Icon to view photos in full screen

“பாடல்கள் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். பாட்டிற்கு ஏற்ப நடனம் ஆடவும் முயற்சிப்பேன்!”

8 வயதான மனிஷா குமாரியை கீழே கிடந்த கோலியை எடுக்குமாறு புகைப்படக்காரர் விக்கி ராய் கேட்டுக் கொண்டார். Cerebral palsy (CP) எனப்படும் பெருமூளை வாதத்தால் தாக்கப் பட்டுள்ள மனிஷா தன் விறைப்பான கைகளை  மிகவும் கஷ்டப் பட்டு அசைக்க முயன்றார். மெது மெதுவே கைகளை நகர்த்தி, நடுங்கி கொண்டிருந்த அவர் விரல்களால் அந்த கோலியை தொட்டு, தரையிலிருந்து மேலே அந்த கோலியை தூக்கியபோது அவர் கறிய கண்கள் பெருமிதத்தால் மிளிர்ந்தன!    
நகரங்களில் நன்கு படித்தவர்களுக்கே  பெரும்பாலோருக்கு CP பற்றிய விவரங்களும், இந்த நோயை பற்றிய அறிவும் மிகக் குறைவு. அப்படி இருக்க, சிறு கிராமத்தில் தினக் கூலிக்கு வேலை செய்யும், படிப்பறிவு அற்ற ஒருவருக்கு எப்படி இதைப் பற்றி விளக்க முடியும்? ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராம்கர் மாகாணத்தில் உள்ள ஹப்பு என்ற கிராமத்தில் 2021ம் வருடம் ஜனவரி மாதம் நடந்த சுகாதார முகாம் ஒன்றில் வந்த ஒரு மருத்துவர் மனிஷாவின் மருத்துவ சான்றிதழில் வெறுமனே “CP” என்று எழுதி கொடுத்தார். அந்த மருத்துவர் மனிஷாவின் பெற்றோர்களான முகேஷ் மாதோ, சவிதா தேவி இவர்களிடம் CP என்றால் என்ன என்றோ, இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கப் படும் என்றோ, இது கருவில் இருக்கும்போதே தாக்கி இருக்கலாம் என்றோ விளக்கவே இல்லை. CP தசைகளையும் அசையும் மற்றும் நகரும் சக்தியை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவில் பாதிக்கும் என்றும், முக்கியமாக CP என்பது முழுவதும் குணப்படுத்த முடியாது என்றாலும் அதை சமாளிக்க பல வியூகங்கள் உண்டு என்றும் பரிந்துரைக்கவில்லை.

மனிஷாவுக்கு ஒரு வயது ஆனபோது, உடலை அசைக்கவோ, நிற்கவோ, தவழவோ கூட முடியாமல் இருந்ததை கவனித்து அவர் பெற்றோர்கள் மிக்க கவலையும், மன உளைச்சலையும் அடைந்தனர். கிராமத்து மருத்துவர் ஒருவரிடம் காண்பித்த போது, அந்த மருத்துவரால் இதை புரிந்து கொள்ளவோ, இதற்கு சிகிச்சை அளிக்கவோ முடியவில்லை. பிறகு ராம்கர் மற்றும் ராஞ்சியில் உள்ள அரசாங்க மருத்துவ மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கும் ஒன்று உதவி கிடைக்கவில்லை. எட்டு வருடங்களாக மனிஷாவின் பெற்றோர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற ஆவலில் அவரை பற்பல மருத்துவர்களிடம் அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர்.

