Icon to view photos in full screen

"ஊனமுற்றோரால் என்ன செய்ய முடியும்?"

18 வயதான சோட்டரே ஹேம்பராமாவை நேர்காணல் செய்ய நாங்கள் பெரு முயற்சி செய்ய வேண்டி இருந்தது. இந்த தொடரை நாங்கள் எப்படி தயாரிக்கறோம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். விக்கி ராய் நாடெங்கும், மூலை முடுக்குகளில் பயணித்து, ஊனமுற்றவர்களை நேரில் சந்தித்து, புகைப்படங்கள் எடுத்து, புகைப்படங்களையும், பார்த்தவர்களின் தொலைபேசி எண்களையும் தொகுப்பாசிரியர் குழுவுக்கு அனுப்பி வைப்பார். சோட்டரே மயூரபஞ் மாகாணத்தில், ப்ரஹ்மான்கண் பஞ்சாயத்தில் பங்கிப்போச்சி தேசில்லில் உள்ள காட்குங்ரி என்னும் ஆதிவாசிகள் கிராமத்தில் வசிக்கிறார். இந்த கிராமத்தின் ஜனத்தொகை வெறும் 700 மட்டுமே. 2021ம் ஆண்டு மிகவும் கஷ்டப் பட்டு இந்த இடத்தை அடைந்தோம்.
 
சோட்டரேவுடன் நாங்கள் அவர் வீட்டிற்கு "அருகில்" உள்ளவரின் தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக இருந்தது. ஆனால் எங்களுக்கு அந்த வீடு எவ்வளவு "அருகில்" இருந்தது என்று எங்களுக்கு தெரியாது! எங்கள் குழுவில் ஓடியா மொழி தெரிந்தவர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் அந்த "அருகில் இருக்கும்" வீட்டில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதற்காக, அந்த பகுதியில் உள்ள ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனத்தில் பணி புரியும் ஒரு பெண்ணுடன் விக்கி தொடர்பு கொண்டார். காட்குங்ரி கிராமத்தில் செல் போன் தொடர்பு கொள்ள வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அங்கே சிக்னல் கிடைக்கவே கிடைக்காது. பின்புதான் தெரிந்தது அந்த கிராமம் செல் போன் பொறுத்தவரையில் "dead zone". அந்த பெண்மணி, சோட்டரேவை கிட்ட தட்ட 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பான்கிரிபோசி கிராமத்திற்கு பயணிக்க செய்ய வேண்டி இருந்தது. அப்போதுதான் செல் போன் வசதி கிடைக்கும்.
 
விக்கி அந்த பெண்மணியை சந்திக்க ஒரு குறிப்பிட்ட தேதியை முடிவு செய்தார். பான்கிரிபோசி கிராமத்தை அடைந்தபோது மற்றொரு சோதனையை சந்திக்க வேண்டி இருந்தது. தன் வாழ்க்கையிலே சோட்டரே செல் போனை பார்த்ததே இல்லை! இதனால், அதை எப்படி பயன் படுத்துவது என்பதே தெரியவில்லை! எங்களுக்கு உதவி புரிய வந்த பெண்மணி அன்று அவசரமாக எங்கோ செல்ல வேண்டி இருந்ததால் எங்கள் எழுத்தாளர் சில செய்திகளையே சேகரிக்க முடிந்தது.
 
சோட்டரேயின் தந்தை தினக்கூலிக்கு வேலை செய்பவர். காட்டிற்கோ அல்லது யாருடைய விவசாய நிலத்திற்கோ சென்று பணி புரிபவர். சோட்டரே சிறு வயதே இருக்கும்போது மண் அடுப்பின் அருகில் படுத்து உறங்கி கொண்டிருந்தார். அதில் இருந்த நெருப்பில் சில நேரம் அவர் பெற்றோர்கள் குளிர் காய்நது, பின்னர் குடி போதையில் படுத்து உறங்கி விட்டனர். சோட்டரேயின் கால்கள் நெருப்பில் பட்டு எரிந்து போயின. குழந்தையின் அலறல் குடி போதையில் இருந்த பெற்றோர்களுக்கு கேட்கவே இல்லை. அவர் இரண்டு கால்களும் கருகி போயின.
 
