Icon to view photos in full screen

“உங்கள் மகள் வளர்ந்தபின் ‘என்னை ஏன் வாழ வைத்தீர்கள்?’ என்று கேட்டு உங்களை வெறுப்பார்” என என் பெற்றோர்களை பலர் எச்சரித்தனர்”

ஜோத்பூர் நகரை சேர்ந்த 66 வயதான டாக்டர் குசும்லதா பந்தாரி மூன்றரை வயதே இருக்கும் போது “பல்பர் போலியோ” என்னும் நோயால் தாக்கப் பட்டார். இதனால் கழுத்துக் கீழே உடலை அசைக்க முடியாமல் வாதம் வந்து விட்டது. ஊரில் உள்ளவர்கள் எல்லாம் “இவள் வாழ்ந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. சாவதே மேல்!” என்று ஏசினார்கள். குசுமின் தந்தை ஒரு மருத்துவர். அவரும், அவர் மனைவி சீதாவும் குழந்தையை நாட்டின் பற்பல சிறந்த மருத்துவ நிபுணர்களிடம் அழைத்து சென்றனர். மும்பை நகரில் மகாலட்சுமி என்ற இடத்தில உள்ள SRCC Children’s Hospital என்ற மருத்துவமனையில்: “குழந்தையின் அறிவு நன்கு செயல்படுகிறது. இதனால், உடல் ஊனத்தை விட்டு விட்டு, இந்த மன வலிமையை எவ்வாறு பயன் படுத்தலாம் என யோசியுங்கள்” என சரியான அறிவுரை பரிந்துரைத்தனர்
 
சீதா தன் மகளை தானாகவே யாரயும் சார்ந்து இருக்காமல் சுதந்திரமாக இருக்க பழக்க படுத்துவது என மன உறுதியுடன் செயல் பட்டார். தன் மகளுக்கு உள்ள மிக சிறிய அசைவுகளை கொண்டே தையல் தைக்கவும், வீட்டு வேலைகளை செய்யவும் கற்று தந்தார். முறையாக கல்வி கற்றல் என்பது குசுமுக்கு எதேச்சையாக அமைந்தது. குசுமின் மூத்த சகோதரர் கல்வியில் சற்று பின்தங்கி இருந்ததால் கல்வி கற்று தர வீட்டுக்கு ஒரு ஆசிரியர் வந்திருந்தார். அப்போது சீதா பதினொரு வயதான குசுமையும் அவரின் மூன்று வயது சகோதரியையும் பராமரித்துக்கொண்டு இருந்தார். .அண்ணன் படிக்கும் பாடங்கள் குசுமை வெகுவாக கவர்ந்து விட்டன. குசும் அந்த ஆசிரியரிடம் பற்பல கேள்விகளை ஆவலுடன் கேட்டார். அதனால் அந்த ஆசிரியர், குசுமுக்கு முதல் வகுப்பு பாடங்களைக் கற்று கொடுக்க துவங்கினார்.
 
கல்வியில் அதிக ஆர்வமும் திறமையும் மிக்க குசும் பத்து ஆண்டு கல்விகளை மூன்றே ஆண்டில் சிறப்பாக பயின்று பொது தேர்வில் பங்கு பெற தயார் நிலையில் இருந்தார். இந்த அனுபவம் அவருக்கு மிக இனியதாகவும் பிடித்தமானதாகவும் இருந்தது. “சினிமா செல்வது போல இதுவும் மிகவும் ரசிக்க தக்கதாக இருந்தது!” என்று களிப்புடன் நினைவு கூர்ந்தார். அவர் ஆசிரியர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பரிட்சையில் முதல் முயற்சியிலேயே வெற்றி வாகை சூடினார். பட்டப் படிப்பை பெண்கள் கல்லூரியில் முடித்து, அரசியல் அறிவியலில் MA முது நிலை பட்டப் படிப்புக்கு, ஆண்கள், பெண்கள் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் சேர்ந்தார். இதுவே இவருக்கு ஆண்களுடன் பழக கிடைத்த முதல் வாய்ப்பு. எல்லோரிடமும் நன்கு பேசி சகஜமாக பழகும் குசும்லதா கல்லூரியில் முதல் மாணவியாக வந்து தங்கப் பதக்கத்தை வென்று அற்புத சாதனை படைத்தார். 
 
