Icon to view photos in full screen

"நான் அரசு பணியாளராக பணி புரிந்து, அரசாங்கத்தின் எல்லா திட்டங்களும், மக்களுக்கு சென்று அடைய உழைக்க விரும்புகிறேன்."

கமல் பாமோர் சிறு குழந்தையாக இருக்கும்போது திடீரென்று சின்னம்மை (chickenpox) தாக்குதலால் கண் பார்வை இழந்தார். ஆனால் தற்போது 29 வயது ஆகி இருக்கும் இந்த இளைஞர் மத்திய பிரதேஷ் மாநிலத்தின் கண் தெரியாதவர்களின் கிரிக்கெட் அணியில் விளையாடுகிறார். விளையாட சமீபத்தில் இந்த அணியுடன் கோவா சென்று வந்தார். கமலுக்கு பல ஊர்களுக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் ஆடுவது இதற்கு ஏதுவாக இருக்கிறது. இதனால் சிக்கிம், கோவா மற்றும் பல இடங்களுக்கு பயணம் புரிந்திருக்கிறார். இவரின் லட்சிய விளையாட்டு வீரர் மஹேந்திர சிங் தோனி. தோனியின் விளையாட்டு திறமையும், தலைமை பண்புகளும், கலங்காமல் இருக்கும் சுபாவமும் இவரை மிகவும் கவர்ந்திருக்கின்றன. கிரிக்கெட் தவிர சதுரங்கம் ஆடுவதிலும் இவர் கை தேர்ந்தவராக இருக்கிறார்.
 
கமல் தன் நம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களுடனும் சிறந்து விளங்குகிறார். தன் வாழ்க்கையில் நடந்த துரதிருஷ்டத்திற்கு ஒரு பொழுதும் அங்கலாய்ப்பது இல்லை. அரசியல் பாடத்தில் B.A. Honours பட்டம் பெற்றுள்ளார். Scholars Home Public School , கல்லூரி படிப்பிற்கு Institute for Excellence in Higher Education போன்ற மதிப்பு மிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து இருக்கிறார். தற்போது அரசு பணியில் சேர வேண்டிய கடினமான பரீட்சைக்காக (Civil Services exams) இணைய தளம் வழியாக பயிற்சி பெற்று வருகிறார். அரசு பொது நல திட்டங்கள் மக்களுக்கு சரியாக சேர வேண்டும் என்பதே இவரின் அவா.
 
கமல் போபாலில் ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தார். தந்தை பூலச்சந் (60) கொத்தனார் வேலை செய்து கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் பணி புரிபவர். தாய் (59) மற்றவர் வீட்டில் சமையல் செய்து வருமானம் ஈட்டுபவர்.கமலின் மூத்த சகோதரர் ஒரு பல சரக்கு, மளிகை சாமான் விற்கும் கடையை வைத்து இருந்தார். 2007ம் ஆண்டு மூளையில் கட்டியால் மரணம் அடைந்தார். இறந்த சகோதரரின் மனைவி தற்போது இவர்களுடன்தான் வாழ்ந்து வருகிறார். வீட்டு வேலைகளை பார்ப்பது, மற்றும் தையல் தொழில் புரிகிறார். கமலின் சகோதரி திருமணமாகி போபாலில் இருக்கிறார்.
 
கமல் ஓரு பெரிய BPO நிறுவனமான Magnum Groupபில் மனித வள மேம்பாட்டு துறையில், பணிக்கு சேர்க்கும் மேலாளராக (recruitment manager) பணி புரிகிறார். இந்நிறுவனத்திற்கு போபால், ராஞ்சி மற்றும் பல நகரங்களில் கிளைகள் உள்ளன. மோட்டார் சைக்கிள் உள்ள தன் நண்பருடன் வேலைக்கு சென்று, அதற்கான செலவுகளை பங்கு போட்டு கொள்கின்றனர். எல்லோரிடமும் அன்பாக பழகி, அலுவலகத்திலும், வெளியிலும் பல நண்பர்களை அடைந்துள்ளார்.
 
கிரிக்கெட், சதுரங்கம் தவிர கதை புத்தகங்களை audiobooks மூலம் கேட்டு ரசிக்கிறார். குறிப்பாக, நமக்கு பாடங்கள் கற்று கொடுப்பதால், சரித்திரம் மிகவும் பிடிக்கும்.
 
போபாலில் உள்ள ஆருஷி என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனம் கண் தெரியாதவர்களுக்கு ஏதுவான Braille முறையில் மறைந்த ஜனாதிபதி Dr அப்துல் கலாம் அவர்களின் சுய சரித்திரமான "Wings of Fire” புத்தகத்தை வெளி இட்டு உள்ளது. இதை அவரே வெளி இட்டார். இதை ஹிந்தி மொழியில் 78 பக்கங்களுக்கு சுருக்கி “Parwaaz” என்னும் தலைப்பில் ஒரு audiobook ஆக வெளியிட்டனர். கமலுக்கு 10 வயது இருந்த போது அவரும், அவர் நண்பர் ராஜேந்திர துவரேயும் Braille முறையில் தட்டச்சு செய்தனர். இதை ஜனாதிபதி மாளிகையில் வெளியிட்ட போது தானும் அழைக்கப் பட்டதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார். ஜனாதிபதியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று கமலின் வீட்டை அலங்கரிக்கிறது. இது ஒரு மறக்க முடியாத அனுபவம் அன்றோ!
 
ஒரு வேலையில் பல ஆபத்துக்கள் இருந்தாலும் அவைகளை துணிச்சலாக எதிர் கொள்ளும் தைரியம் உடையவர் இவர். இவர் சொல்லும் அறிவுரை: "சமூகத்தில் சிலர் உங்களை புறக்கணிப்பார்கள். நீங்களும் அவர்களை கண்டு கொள்ளாதீர்கள். யார் யார் உங்களை மதிக்கிறார்களோ, அவர்களுடன் நட்பை வளர்த்து கொள்ளுங்கள். உங்களை மதிக்கத்தவர்களோ, உங்கள் நலனில் அக்கறை கொள்ளாதவர்களோ இழி சொல் பேசுவதை உங்களை பாதிக்க விடாதீர்கள். புது புது முயற்சிகளை துணிச்சலுடன் மேற் கொள்ளுங்கள்."
 
சிக்கன் , தால் சாவல் மற்றும் குலாப் ஜாமூன் இவருக்கு மிக விருப்பம். விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விழைகிறார். தனக்கு வரும் வாழ்க்கை துணைவிக்கு கொஞ்சமாவது பார்வை இருந்தால்தான் தனக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறார். "எனக்கு திருமணம் ஆகும்போது உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். கட்டாயமாக வரவும்!" என்று எங்களை மனமார உபசரித்தார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்