Icon to view photos in full screen

"புது துணிகள் அணிந்து கொள்ளுதல், ஒப்பனை செய்து கொள்ளுதல், வாசனை பொருட்களை பயன் படுத்துதல், இரவு நேரங்களில் தொலை காட்சி பார்த்தல் போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும்."

அவர் கருவிழிகள் உல்லாசமாக இருக்கும்போது பிரகாசிக்கவும், கோபமாக இருக்கும்போது சிவந்தும் வசீகரமாக காணப்படுகின்றன. யூனியன் பிரதேசமான டியூவில் வசிக்கும் 28 வயதான அஸ்மிதா ரதிலால் Cerebral Palsy (CP)யால் தாக்கப் பட்டவர். ஆனாலும் அவரிடம் பொங்கி ததும்பும் உத்ஸாகத்திற்கு எல்லையே இல்லை! பேச வராவிட்டாலும். அனைவருடன் சேர்ந்து இருப்பதை மிகவும் விரும்பி, அவர்களுக்கு "நமஸ்தே" என்று செய்கை புரிகிறார்.
 
இவர் தந்தை ரதிலால் கபாடியா மீனவராக இருந்தார். அஸ்மிதாவுக்கு 4 வயதானபோது அவர் காலமானார். இவர் தாய் ஜெயா பெஹென் மீன் விற்று அதில் வரும் வருமானத்தால் தன் ஐந்து குழந்தைகளையும் வளர்த்து வந்தார். ஐந்து குழந்தைகளின் பெயர்கள்: மகள் பாரதி பென், மகன் அஸ்வின் பாய், அஸ்மிதா மற்றும் கடைகுட்டி மனிஷ். இன்னொரு பெண் குழந்தை 4 வயதிலேயே CPயால் தாக்கப் பட்டு மரணம் அடைந்தது. தன்னுடைய சிறிய வருமானத்தில் எல்லா குழந்தைகளுக்கும் உணவு அளித்தாலும், அனைவருக்கும் கல்வி போதிக்க வசதி இருக்கவில்லை. மனிஷ் மட்டுமே உயர்நிலை பள்ளி கல்வியை முடித்தார். நல்ல வேளையாக அவர்களுக்கென்று ஒரு வீடு இருந்தது. சமீபத்திலேதான் அந்த வீட்டிற்கும் கான்கிரீட் தளம் போட முடிந்தது.
 
இம்மாதிரி சூழ்நிலையில், அஸ்மிதா பள்ளிக்கு செல்வதோ, கல்வி அறிவு பெறுவதோ எட்டாக்கனியாகதான் இருந்திருக்கும். ஆனால், அதிருஷ்டவசமாக டியூவில் Vatsalya Special School என்ற சிறப்பு பள்ளிக்கூடம் இருந்தது. இந்த பள்ளியின் நிறுவனர் புகழ் பெற்ற உஸ்மானபாய் வோரா. அவர் மகன் ரீஸ்வான் கூட CPயால் தாக்கப் பட்டவர். 1999ம் ஆண்டு அஸ்மிதாவை பள்ளியில் சேர்க்கும்போது அவளுக்கு உட்காரவோ நடக்கவோ இயலவில்லை. அதனால் அந்த காலகட்டத்தில் அவளை பள்ளிக்கு தூக்கி செல்லவேண்டி இருந்தது என்று ஜெயா பெஹென் நினைவு கூர்ந்தார். சில ஆண்டுகளிலேயே அஸ்மிதாவின் உடல் நிலை நன்கு முன்னேற்றம் அடைந்து, அவரின் உடல் இயக்கங்கள் நன்கு முன்னேற தொடங்கியது. 6 வயதில் உட்காரவும், கைத் தடியை வைத்துக்கொண்டு நடக்கவும் முடிந்தது. 8 வயதில் தன்னுடைய தேவைகள் அனைத்தையும் தானே கவனித்துக் கொள்ளும் திறனும் அடைந்தார். ஒரு ஸ்பூன் உதவியுடன் உணவு உட்கொள்ளவும், தானே ஆடை அணியவும் பழக்க படுத்தி கொண்டார்.
 
