Icon to view photos in full screen

"நான் ஊனம் இல்லாதபோது இருந்ததை விட, இப்போது இன்னும் கடுமையாக உழைக்கிறேன்!"

மும்பையில் வசிக்கும் 49 வயதான மகேந்திர விலாஸ் பிட்டாலேயின் வாழ்க்கையில் 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி மறக்க முடியாத நாள். அந்நாளில் அவர் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஒன்று உண்டானது. ஊடங்களால் "7/11 மும்பை ரயில் தொடர் குண்டு வெடிப்பு" என அழைக்கப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர்.
 
மும்பை வில்லே பார்லேயில் உள்ள கண்ணாடி மற்றும் அறைகளங்கள் தயாரிக்கும் Morbiwalas  என்னும் நிறுவனத்தில் பணி புரியும் அவர், வழக்கமாக மாலை 730 மணிக்கு அலுவலகத்தை விட்டு புறப்படுவார். வழக்கமாக, அவரும், அவர் நண்பர்களும் மாலை ஏழரை மணிக்கு பிறகு சேர்ந்து தேநீர் குடிக்க சந்திப்பார்கள். ஆனால் அன்று அவர் மேலாளர் ஒரு கடையிலிருந்து ஒரு பொருளை வாங்கி வர ஆறு மணிக்கே அலுவலகத்திலிருந்து கிளம்ப சொன்னார்.
 
இதனால் ஜோகேஸ்வரி புறநகர் ரயில் நிலையத்தில் சற்று முன்னராகவே வந்து சேர்ந்தார். திடீர் என்று ஒரு வெடிகுண்டு வெடித்ததில் அவர் மேலே தூக்கி எறியப்பட்டார். முதலில் தனக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பினார். ஆனால் ஐந்து நிமிடங்களில் சற்று சமாளித்துக் கொண்டு தன சுற்று முற்றும் பார்த்த போது , எங்கும் மனித உடல்கள் சிதறி கிடந்ததை கண்ணுற்றார். "எனக்கு இருந்த ஒரே கையையும் நான் இழந்து விட்டேன்" என எண்ணினார். தன்னுடைய கை பேசியை எடுத்துக் கொண்டு தன் மாமனையும், தன் அடுத்த வீட்டுக் காரரையும் அழைத்தார். இடது கையில் ரத்தம் கசிய, BSS Hospital என்னும் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப் பட்டார். தொலைக்காட்சி நிருபர்கள் அவரின் பெயரை கேட்டு வெளியிட்ட போதுதான் அவர் உறவினர்கள் அவர் எங்கு இருக்கிறார் என்று அறிந்தனர்.
 
அடுத்த நாள் அவர் கை துண்டிக்கப் பட்டது. "எனக்கு மார்பு பகுதியில் மூச்சு முட்டி நெரிசல் ஏற்பட்டது. வெடிகுண்டின் நெடி என் மூக்கை துளைத்தது." என்று நினைவு கூர்ந்தார். தோலில் செய்த ரணசிகிச்சையும், ஒட்டுதலும் சரியாக பல நாட்களாகும் என்பதால், ஒரு மாதம் கழித்து மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்க்கு வந்தார். சில நாட்களிலேயே அலுவலகத்தில் பணியும் தொடங்கினார். எந்த ரயிலில் முன்பு பயணம் செய்தாரோ மீண்டும் அதே ரயிலில் பயணம் செய்தார். அவர் நிலைமையை கண்டு ரயிலில் பயணிகள் அவரை பரிதாபத்துடனும், ஆச்சரியத்துடனும் நோக்கினார்கள். சர்வ சாதாரணமாக "என்ன நடந்ததோ நடந்து விட்டது. என்ன செய்ய முடியும்?" என்று கூறுகிறார்.
 
மஹேந் என்று அனைவராலும் அழைக்கப் படும் அவர் மும்பையில் உள்ள போரிவிலி புறநகர் பகுதியில் உள்ள கோவிந்தநகர் என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தார். அந்த இடம் புனரமைப்பு செய்யப் படுவதால் தற்போது தாஹிசார் பகுதியில் வசித்து வருகிறார். அவர் தந்தை விலாஸ் பிட்டாலே இந்தியன் ரயில்வேஸ் நிறுவனத்தில் டீசல் மெக்கானிக் பணியில் இருந்தார். 2015ம் ஆண்டு காலமானார். தாய் வைஷாலி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரிந்து, பின்னர்  2019 ம் ஆண்டு காலமானார்.அவருடைய மராத்தி மொழி பள்ளிக்கூடம், வித்யா விகாஸ் சபா கோவிந்தநகரிலேயே அவர் வீட்டிற்கு அடுத்த கட்டத்திலேயே இருந்தது. வீட்டில் செய்யவேண்டிய பாடங்களை மறந்து, அவ்வப்போது பள்ளி சாவியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று அவசர அவசரமாக முடித்து கொடுத்துவிட்டு வருவார்! ஆனால் கிறுக்கலாக இருந்த அவர் கை எழுத்தை பார்த்து அவர் ஆசிரியர்கள் அவரை கண்டித்தனர். ஒரு மணி நேரத்திற்குக்கு ஒரு ரூபாய் என சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டுதல், கோலி விளையாடுதல், மற்றும் நண்பர்களுடன் போலிஸ்காரன் திருடனை பிடிப்பது விளையாடுதல் போன்றவை அவரின் மலரும் நினைவுகள்! இன்றும் அந்த நண்பர்களுடன் முகநூல் வழியாக  தொடர்பில் உள்ளார்.
 
