Icon to view photos in full screen

"‘Indian Idol’ தொடர் பார்ப்பது, மற்றும், கைபேசியில் புகைப்படங்கள் எடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்"

தன் வாழ்க்கையின் இளம் வயதில் சந்திரகாந்த் உகரடா சுதாஸ்மா விரும்பியதெல்லாம் ஒரு தங்க சங்கிலி மட்டுமே! டியூ மாநிலத்தில் உள்ள வனக்பரா என்ற ஊரில் வசிக்கும் 28 வயதான இவர், இம்மாதிரி சங்கிலிகளை அணிந்திருப்பவரை தன் இளம் வயதில் பார்த்தது முதல், தானும் இவ்வாறு ஒன்றை அணிய வேண்டும் என்று பேருவகை கொண்டிருந்தார். இரண்டு வருடத்திற்கு முன்னால் தன் சகோதரர் ஷ்யாம்ஜி இதை இவருக்கு அன்பளிப்பாக அளித்தபோது மிகவும் சந்தோஷப்பட்டு, ஆனந்த கண்ணீர் வடித்தார். தன்னை விட 12 வயது மூத்தவரான ஷ்யாம்ஜியிடம் இம்மாதிரி சங்கிலி வாங்க பணம் இல்லை என்று நன்கு உணர்ந்திருந்த இவர் நன்றி உணர்வு பெருகி அதை எப்படி வாயினால் சொல்ல முடியாமல் இருந்ததால் தன்னுடைய அண்ணனை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார்.
 
Cerebral Palsy (CP) தாக்குதலுடன் பிறந்த சந்திரகாந்த்திற்கு பேச வராது. ஆனால் பிறர் பேசுவதை கேட்டு, புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளது. தன்னுடைய தாய் லாடுபெஹென் (62), ஷ்யாம்ஜி மற்றும் ஷ்யாம்ஜியின் மனைவி பாரதி (38) , அவரின் நான்கு குழந்தைகளுடன் சேர்ந்து பிரத்யேகமாக உருவாக்கிய சைகை மொழியிலேயே அவர்கள் ஒருவருடன் ஒருவர் "பேச" கற்றுக்கொண்டு உள்ளார். நாங்கள் நேர்காணல் செய்ய சென்றபோது இதன் மூலமே பாரதி எங்கள் கேள்விகளை அவருக்கு புரிய வைத்தார்.
 
CPயின் தாக்குதலால் சந்திரகாந்தின் உடல் உறுப்புக்கள் பாதிக்கப் பட்டுள்ளன. நொண்டிக்கொண்டேதான் நடக்க முடிகிறது. படிக்க தெரிந்திருந்தாலும், விரல்களின் அசைவு சரியாக இல்லாததால் எழுத முடியவில்லை. ஆனாலும், தன்னுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தானே செய்து கொள்கிறார். அவர் பிறந்தபோது அவர் பெற்றோர்கள் பற்பல நாட்டு வைத்தியங்களை முயற்சி செய்தாலும் பலன் அளிக்காததால், அவரை அருகில் இருந்த மருத்துவ மனைகளுக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் அவர் வாழ்வு தரத்தில் முன்னேற்றம் ஏதும் காண முடியாது என்று பரிந்துரைத்தாலும், இதனால் மனம் தளர்ச்சி அடையாமல் மேலும் விடா முயற்சிகளை மேற்கொண்டனர்.
 
எட்டு வருடங்களுக்கு முன்னால், இவர் 'வாத்சல்யா' என்னும் தொழில் சார்ந்த பயிற்சி கற்று தரும் பள்ளியில் சேர்ந்தார். அங்கே பண்டிகைககளில் பயன் படுத்தும் அகர்பத்தி, அலங்கார மாலைகள் போன்ற பூஜை பொருட்களை செய்ய பயிற்சி பெற்றார். இவர் திறமைகளை செப்பனிட, இவர் உறவினர் வன்ஷிகா உதவி புரிகிறார். பள்ளியில் மாணவர்கள் செய்யும் பொருட்களை விற்கிறார்கள். இங்கும் இவர் பணி புரிகிறார். ஆனால் இதற்கு பள்ளி இவருக்கு பணம் ஏதும் தருவதில்லை. இந்த பள்ளியோவெனில், பணம் கொடுக்காது இருப்பது மட்டும் அல்லாமல், இவருக்கு கொடுக்கும் மதிய உணவையும் நிறுத்தி விட்டனர்!
 
