Icon to view photos in full screen

“ஆம், கும்மிருட்டாகத்தான் உள்ளது. ஆனால் ஒரு விளக்கு ஏற்றுவதற்கு உங்களுக்கு என்ன தடை?”

ஜகன்னாத் சிங்க் ஜெயராவின் வாழ்வில் விலை மதிக்க முடியாத பரிசுகள், மறக்க முடியாத தருணங்கள் என்னவென்றால், “Institute for the Blind” எனப்படும் கண் தெரியாதவர்களுக்காக செயல்படும் பள்ளியில் தன்னிடத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் தன்னை சந்தித்து, முதல் சம்பளத்தில் தனக்கு இனிப்பு பண்டங்களை கொடுத்து தம்மிடம் ஆசி பெற வருவதுதான்! தானே உத்தராகண்ட் மாநிலத்தில் கண் தெரியாத சிறுவனாக இருந்ததிலிருந்து, கடும் உழைப்பினால் படிப்படியாக முன்னேறி, இன்று மாவட்ட அளவில் பெரும் விருதுகளை வென்று சண்டிகரில் உள்ள இந்த பெரும் பள்ளிக்கு முதல்வராக திகழும் தன்னுடைய வாழ்க்கை பயணத்தையே தன் மாணவர்களின் சாதனைகளில் காண்கிறார் போலும்!

ஜெயாரா 1963ம் வருடம் மலை பிரதேசமான கார்வால் மாகாணத்தில் புரோலா நகரின் அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே இவரின் தாய் காச நோயால் உயிரிழந்தார். இவருடைய தந்தையும் பாட்டனாருமே இவரை வளர்த்தனர். படித்து முன்னேறவும் ஊக்குவித்தனர். நாளாக நாளாக இவரது கண் பார்வை மிகவும் மங்கி ஆறாம் வகுப்பில் படிக்க மிகவும் கஷ்டப் பட்டார். அதனால் பாடங்களை முழுக்க முழுக்க மனப்பாடம் செய்ய தொடங்கினார். அவரை ஆதரித்து ஊக்கமளித்த ஆசிரயர்களை பற்றியும், தன்னை ஒருங்கிணைத்துக் கொண்ட சக மாணவர்களையும் இந்த நாள் வரை மிகவும் நன்றி உணர்வுடன் நினைவு கொள்கிறார். “கைப்பந்து ஆடும்போது பந்து பறக்கும்போது எனக்கு கண் தெரியாததால், பந்தை என் கையில் வந்து கொடுப்பார்கள்!”, என நெகிழ்வுடன் நினைவு கூர்ந்தார்.

இவரின் கல்வித் தகுதிகள் மிகவும் பிரமிக்க வைப்பவை. ஆங்கிலத்திலும், கல்வித் துறையிலும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கற்பிக்கும் “சிறப்பு கல்வி” (Special Education) துறையிலும் டிப்ளோமா பெற்றார். டேராடூன் நகரில் இருக்கும் National Institute for the Visually Handicapped (கண் பார்வை அற்றவர்களுக்கான கல்வி நிறுவனம்) என்னும் இடத்தில ஆசிரியராக பணி புரிந்து பின்னர் சண்டிகர் நகருக்கு வந்தடைந்தார். பேராசிரியர் ரகுராஜ் சிங்க்  என்பவர் இவருக்கும் , இவரை போன்ற கண் பார்வை குன்றிய பலருக்கும் மாபெரும் ஊக்க சக்தியாக விளங்கினார். ஆகவே இவர் அந்த பேராசிரியரை மிகுந்த மரியாதையுடனும்,  அன்புடனும் “குருஜி” என்று அழைக்கிறார். சிறு வயதிலிருந்தே ஜெயாரா சுதந்திரமாக, தன் வேலைகளுக்காக யார் உதவியையும் எதிர்பார்க்காமலேயே வளர்ந்தவர். மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக, முன் மாதிரியாக வாழவே மிகவும் விழைந்தார். அவர் பல முறை ஒரு ஹிந்தி பாட்டினை பாடுவார். இதன் சாராம்சம் “உனக்கென்றே ஒரு தனித்தன்மையான அடையாளத்தையும் பெயரையும் நிலை நாட்டு! மற்றவர்களின் வாழ்க்கைக்காக உன் வாழ்க்கையின் மூலம் ஒரு சிறந்த பாதையை வகுத்துக் கொடு. உன் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக அமையட்டும்”.

ஜெயாரா எதுகை மோனைகள் மிக்க கவிதைகள் புனைவதில் அபார திறமை மிக்கவர். நினைத்த மாத்திரத்தில் இம்மாதிரி கவிதைகளை நொடிப் பொழுதில் புனைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார். இப்படித்தான் தன் குடும்பத்தைப் பற்றி ஒரு கவிதை இயற்றினார்:

_“I have three lovely daughters, their names are Sweety, Pretty and Beauty;_
_They all live in a UT_
_To look after them is my duty_
_My better half is old but she is a cutie”_
 
“எனக்கு மூன்று அழகான பெண்கள் – அவர்களின் பெயர்கள் ஸ்வீடி, ப்ரெட்டி, ப்யூட்டி. அவர்கள் இருக்கும் இடம் “யு.டீ” (சண்டிகர்); அவர்களை பராமரிக்க வேண்டியது என் கடமை (டியூட்டி). என் மனைவி வயதானாலும் அழகு (க்யுடீ)”. என்ன அழகான கவி நயம்!
தன்னுடைய மாணவர்களுக்கும் இம்மாதிரி கவிதைகள் புனைந்து ஆழமான கருத்துக்களை புரிய வைப்பார். உதாரணத்துக்கு:

“_Focus on Neeti, Preeti and Saraswathi.. become an ananda vyaapaari”_

“நியாயமான வழிமுறைகளிலும், இன்பம் பரப்புவதிலும், கல்வி பயிலுவதிலும் கவனம் செலுத்துங்கள். எல்லோரும் ‘ஆனந்த வியாபாரியாக இருங்கள் – அதாவது எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளித்து, நீங்களும் பன் மடங்கு மட்டற்ற மகிழ்ச்சியை அடையுங்கள்” என்பதை கவிதை நயமாக மனத்தில் ஆழ்ந்து பதியும்படி போதித்தார். ஆனந்தத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள பகிர்ந்து கொள்ள, நமக்கும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகும் என்னும் வாழ்க்கை தத்துவத்தை கவிதைகள் மூலம் பசுமரத்து ஆணி போல இள நெஞ்சங்களில் பதியச் செய்த பெருமை இவரைச் சாரும்!


புகைப்படங்கள்:

விக்கி ராய்