படிப்பில் சராசரி மாணவனாக இருப்பினும் படம் வரைவதில் அவருக்கு தனி ஆர்வமும், திறமையும் இருந்தன. பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் L.S. Raheja School of Fine Arts, என்னும் கல்லூரியில் வணிகத்திற்கு பயன் படும் ஓவியங்கள் தீட்டுவதில் பயிற்சி பெற்றார். கண்ணாடியில் வரைதல் என்னும் நூதனமான துறையில் நுழைந்தார். தாஹிசார் பகுதியில் இருக்கும் Glass Vision என்னும் நிறுவனத்தில் 1998ம் ஆண்டு சேர்ந்தார். 2000ம் ஆண்டு ஷார்ஜா நகரில் நடைபெற்ற கோகோ கோலா கோப்பைக்கு இந்நிறுவனம் செய்த கோப்பை முழுக்க முழுக்க அவரால்தான் வடிவமைக்கப் பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு இந்நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியை சந்தித்து சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு கண்ணாடி மட்டையும் அன்பளிக்காக அளித்தனர்.
 
மேலும் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க துபாய் மற்றும் மஸ்கட் நகரங்களில் பணி புரிந்தார். டொயோட்டா கம்பெனியின் காட்சியறைக்கு ஐந்து மாடி கட்டடத்திற்கு முழுக்க முழுக்க 400 கண்ணாடிகளாலேயே வடிவமைப்பு செய்து கட்டி முடித்தார். 2005ம் ஆண்டு Morbiwalas நிறுவனத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார். வெடிகுண்டு விபத்திற்கு பின், அந்த நிறுவனம் அவருக்கு கேபிளால் இயக்கப்படும் செயற்கை கை பொருத்த பண உதவி செய்தனர். முழுவதும் தானே இயங்கும் prosthetic hand எனப்படும் செயற்கை கை விலை ஏழு லட்சம் ரூபாய் என்பதால் அவரால் அதை வாங்க முடியவில்லை. ஆனால் 2007ம் ஆண்டு ரஜனீஷ் காக்டெ என்ற பத்திரிகையாளர் இவரைப் பற்றி ஊடகங்களில் திரையிட்ட போது, நிதி திரட்ட முடிந்ததால், அவரால் இந்த prosthetic hand ஒன்றை வாங்க முடிந்தது. இதனால் தன் தொழில் மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, சைக்கிள் ஓட்டுதல் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபட முடிந்தது.
 
நிலையான வருமானம் வேண்டும் என்பதால் 2008ம் ஆண்டு அரசு வேலைகளுக்கு முயற்சி செய்தார். நாடாளு மன்ற உறுப்பினர் கிறித் சோமையா உதவியுடன் ரயில்வே அமைச்சர் மூலம் Indian Railways நிறுவனத்தில் 2015ம் ஆண்டு "வெடிகுண்டு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்கள்" ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தது. ரயில் பெட்டிகளை பராமரிப்பது , சுத்தப்படுத்துவது போன்றதே வேலை. ஆனால் அவரது கணினி மற்றும் வடிவமைப்பு திறமைகளை அறிந்தவுடன் குமாஸ்தா வேலைக்கு உயிர்தப்பட்டது மட்டுமில்லாமல், ரயில் பெட்டிகளின் உள்ளே அலங்கரிப்பது மற்றும் போஸ்டர்கள் செய்வது போன்ற வேலைகளும் அளிக்கப்பட்டன.
 
சனி, ஞாயிறு கிழமைகளில் தன்னுடைய Royal Enfield (RE) அல்லது Yamaha RX வண்டிகளை எடுத்துக் கொண்டு Convoy Control Club Mumbai மூலம் ஊனமுற்றோர் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த செயல் படுகிறார். மற்ற RE ஓட்டுனர்களுடன் சேர்ந்து நெடுந்தூரம் பயணித்து சமூக விழுப்புணர்ச்சி ஏற்படுத்துகிறார். கோவாவில் ஆண்டு தோறும் நடக்கும் RE Rider Mania மற்றும் India Bike Week நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கிறார்.
 
அதீத தொழில்துட்பம் பொருந்திய செயற்கை கைகள் (hi-tech prosthetics) கிட்டத்தட்ட நாற்பது லட்சம் ரூபாய் ஆகிறது. இவற்றை உருவாக்கும் நிறுவனங்களுக்கு விலையை குறைக்க பற்பல வியூகங்களை பரிந்துரைக்கிறார். இதைத்தவிர, ஊனமுற்றோர்களுக்கான சக்கர வண்டி மற்றும் செயற்கை உறுப்புகளை செய்ய வடிவமைப்பும் செய்து கொடுக்கிறார். "இவைகளின் விலை குறைந்தால்தான் ஊனமுற்றோர் யார் தயவும் இல்லாமல் வாழமுடியும்" என்று கூறுகிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்