மனிஷாவிற்கு அவர் பெற்றோர்கள் நாடிய சான்றிதழ் வெறுமனே பெயருக்காக அல்ல. இதனால் மனிஷாவிற்கு கிடைக்ககூடிய சலுகைகளும் உரிமைகளுக்குமே! முகேஷ், சவிதா, அவர்களின் மூன்று குழந்தைகள், முகேஷின் அண்ணா அகிலேஷ், அவரின் மனைவி மற்றும் மகன், முகேஷின் தந்தை கைலாஷ் (55), தாய் மின்னி தேவி (50) எல்லோரும் ஒரு பெரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். கொத்தனார் வேலை செய்யும் முகேஷின் சம்பளம் மாதம் சுமார் ரூபாய் ஆறாயிரம். தினக்கூலி வேலை பார்க்கும் அகிலேஷுக்கும் கிட்டத்தட்ட அதே சம்பளம்தான். பட்டப் படிப்பு படித்து பாதுகாப்பாளராக பணி புரிந்து கொண்டிருந்த கைலாஷ் தன் வேலையை இழந்து, தற்போது ஒரு அரசாங்க வேலைக்காக முயன்று கொண்டிருக்கிறார். இந்த குடும்பம் அரை ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்து, அதில் அரிசி மற்றும் அந்தந்த பருவங்களில் பயிரிடப்படும் உருளை, வெங்காயம் போன்றவைகளை பயிரிடுகின்றனர்.
 
சவிதா தன்னுடைய இரண்டு மாத மகனை பராமரிப்பதிலும், வீட்டு வேலைகளை கவனிப்பதிலும் மூழ்கி இருக்கும்போது அவரின் நான்கு வயது மகன் சந்தனும்  அவர் உறவினரும்  உள்ளூர் குழந்தைகளை பராமரிக்கும் மையத்திற்கு சென்று விடுவார்கள். மனிஷாவின் நாள் காலை எட்டு மணிக்கு காலை உணவும், பன்னிரண்டு மணிக்கு மதிய உணவும், இரவு  எட்டு மணிக்கு இரவு உணவும் உட்கொள்வது மட்டுமே! யாருடனாவது பேசுவதோ, அசைவதோ, எங்காவது செல்வதோ கிடையவே கிடையாது. எப்போதாவது மின்னி தேவி ஏதாவது விளையாட்டு பொம்மைகளை கொடுப்பார். சில சமயம் கைலாஷ் மனிஷாவை தோளில் சுமந்து கொண்டு சாலைக்கு சென்று வழிப்போக்கர்களை காட்டுவார். அவ்வளவே!

அசைவற்றதை போல  தோன்றும் அவர் உடலுக்குள்ளே புலன்களும், உணர்ச்சிகளும் கரை புரண்டு ஓடுகின்றன! நாம் பேசுவதை நன்கு புரிந்து கொண்டு, சைகை மொழியிலேயே சரியாக பதில் அளிக்கிறார். சந்தனுடன் விளையாடி, சண்டை இடும்போது தன் பலம் முழுவதையும் அவனை திரட்டி தள்ளி விடுகிறார்! சங்கீதம் கேட்கும்போது அவர் முகம் மலர்ச்சி அடைகிறது. திருமணங்களில் அகிலேஷ் பாட்டு பாடும்போது மனிஷா ஆதரவுடன் எழுந்து நிற்கவும், உடலை அசைக்கவும் முயற்சிக்கிறார்.
 
அந்த மிளிரும் கண்களின் ஒளி மங்கி விட்டால் நம் இதயமே நொறுங்கிவிடும்! நடமாடும் சிகிச்சை அளிக்கும் வண்டி கிடைக்கும் இந்த காலத்தில், அத்தகைய வண்டி இவர் இருக்கும் இடம் வந்து சிகிச்சையும் உடற்பயிற்சியும் அளித்தால் இவர் கல்வி கற்கவும் எதிர்காலத்திற்கு ஏதுவாகவும் இருக்கும். அப்படி நடந்தால், வெறுமனே வழிப்போக்கர்களை பார்த்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக அவர் இந்த உலகில் உள்ளவர்களுடன் யார் தயவுமின்றி, நன்கு கலந்து உறவாடி ஒன்றி இருக்க முடியும் என நம்பிக்கை கொள்வோமாக!

புகைப்படங்கள்:

விக்கி ராய்