CP உள்ளவர்களுக்கு, உடல் உறுப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, மற்றும் நுண்ணிய அசைவுகள் போன்றவை மிகவும் கடினம். உடல் திடீரென்று கட்டுக்கடங்காமல் குலுங்கும். அஸ்மிதாவிற்கு CP யினால் பேசும் சக்தியும் போயிற்று. அதனால் செய்கைகள் மூலமே எல்லோரிடமும் தொடர்பு கொள்கிறார். 18 வயதான போது கடும் முயற்சியின் பயனாக, விரல்களை அசைத்து எழுத கற்றுக் கொண்டார். ஆனால் இப்போது இவைகளில் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளார். 2015ம் ஆண்டு டியூவில் நடந்த சக்கர நாற்காலி ஓட்டும் பந்தயத்தில் கோப்பையை வென்றார்.
 
நடனம், மற்றும் இசைக்கருவிகளை பயன் படுத்துவது போன்றவைகளை பள்ளியில் கற்றார். இதனால் உடல் உறுப்புகளை ஒருங்கிணைத்து அசைக்கும் திறனை அடைந்தார். Vatsalya பள்ளியில் CP, ஆட்டிசம், கற்றல் திறன் மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ளனர். அவர்களை கவனித்து கொள்ள 15 பேர் உள்ளனர். இதற்கு கட்டணம் ஏதும் வசூல் செய்வதில்லை. மேலும், உணவு, போக்குவரத்து, சீருடை போன்றவைகளை இலவசமாகவே தருகின்றனர். குழந்தைகள் சுதந்திரமாக, யாரையும் அண்டி இருக்காமல் வாழ தேவையான உணவு சமைப்பது, தேநீர் செய்து கொள்வது, துணிகளை இஸ்திரி செய்து மடித்து வைப்பது போன்ற அத்தியாவசியமானவைகளையும் பயில்கின்றனர். இதை தவிர, மெழுகுவர்த்தி, காகிதக் கிண்ணங்கள், கால்மிதி போன்றவைகளை செய்வதிலும் பயிற்சி பெறுகிறார்கள். இவைகளை விற்று வரும் பணம் பள்ளியின் பராமரிப்புக்கு பயன் படுகிறது.
 
"தன்னுடைய சொந்த குழந்தைகளை போலவே இந்த குழந்தைகளையும் கண்ணும், கருத்துமாக பாதுகாக்கிறார்கள்." என்று ஜெயா பெஹென் கூறுகிறார். இவர் குஜராத்தி மொழியில் பேசுவதை அங்கிருந்த மொழி பெயர்ப்பாளர் நிலேஷ் எங்களுக்கு மொழி பெயர்ந்தார். ஒரு ரிக்க்ஷாவில் அஸ்மிதாவை தினமும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு அனுப்புகிறார்கள். 1030 மணிக்கு காலை உணவும், 145 மணிக்கு மதிய உணவும் அளிக்கப் படுகின்றன. மாலை 5 மணிக்கு மீண்டும் வீட்டில் வந்து விடாய் படுகிறார். அஸ்மிதா நாட்டியமாடுவதையும், மெழுகுவர்த்தி முதலானவைகளை செய்வதையும்   வீடியோ எடுத்து ஜெயா பெஹென் எங்களுக்கு அனுப்பி வைத்தார். அந்த விடியோக்கள் பார்க்க மிகவும் நன்றாக இருந்தன.
 
உடற்பயிற்சி (Physiotherapy) இவருக்கு மிக மிக முக்கியம். இதற்கு இவர் சகோதரர் மனிஷ் உதவி புரிகிறார். 25 வயதான மனிஷிற்கு நிரந்தர வருமானம் கிடையாது. வீட்டு வேலைகளில் உதவி செயகிறார். அஸ்வினி பாய் (30) ஒரு ஹோட்டலில் பணி புரிகிறார். பாரதி பென் திருமணமாகி, அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார்.  
 
அஸ்மிதாவிற்கு ஒப்பனை செய்துகொள்ளுதல், மற்றும் வாசனை பொருட்களை உபயோகிப்பது , புது துணிகளை அணிவது மிகவும் பிடிக்கும். மீன் மிகவும் பிடித்த உணவு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் விளையாடுவது, தன்னுடை தாயின் கைப்பேசியில் விளையாட்டுகளை விளையாடுவது, தொலைக்காட்சியில் Star Plus TV தொடர்நிகழ்ச்சிகளை இரவினில் பார்ப்பது, பயணம் செய்து புது இடங்களை பார்ப்பது, போன்றவை மிகவும் பிடிக்கும். குஜராத்தில் உள்ள பல சுற்றுலா மையங்களை கண்டு கழித்திருக்கிறார். Statue of Unity என்னும் வல்லபாய் படேலின் நெடுதுயர்ந்த சிலையை காண வேண்டும் என்பதே அடுத்த குறிக்கோள்.


புகைப்படங்கள்:

விக்கி ராய்