Icon to view photos in full screen

"என் அக்காதான் எனக்கு உத்வேகம் அளிப்பவர். அவர் கைகளை அசைப்பது பார்த்து அது போலவே என் கால் விரல்களை அசைக்க கற்றுக் கொண்டேன்."

சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த பிக்ரம் பட்டராய் தான் தீட்டிய கருப்பு-வெள்ளை ஓவியம் ஒன்றை காட்டினார். உள்ளங்கை மேல் அழகான பட்டாம் பூச்சி இருப்பதை அந்த சித்திரம் காட்டியது. அந்த அழகான கையையும், உள்ளங்கையில் உள்ள அழகான பட்டாம்பூச்சியையும் இந்த 20 வயது வாலிபன் தன் கால் விரல்களாலேயே வரைந்தார் என்று அறிந்த போது எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள கேங்டாக் நகரில் பிறந்த இவருக்கு, பிறவியிலேயே கைகள் இல்லை. இதனால் மலை பிரதேசத்தில் அவர் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அந்த ஊரில் இருந்தவர்கள் அவருக்கு உதவிக்கரம் அளித்தனர்! அவர் தந்தை நற்பதி பட்டராய் 12 கிராமங்களை நிர்வாகிக்கும் அதிகாரியாக பணி புரிந்த விவசாயி. தாயார் ஜாணுகா அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தவர். பெற்றோர் இருவரும் தங்கள் பணிகளில் முக்கால்வாசி நேரம் கழித்தால், பாட்டி சீதா மாயா, அக்கா அஞ்சலி இருவரும் இவருக்கு உறுதுணையாக இருந்தனர்.


பிக்ரம் Indira Memorial Academy மற்றும் Government Secondary School Sama Lingdum என்னும் பள்ளிகளில் படித்தார். இந்த பள்ளி சிறப்பு பள்ளி அல்ல. எல்லோருக்கும் பொதுவான பள்ளி(mainstream institutions). இவர் அக்கா வேதியியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர். அக்காவை போலவே முதலில் இவரும் விஞ்ஞான துறையிலேயே படிக்க ஆவல் கொண்டு உயர் நிலை பள்ளியில் விஞ்ஞானம் படித்தார். நல்ல மதிப்பெண் பெற்றாலும், தன்னுடைய ஆர்வம் கலையிலும், சரித்திரத்திலும் இருப்பதை உணர்ந்தார். அதனால் தடோங் நகரில் உள்ள Nar Bahadur Bhandari Government College கல்லூரியில் சரித்திரம் பாடம் படித்தார்.

பள்ளிக்கு செல்ல மலை பாதைகளில் அரை மணி நேரம் பயணிக்க வேண்டும். சரியான பாதை கூட கிடையாது. பல நாட்கள் இவர் தந்தை இவரை தோளில் சுமந்து கொண்டு செல்வார். ஆனால் மழை காலங்களில் இது மிகவும் கடினம். சில நாட்கள் கிராமத்தில் வாழும் சிலர் இவரை தூக்கி கொண்டு செல்வார்கள். பிறகு, அஞ்சலியும் இவரும் ஒரே பள்ளிக்கு செல்ல தொடங்கியதும் அஞ்சலி இவர் பையை எடுத்து கொண்டு உதவினார். அஞ்சலிதான் இவருக்கு எல்லா விதத்திலும் முன்னுதாரணமாக இருந்தார். அஞ்சலியின் கை அசைவுகளை உன்னிப்பாக கவனித்து அதை போலவே தான் கால்களையும், கால் விரல்களையும் அசைக்க பயின்றார். இதனால், நாளடைவில், காலாலேயே பென்சில் பிடித்து வரைய கற்றார்.

இவர் ஆசிரியர்களும் இவர் திறமையை கண்டு ஊக்குவித்தனர். பிக்ரம், தன்னுடைய ஆசிரியரான காயத்ரி செற்றி தனக்கு எழுத கற்றுக் கொடுத்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். சிக்கிம் அரசாங்கம் இவருக்கு ஒரு நாற்காலியை அளித்தாலும், அதில், இவருக்கு உட்கார முடியவில்லை. அதனால் தலைமை ஆசிரியர் சிக்மெ புட்டியா அந்த நாற்காலியைமாற்றி அமைத்து இவருக்கு சரியாக இருக்கும்படி அமைத்து கொடுத்தார். இதை தவிர இவர் தந்தை மற்றும் சில சாமான்களை இவருக்காகவே மாற்றி அமைத்தார்.

பள்ளியிலும், கல்லூரியிலும், தனக்கு உதவ பல நண்பர்கள் இருந்தனர் என்று பிக்ரம் கூறுகிறார். வீட்டில் தாயும், சகோதரியும் ஆடை அணிய உதவுகிறார்கள். தந்தை குளியலறையில் உதவுகிறார். தாய் வேலைக்கு செல்வதால், பாட்டி எப்போதுமே இவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

கலை என்பது பிக்ரம்மிற்கு பேருவகை அளிக்க கூடியது.. இதில் இவருக்கு வேட்கை என்றே சொல்லலாம். ஓவியம் வரைவது மட்டுமில்லாமல், தன் எண்ணங்களை கவிதைகள் மூலம் வெளிப்படுத்துவது என்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். taekwondo என்பதை முயன்று பார்த்தார், ஆனால் தனக்கு கலையிலேயே ஆர்வம் என்பதை உணர்ந்தார். படிப்பில் இன்னும் இரண்டு semesters உள்ளன. அதன் பிறகு என்ன செய்வது என்று இன்னும் யோசிக்கவில்லை. வயதில் இன்னும் சிறியவர் என்பதால் இவரின் குறிக்கோள்களும், ஆர்வங்களும், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. முதலில் விஞ்ஞானம் படித்து மின்பொறியாளராக ஆக வேண்டும் என்று விழைந்தார். தற்போது கலையில் ஆர்வம் கொண்டுள்ளார்.

நேரம் கிடைக்கும்போது Yama Budda, Mc Flo, Eminem போன்றவர்களின் இசையை கேட்கிறார். தனக்கு உதவி புரிந்த குடும்பத்தினர், நண்பர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் போன்ற பலரிடமும் இவர் நன்றியுடன் உள்ளார்.

இவர் 40க்கும் மேற்பட்ட விருதுகளையும், சான்றிதழ்களையும் வென்றிருக்கிறார். இவைகளில் சில:

-- 2011ம் ஆண்டு National Child Award for Exceptional Achievements, 2011. சிறந்த குழந்தைக்கான விருது. இதுவே இவர் வென்ற முதல் பரிசு.
-- 2011ம் ஆண்டு Ministry of the Women and Child Development (மகளிர் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சர்வ) வழங்கும் வெள்ளி பதக்கம்
-- 2012ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த Indo-Tibetan Border Police பொன் விழாவில் விருது
-- 2017ம் ஆண்டு மாநிலத்தில் சிறப்பு ஒலிம்பிக் விருது
-- 2021ம் ஆண்டு கிழக்கு மாகாணங்களில் முதல் மாணவர் விருது
-- 2022ம் ஆண்டு சிக்கிம் தேர்தல் ஆணையர் அளித்த சிறந்த ஊனமுற்றோர் விருது ( PwD State Icon award)
-- 2022ம் ஆண்டு சிறந்த ஊக்குவிப்பவர் விருது (Best Influencer award)


புகைப்படங்கள்:

விக்கி ராய்