Icon to view photos in full screen

"நான் கண்ணாடி முன் நின்று முக க்ஷவரம் செய்து கொள்கின்றேன்.. ஆனால் எனக்கு கண் தெரியாது!"

அஸ்ஸாம் மாநிலத்தில் காம்ரூப் மாகாணத்தில் உள்ள சாயகோன் என்னும் கிராமத்தை சேர்ந்த கோபிந்தா மஜும்தார் அவர் வீட்டிலிருந்து 4 கீ.மீ தொலைவில் இருக்கும் தேநீர் கடைக்கு நடந்தே செல்வார். இது அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இதில் என்ன பெரிய அதிசயம் இருக்கிறது? அவருக்கு காது கேட்காது, கண் தெரியாது, பேசவும் வராது!
37 வயதான கோபிந்தாவிற்கு அந்த கிராமம் தன் உள்ளங்கையை போல நன்றாக தெரியும்! அவ்வளவு அத்துப்படி! அந்த கையின் தொடு உணர்ச்சியின் மூலமாகவே அவர் மற்றவர்களுடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார். பிறந்தது முதலே அவருக்கு காது கேட்காது. சுமார் இரண்டு வயது இருக்கும்போது “ரூபெல்லா” தாக்குதலாலே கண் பார்வையையும் இழந்தார். உலகத்தில் அவர் கண்ட காட்சி எல்லாம் அந்த இரண்டு வயதிற்குள் பார்த்தது மட்டுமே! கவுஹாத்தியில் உள்ள “சிஷு சரோதி” என்னும் பள்ளியின் “ஸ்பார்ஷ்” என்னும் கிளை வடகிழக்கு மாகணங்களில் கண்  தெரியாமலும், காது கேட்காமலும் இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக இருந்தது அவருக்கு ஏற்பட்ட ஒரு அத்ருஷ்டம். . மேஹபுபர் ரகுமான் என்னும் அவருடைய ஆசிரியரே எங்களுக்கு இந்த நேர் காணலில் மொழி பெயர்ப்பாளராக இருந்து உதவினார்.

ஐந்து சகோதரர்களில் மூத்தவரான கோபிந்தா தன்  தாயுடனும், திருமணமான இளைய சகோதரருடன் வாழ்ந்தாலும், தன்னுடைய தேவைகளுக்காக யார் கையையும் அண்டி இருக்கவில்லை. அவர் தந்தை தன் இரண்டு ஏக்கர் நிலத்தில் உழவு தொழில் புரிய, அனைத்து நுணுக்கங்களை அவருக்கு நன்கு கற்றுத்தந்து பயற்சி அளித்தார். இதனால் அவர் நெல் மற்றும் கடுகை அறுவடை செய்வதில் திறமை பெற்றார். அதை தவிர மாடுகளையும் மேய்க்கவும் பயின்றார். இது மட்டுமின்றி, பண்ணையில் கிடைக்கும் பொருள்களை வைத்துக் கொண்டு மூங்கில் கதவுகளையும், சணல்  கயிறுகளையும், தென்னை இலைகளால் செய்த துடப்பங்களையும் சந்தையில் விற்று அதன் மூலம் பணம் ஈட்டினார். அவரின் தந்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக காலமானார்.

கோபிந்தா தன் அறையை  சுத்தமாக, சற்றும் அப்பழுக்கு இல்லாமல் பராமரித்து வருகிறார். தன் துணி மணிகளை எல்லாம் தன் சகோதரர் எடுத்து கொள்ளாமல் இருக்க, பத்திரமாக பெட்டியில் பூட்டி வைத்திருப்பார்! சிக்கன் உண்டால் தன் உடல்நிலை (முக்கியமாக ஜீரணம்) பாதிக்க படுவதால், இவர் சைவ உணவையே உண்கிறார்.அவருக்கு பிடிக்காதது? மிக ஆழமான நீர் நிலைகள். வாகனங்களையும் அவர் வெறுக்கிறார். ஆனால் அவ்வப்போது மேஹ்புபரின் ஸ்கூட்டரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய பிடிக்கும்.

யார் அவரை காண சென்றாலும், அவர் இரண்டு கேள்விகளை கேட்பார்: ஒன்று, “உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா?” அவர் திருமணம் செய்து கொள்ள மிகவும் ஆவலோடு இருக்கிறார். “என் இளைய சகோதரருக்கே திருமணம் நடந்துள்ளது, எனக்கு ஏன் நடக்கக் கூடாது?” என்கிறார்! “என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் போதும்! ஒரு கடையை நிறுவி, பூஜை சாமான்களை விற்று பணம் ஈட்டுவேன்!” என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்! மேஹபுபர் கூட, இவர் நிதி வசதியுடன் இருந்தால் இவருக்கு பெண் கொடுக்க விருப்பமுடைய பெற்றோர்கள் நிச்சயம் முன் வருவார்கள் என நம்புகிறார்.

புகைப்படக்காரர் விக்கி ராய் இவரைப் பார்க்க சென்ற போது, இவர் தன் கைகளால் கேமரா போன்ற சைகை செய்து “கிளிக்” என புகைப்படம் பிடிப்பதை போல செய்து காட்டினார். கலகலப்புடன் ஆர்வமுடன் பழகினார். இதுவே கோபிந்தாவின் தனித்தன்மையான இயல்பு!

புகைப்படங்கள்:

விக்கி ராய்