இவைகளால் இவர் மனம் தளர்ந்தாலும், இவர் குடும்பத்தினர் இவருக்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனாலும், இவருக்கு வாழ்க்கை மிகவும் கடினமாகவே உள்ளது. தினமும் பள்ளிக்கு 12 கி, மீ பேருந்திலோ, கைகளால் செலுத்தப்படும் மூன்று சக்கர சைக்கிளிலோ செல்ல வேண்டி இருந்தது. அவர் குடும்பத்தினர் உதவியுடன் தானே பள்ளிக்கு சென்று வர பயிற்சி பெற்றார். தன்னுடைய மூன்று சக்கர சைக்கிள் வைத்து, எல்லா இடத்திற்கு செல்வது மட்டும் இல்லாமல், வீட்டிற்கு வேண்டிய சில உதவிகளையும் செயகிறார். ஷ்யாம்ஜி நடத்தும் பல சரக்கு கடையினால் வரும் வருமானத்திலேயே இந்த குடும்பம் முழுவதும் பிழைத்த வருகிறது. தன்னுடைய சகோதரனுக்கு கடையில் தன்னால் ஆன உதவிகளை இவர் புரிந்து வருகிறார். கடையின் அத்தியாவசிய பரிவர்த்தனைகளை செய்ய பழக்கப் படுத்தி கொண்டுள்ளார். 25 வரை எண்ணவும் கற்றுக் கொண்டுள்ளார்.
 
யாரையாவது சந்தித்தால், அவர்களை, தங்கள் குடும்பத்தில் உள்ள கைபேசி மூலம் புகைப்படம் எடுக்க இவருக்கு மிகவும் பிடிக்கும். குடும்பத்தில் மற்றவர்கள் கைபேசியை பயன் படுத்தாமல் இருக்கும்போது, இவரே அதை முழுவதும் பயன் படுத்துகிறார். இவர் கைகள் நடுங்கி கொண்டிருப்பதால், இவருடைய இளம் உறவினர் கைபேசியை பிடித்து கொள்ள உதவுகிறார். மற்ற ஊர்களில் படிக்கும் உறவினர் டியூவிற்கு சனி-ஞாயிறு கிழமைகளில் வரும்போது, அந்த கைபேசியை எடுத்து கொண்டு விட்டால், மிகவும் ஆத்திரம் அடைகிறார். உலகத்தில் அவருக்கு உள்ள ஒரே பொழுதுபோக்கு அந்த கருவி ஒன்றுதானே! அதில் பக்தி பாடல்கள், Tom and Jerry cartoons, YouTube விடியோக்கள், "Indian Idol" என்னும் தொலைக்காட்சி தொடர் என்று பலவற்றை கண்டு மகிழ்கிறார். அதிலும், Season 12 (2022) ல் வென்ற பாவந்தீப் ராஜன் அவர்களின் பாடல்கள் இவருக்கு மிகவும் பிடிக்கும்.
 
இவருக்கு இனிப்பு பண்டங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும், லட்டு, பாயசம் மற்றும் ஐஸ் கிரீம் மிக அதிகமாக பிடிக்கும். கடையில் உள்ள ஐஸ் கிரீம் இவரே சாப்பிட்டு விடுகிறார் என்று நகைச்சுவையுடன் கூறுகிறார் பாரதி! வித விதமாக அலங்காரம் செய்து கொள்வதில் மிகவும் நாட்டம் உள்ள இவர், வாட்ச் இல்லாமல் இருக்கவே மாட்டார். அந்த ஊரில் உள்ள தையல்காரர் மூலம் புதுப்புது ஆடைகளையும் தைத்து கொள்கிறார்.
 
பிறர் உதவி இல்லாமல் தானே இருக்கவும், குடும்பத்தினரை தன்னுடைய வருமானத்தில் பராமரிக்கவும் ஆவல் கொண்டுள்ளார். சில கை தொழில்களை கற்று இருந்தாலும், தானே ஒரு சிறு தொழில் நிறுவனம் நடத்த வேண்டிய திறமைகள் இவருக்கு இன்னும் இல்லை. இவர் பள்ளியில் செய்யும் கலை பொருட்களை பள்ளியில் ஒரு சில நாட்களிலேயே விற்கின்றனர். தங்கள் கடையிலேயே வருடம் முழுவதும் விற்க இவர் குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளனர்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்