Icon to view photos in full screen

“சும்மா உட்கார்ந்து கொண்டு எதாவது நடக்கட்டும் என்று எதிர்பார்த்து இருக்காதே! நீயே முயன்று செயல்படு! யாரையும் சார்ந்து இருக்காதே!”

ஊனமுற்றோர் தாங்கள் எப்படி ஊனம் அடைந்தோம் என்று நினைவு கூறும்போது, சில விசித்திரமான நினைவுகளும், கதைகளும் வெளிப்படும்!, டில்லி நகரில் வாழும் 45 வயதான கவிதா மாத்துரின் வாழ்க்கை கதையும் அவ்வாறானதே. இவருக்கு இரண்டு வயதே ஆன போது, ஒரு நாள் அவருடைய தாயார்  அவரை அவசர அவசரமாக குளிப்பாட்டி, சரியாக ஈரம் கூட துடைக்காமல் வேப்ப மரத்தடியில் விளையாடவிட்டு விட்டு தன் பணியை கவனிக்க வயல்வெளிக்கு சென்று விட்டார். ஈர உடலுடனேயே விளையாடியதால், அன்றிரவே அவருக்கு கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. இதனால் போலியோ நோயும் பக்கவாதமும் அவரை தாக்கியது. என்ன வினோதம் பாருங்கள்! போலியோ நோய் தாக்கினால் பிறகு பக்கவாதமும், காய்ச்சலும் வரும் என்றே விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கூறுகிறார்கள். இங்கு நடந்ததோவெனில் தலைகீழாக இருந்தது.     
 
குடும்பத்தினர் அவரை கிராமத்து ஆயுர்வேத மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அந்த சிகிச்சையின் பயனாக, அவர் நடக்க ஆரம்பித்தார். ஆயினும் அவருடைய இடது கையும், வலது காலும் வலுவிழந்தே இருந்தன. அவருடைய முதுகெலும்பு சற்று அதிகமாக வளைந்து கூன் போட்டு இருந்ததால் அவருக்கு தன் உடலை சமநிலையாக வைத்து கொள்வதில்  மிகவும் சிரமம் ஏற்பட்டது. அவர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது தன் தாயை இழந்தார். இறக்கும் வரை தாயார் தன் மகளுக்கு அன்புடன் வலி குறைவதற்காக நன்கு தடவி கொடுப்பார். இது கவிதாவுக்கு மிகவும் இதமாக இருந்தது. கவிதா இவ்வளவு ஆண்டுகள் கழிந்தும் தன் தாயின் அன்பையும், ஆதரவையும் இழந்ததை நினைவு கூர்ந்து  மிகவும் மன உளைச்சல் அடைகிறார். தாய் இறந்தாலும், அவரின் மற்ற குடும்பத்தினர்கள் அவரை நன்கு  பாதுகாத்து அன்பும் ஆதரவும் காட்டி  பல விதங்களில் உதவினார்கள். அவருடைய மூத்த சகோதரி கீதா அவருடன் பள்ளிக்கு செல்லும்போது, அவருடைய பையை சுமந்து வருவார். பள்ளி முடிந்தவுடன் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக பள்ளியில் இருந்து ஆவலுடன் வீட்டை அடைய அவசர அவசரமாக ஓடி வரும்போது இவர் தள்ளப்பட்டு கீழே விழுந்து விடுவார் என்ற அபாயத்தால் பள்ளி முடிவதற்கு பதினைந்து நிமிடம் முன்னமே அவர் பள்ளியை விட்டு கிளம்ப அனுமதி பெற்றார். அவரின் தந்தை பிரதாப் சிங் பேருந்து கண்டக்டராக பணி புரிவதால், அவருடைய சகோதரி கீதாவும், பாட்டி ஹுகும் கவுர் தேவியும்தான் அவருக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார்கள். கவிதாவின் பாட்டி மறைந்து பதிமூன்று ஆண்டுகள் கழிந்தவுடன் கூட, அவருடைய பரிவான, இனிமையான, நகைச்சுவை நயம் மிக்க பேச்சையும், முழு குடும்பத்தையும் அவர் இணைத்து வீட்டை இன்ப மயமாக்கியத்தை மன நெகிழ்வுடன் நினைவு கூர்கிறார்.
 
பள்ளிக்கூட படிப்பு முடிந்தபிறகு கவிதா சொநேபெட் நகரில் உள்ள டிகா ராம் முது நிலை மகளிர் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் தங்கும் விடுதிகளிலேயே தங்க குடும்பத்தினரின் அனுமதி பெற்றார். இதனால் கிடைத்த சுதந்திரத்தால் உந்தப்பட்டு கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வேலைக்கும் மனு போட்டார். தையல் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக ஓராண்டு கால ஒப்பந்தத்துடன் தொடங்கினார். ஆனால் அந்த நிறுவனத்தில் மேலாளர்கள் அவருடைய ஊனத்தை சாக்காக சொல்லி முட்டுக்கட்டை போட்டதால் அந்த வேலையில் நீண்ட நாள் பணி புரிய முடியவில்லை. பிறகு சில காலம் வீட்டில் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து சம்பாதித்தார். பிறகு சில காலம் தொலைபேசி மூலம் தள்ளுபடி அட்டைகள் விற்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் இந்த பணியில் நுகர்வோர்களை ஏமாற்றுவதாக உணர்ந்தார். அவருடைய கொள்கைகளுக்கு புறம்பாக இருப்பதால் இந்த வேலையையும் ராஜினாமா செய்தார். இதற்கு பிறகு அரசாங்கம் நடத்தும் தொழில்துறை பயிற்சி கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தார். இன்று வரை இங்கேயே பணி புரிகிறார். .பதிமூன்று கிலோமீட்டர் பயணித்து பெண் குழந்தைகளுக்கு தையல் கலை கற்று கொடுத்தார்.  

கவிதாவுக்கு மிகவும் உற்சாகம் அளிப்பது தன்னுடைய மாணவர்களுடன் பழகுவதே. அவர்கள் அளிக்கும் பாராட்டு கடிதங்களும், அவர்கள் தைத்து கொடுக்கும் கைகுட்டைகளும் மற்ற ஆடைகளும் அவருக்கு மிகவும் திருப்தியை அளிக்கின்றன. டாக்டர் கிரண் பேடி நடத்தும் நவ்ஜோதி இந்தியா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பால் குருகுல் என்னும் பள்ளியில் “அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும்” என்ற இலக்குடன் தன்னார்வத்துடன் சம்பளம் இல்லாமலேயே பணி புரிகிறார். அவருடைய செல்ல நாய்க்குட்டி “டாலர்” அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான, இணை பிரியாத தோழன்!. இல்லை இல்லை! டாலர் அவரின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினரே!

புகைப்படங்கள்:

விக்கி ராய்