளானார். கையிலோ காலிலோ ஒரு உணர்ச்சியும் இல்லை. அங்கிருந்த மக்கள் அவரை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு தூக்கி சென்றனர். இவர் தந்தை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர் என்பதால், இதை கேட்டால் அதிர்ச்சி அடைவார் என்பதால் அவருக்கு நேரடியாக செய்தியை சொல்லாமல், நரேந்திராவின் மாமாவிடம் செய்தியை தெரிவித்தனர்.
 
பின்னர் நரேந்திரா சாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு முதுகெலும்பு (cervical spinal) காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. 12 நாட்கள் அந்த மருத்துவ மனையில் இருந்த பின்னர் உடற் பயிற்சிக்கு (physiotherapy) மற்றொரு மருத்துவ மனைக்கு மாற்றப் பட்டார். சில நாட்களிலேயே எல்லாம் சரி ஆகிவிடும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அவருக்கு கழுத்துக்கு கீழே ஒரு உணர்ச்சியும் திரும்பவே இல்லை. வீட்டில் படுக்கையிலேயே கிடந்தார். "காலை வேளையின் என் படுக்கையை வெளியே நகர்த்தி என் மேல் சூரிய ஒளி படுமாறு படுக்க வைப்பார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் உள்ளே கொண்டு வந்து விடுவார்கள். என்னுடைய தாயும் அத்தையும் எனக்கு உணவு ஊட்டி விடுவார்கள். என்றாவது ஒரு நாள் என் காலை கீழே ஊன்றுவேனா என்று மிகவும் மன ஏக்கம் கொள்வேன்” என்று நினைவு கூர்ந்தார். உடற்புண்கள் வராமல் இருக்க தண்ணீர் படுக்கையை உபேயாகிக்க தொடங்கினார். ஒரே ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அவருடைய நிறுவனம் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டதுதான்.
 
2006ம் ஆண்டு ஒரு MRI scan எடுத்தபோது முதுகு தண்டு முழுவதும் பாதிக்க படவில்லை என்று தெரிய வந்தது. இதனால் சற்றே நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் செல்லும் பாதை மிக கடினமாகத்தான் இருந்தது. "ஒரு சின்ன குழந்தைக்கு சொல்லி கொடுப்பது போல அனைத்துமே எனக்கு சொல்லி கொடுக்க வேண்டி இருந்தது. உணவு உண்ண ஸ்பூனை பிடிக்க கூட முடியவில்லை" என்று நினைவு கூர்ந்தார். மெது மெதுவே விரல்களாலே ரோட்டியை பிச்சி எடுக்க கற்றுக் கொண்டார். ஆறு மாதத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு, ஒரு walker உதவியுடன் நடக்கவும் செய்தார். 2007ம் ஆண்டு தன்னை மீண்டும் வேலைக்கு சேர்த்து கொள்ளுமாறு DHL நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறைக்கு தன் கையாலேயே type  செய்து ஒரு கடிதம் எழுதினார்.
 
"DHL போல வேறு யாரும் இல்லை!" என உற்சாகத்துடனும் கூறுகிறார். 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பணியில் சேர்ந்தார். மேஜையில் உட்கார்ந்தவாரே பணி புரிந்தார். "இந்த நிறுவனத்தில் பாகுபாடு செய்வதோ, பாரபட்சமாக இருப்பதோ கிடையவே கிடையாது" என்று நன்றியுடன் கூறுகிறார். அவருடைய இளைய சகோதரர் பூபேந்திரா இவரை தினமும் ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, மாலை மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்வார். "என் தம்பி எனக்காக பல தியாகங்களை புரிந்து இருக்கிறான். மற்ற நகரங்களில் பெரிய வேலைகள் கிடைத்தாலும், அவைகளை எல்லாம் நிராகரித்து, எனக்காக இந்த ஊரிலேயே தங்கி உள்ளான்." என்று கூறினார். இவர் சகோதரி ஹேமா திருமணத்திற்கு பிறகு வேறு ஊரில் வசித்து வருகிறார். பூபேந்திராவின் தன் மனைவி ஹிமானி, இரண்டு குழந்தைகள் லக்ஷிதா (6), பிரான்ஷுல் (3 மாதம்) இவர்களுடன் வசித்து வருகிறார்.
 
நரேந்திராவின் வாழ்வில் பல சோதனைகள் உள்ளன. மலஜலம் கழிக்க முழு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது ஒரு பெரிய சோதனை. காலை 530க்கு எழுந்து, இயற்கை உபாதைகளை கழிக்க கிடத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகிறது. 10 முதல் 630 மணி வரை அலுவலகம். இதை தவிர, மருந்துகள், உண்பது , உடற் பயிற்சி எல்லாம் நேரம் ஆகிறது. குளிர் காலங்களில் வலி அதிகமாகிறது. ஆனால் தன்னைவிட அதிகமான பிரச்சனைகளை சந்திப்பவர்களை பார்த்து தைரியம் கொள்கிறார்.
 
நரேந்திராவிடம் தற்போதைய மனநிலை பற்றி கேட்டால், "மகிழ்ச்சியுடனும், சிரிப்புடனும் இருக்கிறேன் " என்று கூறுகிறார். வேறு எந்த ஆசையும் இல்லை என கூறினார். "எனக்கு என் குடும்பத்தினர், நண்பர்கள், நிறுவனம் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது. இதற்காக சமூகத்திற்கு ஏதாவது கைம்மாறு செய்ய விரும்புகிறேன். என் மாதிரி முதுகெலும்பு முறிந்தவர்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்யப் போகிறேன்."


புகைப்படங்கள்:

விக்கி ராய்