அந்த நாள் முதல் சோட்டரே தன்னுடைய கால் முட்டியிலேயே நடந்து வருகிறார். படிப்பும் நின்று விட்டது. இவரின் இளைய சகோதரர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள் என்றாலும், அவர்கள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்றெல்லாம் இவருக்கு சொல்ல தெரியவில்லை. வீட்டு வேலை செய்வது, கோழி மற்றும் பண்ணையில் உள்ள மிருகங்களுக்கு உணவு அளிப்பது, இலைகளை வைத்து தட்டுகள் நெய்தல் என்பது போல சிலவற்றை செயகிறார். கிராமத்தில் வாரம் தோறும் நடக்கும் சந்தையில் ஒரு சிறிய மூங்கில் மேஜை மேல் வைத்து இந்த தட்டுகளை விற்கிறார். வீட்டிற்கு அருகே ஒரு சிறிய பல சரக்கு கடை அமைத்து, அங்கே அவர் செய்யும் பொருட்களையும்,மற்றும் தன் தோட்டத்தில் வளர்க்கும் கறிகாய்களையும், பான்கிரிபோசி கிராமத்திலிருந்து கொண்டு வரும் கறிகாய்களையும் விற்க வேண்டும் என விரும்புகிறார். அந்த கடை கூட ஓலையால் போடப்பட்டு, மூங்கில் கட்டைகளால் தங்கப் படும் எளியதாகவே இருக்க விரும்புகிறார்.
 
ஒய்வு நேரத்தில் என்ன செயகிறீர்கள் என்று கேட்டதற்கு, "ஊனமுற்றவர்கள் என்ன செய்ய முடியும்" என சலிப்பியுடன் பதில் அளித்தார். அவ்வப்போது அருகில் ஒலி பெருக்கிகளை பழுது பார்க்கும் ஒரு கடையில் தன்னாலான உதவியை செய்வேன் என சொன்னார். அவ்வப்போது விசை வில்பொறி ஒன்றை பயன் படுத்தி மாம்பழங்களை மரங்களிருந்து அடிப்பது, மற்றும் பறவைகளை கொள்வது போன்ற செயல்களை விளையாட்டிற்காக செய்வேன் என கூறினார். "பறவை இனங்களை பாதுகாக்க வேண்டும்" என்று சொன்னபோது, "நான் ஒரே ஒரு பறவையைத்தான் கொன்றேன்" என்று பதிலளித்தார்.
 
சோட்டரே கேட்ட "ஊனமுற்றவர்கள் என்ன செய்ய முடியும்" கேள்விக்கு எங்களிடம் பற்பல விடைகள் உள்ளன. ஆனால் அந்த பதில்கள் எல்லாம் சரியான உதவி சரியான சமயத்தில் வந்து சேர்ந்தால்தான் பயனை கொடுக்கும். இம்மாதிரி அணுகவே முடியாத இடங்களை இவ்வுதவிகள் எவ்வாறு சென்று அடைவது? அசோகா பல்கலை கழகத்தின் முன்னாள் மாணவரும், Youth for Sustainability India Alliance என்னும் நிறுவனத்தின் முக்கிய தொண்டருமான புண்யஸ்லோகா பண்டாவுடன் (புண்யா) தொடர்பு கொண்டார். இவர் தொழிலில் முன்னேற்றம் அடைய ஆலோசனை வழங்குபவர். 2022ம் ஆண்டு முடிவில் சோட்டரே வாழும் கிராமத்திற்கு சென்று, மூன்று நாட்கள் தங்கி அங்குள்ள நிலைமையை நேரில் கண்டறிந்தார். பலசரக்கு கடை திறக்க, வெறுமனே பணம் மட்டும் கொடுத்தால் போதாது என நன்கு உணர்ந்தார். வறுமை தாண்டவமாடும் இந்த பகுதியில் பணம் வந்தவுடனேயே, அதனை பறித்து கொள்ள பலர் கழுகு போல காத்திருந்தனர் என்ற உண்மையை கண்டறிந்தார். இவர் குடும்பத்தினரே இவர் சுயமாக ஆதரவு அளிப்பதாக தெரியவில்லை. இதனால் வெறுப்படைந்த சோட்டரே அவ்வப்போது போதைக்கு அடிமை ஆகிறார்.
 
புண்யா காட்குங்ரி கிராமத்திற்கு மீண்டும் செல்ல திட்டமிட்டுள்ளார். சோட்டரேவிற்கு சரியான பயனளிக்க கூடிய உதவியை செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்த போதும், இம்முயற்சியை கை விட அவர் தயாராக இல்லை. இதற்கான யுக்திகளை யோசித்து செயல் பட முயற்சிக்கிறார்.


புகைப்படங்கள்:

விக்கி ராய்