Icon to view photos in full screen

“இம்மாதிரி சோதனை மிகுந்த காலங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிக்க வேண்டும்”

இந்த EGS தொடர் தங்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையையும் அளிக்கன்றன என்று வாசகர்கள் பல முறை எங்களிடம் தெரிவிக்கன்றனர். ஆனால் எல்லா கதைகளுமே அவ்வாறு இருக்கும் என எங்களால் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஊனமுற்றவர் ஒருவரின் வாழ்வு நாங்கள் அவரை சந்திக்கும் முன்பு மோசமாக மாறினது கூட உண்டு. ஓடிஷா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் உள்ள 35 வயதான கௌஷல்யா ஸ்வைன் என்பவற்றின் வாழ்க்கை அப்படிப்பட்டதே. கோவிட்-19 தொற்றினால் தன் பெற்றோர்களின் ஒரே மகனான தன் மூத்த சகோதரரை இழந்தார்.
70க்கு மேல் வயதான அந்த பெற்ற்றோர்கள் இந்த சோகமான நிகழ்வினால் மிகவும் மனம் ஒடிந்து போய் உள்ளார்கள். கௌஷல்யாவின் தாய் பேசுவது கூட இல்லை. தினக் கூலி வேலை பார்க்கும் தந்தையோவேனில் நாளுக்கு நாள் உடல் வலிமையையும் மன உறுதியையும் இழந்து கொண்டே இருக்கிறார். இறந்த சகோதரரின் மனைவி தீராத மன உளைச்சலுக்கு ஆட்பட்டுள்ளார். தன் இரண்டு குழந்தைகளின் படிப்புக்கான பணத்தை எப்படி ஈட்டுவது என்ற கவலையுடனேயே வாழ்ந்து வருகிறார். இவர்களை தவிர அந்த குடும்பத்தில் கௌஷல்யாவின் திருமணம் ஆகாத சகோதரி ஒருவரும் உள்ளார். ரேஷன் முறையில் கிடைக்கும் அரிசியையும், தங்களிடம் உள்ள ஒரு பசு தரும் பாலையும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் மானியத் தொகையையும் வைத்துக் கொண்டே இவர்கள் வாழ்க்கையை சமாளிக்கிறார்கள். 
தங்களின் வாழ்க்கை சக்கரத்தின் அச்சாணியே முறிந்து விட்டது போல இவர்கள் மனம் ஒடிந்து போய் உள்ளார்கள். கௌஷல்யா முன்பெல்லாம் பஞ்சில் திரிகள் செய்து அவைகளை பூரி ஜகன்னாதர் கோவிலுக்கு சென்று அங்கே  விற்பார். “என் சகோதரர் என்னை கோவிலுக்கு பேருந்தில் அழைத்து செல்வார். ஆனால் இப்போது பேருந்து கட்டணம் கட்டக் கூட எங்களிடம் பணம் இல்லை!”, என மிகுந்த சோகத்துடன் கூறுகிறார் கௌஷல்யா. விதியின் இந்த கொடிய திருப்பத்தால் இவரின் நம்பிக்கையும் தைரியமும் அதல பாதாளத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. “ஆனால் சும்மா வீட்டில் உட்காரவும் பிடிக்கவில்லை. வீட்டில் இருந்தால் மற்றவர்களுடைய துக்கம் வழியும் முகத்தை பார்த்து கொண்டே இருந்து இன்னும் மனச்சோர்வே அதிகம் ஆகிறது. அதனால் வெளியே சென்று என் நண்பர்களுடன் சற்று அளவளாவி வருகிறேன்” என்று தொடர்ந்தார்.
  
கௌஷல்யா பிறப்பிலேயே ஒரு காலில் பலம் இல்லாமல் பிறந்தார். இதனால் 12 வயது வரை தவழ்ந்து கொண்டும், ஒரு காலை இழுத்துக் கொண்டும்தான் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்வார். அந்த வயதில் அவருடைய உறவினர் ஒருவரின் பரிந்துரைத்தல் பேரில் நடக்க முயன்றார். அந்த உறவினர் ஒரு கைத்தடியையும் கௌஷல்யாவுக்கு கொடுத்து அதை பயன் படுத்த பயிற்சியும் அளித்தார்.
“என் சகோதரர் உயிருடன் இருக்கும் போது அவர்தான் என்னை பள்ளிக்கு கூட்டி செல்வார். பத்தாம் வகுப்பு பரிட்சையில் தேர்வு பெறாததால், அத்துடன் படிப்பை முடித்து கொண்டேன்” என்று கௌஷல்யா கூறுகிறார்.  வீட்டில் தன் சகோதரின் மனைவிக்கு கறிகாய் நறுக்குவது, மண் அடுப்பில் சமையல் செய்வது போன்ற வீட்டு வேலைகள் செய்து உதவுகிறார்.

2019ம் ஆண்டு தாக்கிய “பானி” புயலால் இந்த குடும்பம் சந்தித்த இழப்புகளை ஈடு செய்ய அரசாங்கம் கொடுக்கும் இழப்பீடு தொகையை பெற புபநேஷ்வர் நகரில் உள்ள  Jogamaya Charitable Trust (JCT) என்ற அறக்கட்டளை உதவி செய்து வருகிறது. ஆனால் JCT செய்ய முடியாத ஒன்றை கௌஷல்யாதான் தன் சொந்த முயற்சியால் செய்ய வேண்டும் – தன் எதிர்மறை எண்ணங்களையும். நிராதரவாக இருக்கிறேன் என்ற உணர்வையும் களைந்து தைரியமாக எதிர்காலத்தை நேர்மறை எண்ணங்களோடு சந்திக்க வேண்டும்!

புகைப்படங்கள்:

விக்கி ராய்