சீதா தன் பெண் கல்வி கற்பிக்கும் ஆசிரியராக வேண்டும் என கனவு கண்டார். தன் கணவர் இது முடியவே முடியாது என்று ஐயங்கள் எழுப்பும் போதெல்லாம் “அவளை கல்லூரி ஆசிரியராக பணி புரிய வாய்ப்பை எவரும் கொடுக்கா விட்டால், நானே ஒரு கல்லூரி துவங்கி அதில் அவளை ஆசிரியராக வேலைக்கு அமர்த்துவேன்” என்று மிக தைர்யமாக பறை சாற்றினார்! அவ்வளவு தூரம் தனி கல்லூரி துவங்கவெல்லாம் தேவையே இருக்கவில்லை! முனைவர் பட்டம் பெற்ற பின் “டாக்டர் குசும்லதா” எல்லோராலும் மதிக்கப் பட்ட பேராசியராக ஜோத்பூரில் உள்ள ஜெய் நாராயண் வியாஸ் பல்கலைகழகத்தில் யாவரும் போற்றும் வகையில் பணி புரிந்தார்.
 
ஊனமுற்ற பல மாணவர்கள் புத்தகங்கள் வாங்கவோ, கல்லூரி கட்டணம் செலுத்தவோ வசதி இல்லாமல் இருந்தார்கள். தன்னுடைய சில நண்பர்களை அணுகி, அவர்கள் மூலம் இரண்டு அறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு வெளிமுற்றம் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். மேலும் சில நண்பர்கள் பாத்திரங்கள், படுக்கைகள் முதலியவற்றை வாங்கி கொடுத்து, சமையல் எரிவாயு, மின்சார கட்டணம் முதலியவைக்கு தேவையான நிதி உதவியை அளித்தனர். இதுவே “பிரக்யா நிகேதன்” என்ற அவருடைய பணி நிறுவனத்தின் ஒரு சிறிய துவக்கம்.இன்று இது ஒரு தங்கும் விடுதியாக உருவெடுத்து, நூறு கண் தெரியாத, மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அடைக்கலம் தந்து, அவர்களுக்கு தங்க இடம், உணவு மற்றும் அவர்களின் ஊனத்தின் தாக்கத்தை குறைக்க கருவிகளையும் (assistive devices) வழங்குகிறது.

டாக்டர் குசும்லதா தன் மாணவி டாக்டர் நிர்மலா பிஷ்னாய் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். தோட்ட வேலையையும், மோட்டார் மூலம் செயல்படும் தன் தையல் இயந்திரத்தில்  தைக்கவும் மிகவும் விருப்பம். ஊனமுற்றோர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் கடுமையாக உழைத்து, பல சாதனைகளையும் புரிந்திருக்கிறார். ஊனவற்றகளுக்கு ஜோத்பூர் பல்கலைகழகத்தில் படிப்பு கட்டணம் தள்ளுபடி, அரசாங்க ஊழியர்களுக்கு அவரவர் மாகாணத்திலேயே பணி அழிப்பது, தபால் மூலம் வாக்களிக்கும் சலுகை போன்ற பலவற்றை சாதித்து இருக்கிறார். “Kisi ki muskurahaton” (“ஒருவர் முகத்தில் புன்னகை தவழ செய்வதும் ஒரு வித தியாகமே”) என்னும் முகேஷின் பழைய பாட்டு இவரின் எண்ண ஓட்டத்தை துல்லியமாக பிரதிபலிக்கின்றது. மற்றவர்களின் துயரங்களை துடைத்து அவர்களின் முகத்தில் புன்னகை படர செய்வதே குறிக்கோளாக கொண்டு குசும்லதா வாழ்கிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்