Icon to view photos in full screen

“என் ஊனத்தை ஊனம் என்று நினைக்காமல் அதுவே என் பலம் என்று உணர்ந்தவுடனே என் கனவுகளை நினைவேற்றும் பலம் பெற்றேன்”

கேரளாவில் கன்னூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகந்தாபுரம் கிராமத்தில் வசிக்கும் 26 வயதான அஞ்சலி சன்னி மழலையர் பள்ளியில் படிக்கும் போது ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது காலில் வலி என தெரிவித்தார். ஆனால், அவரின் ஆசிரியர்களும், குடும்பத்தினரும் சோம்பல் காரணமாக சாக்குகள் சொல்கிறார் என எண்ணினார். அவர் நாலாம் வகுப்பு படிக்கும் போதுதான் ஒரு ஆசிரியர் அவருக்கு ஏதோ ஒரு கடும் உடல் உபாதை இருப்பதாக சுட்டி காட்டி, அவரை உடனே மருத்துவர்களிடம் அழைத்து செல்லுமாறு வலியுறித்தினார். சோதனைகள் செய்த போது, அவருக்கு Muscular Dystrophy என்னும் தசைச்சிதைவு நோய் இருப்பதாக கண்டுபிடிக்க பட்டது. இந்த நோயால், நாட்பட நாட்பட, தசைகள் செயலிழந்து போகும்.
 
அஞ்சலியின் நகரும் மற்றும் அங்கங்களை அசைக்கும் சக்தி முற்றிலும் குன்றி, சக்கரநாற்காலியையே சார்ந்து இருக்கும் நிலையை அடைந்தார். இது போதாதென்று, அவருக்கு உறுதுணையாக இருந்த அவர் தந்தை திடீரென்று 2009ம் வருடம் பக்கவாதத்தால் தாக்கப் பட்டு உடலின் இடது பக்கம் முற்றிலும் செயலிழந்து போய், அனைத்துக்கும் தன் மனைவியின் உதவியையே சார்ந்து இருந்தார். அஞ்சலியின் ஆருரியிர் நண்பர் லினி எனப்படும் லிநிமோல் அன்தொனிதான் அவருக்கு நடுநிலை பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரை உதவுவதில் முக்கிய பங்கேற்றார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனக்கு வேண்டிய கல்லூரிக்கு பயணம் செய்ய முடியாததால் கல்வியிலிருந்து ஒரு வருடம் இடைவெளி எடுத்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அருகே உள்ள கல்லூரியில் BBA  மற்றும்  M.Com பட்டங்களில் தேர்ச்சி பெற்றார். இங்கே இருந்த ஆசிரியர்கள் இவரை மிகுந்த ஆதரவுடனும், கனிவுடனும் நடத்தினார்கள். “என் துறையின் தலைவர் தன் சொந்த செலவிலேயே ஒரு சாய்வு நாற்காலி வாங்கி கொடுத்தார். இதனால் நான் வுகுப்புகளில் வலி இல்லாமல் உட்கார முடிந்தது” என உணர்ச்சிபூர்வமாக நன்றி செலுத்துகிறார்.
பள்ளிக்கு செல்லாமல் இருந்த அந்த ஆண்டில் இணையத்தளம் வழியாக graphic designing (ஓவியங்களை கணினி மூலம் வடிவமைப்பது) பயின்று தன் குடும்பத்தினரின் பிறந்தநாட்களுக்கு அழகான நாட்காட்டிகளை வடிவமைத்து கொடுத்தார். அதே சமயம் லினி fashion designing கற்றுக்கொண்டிருந்த போது உபயோகித்த அக்ரிலிக் வர்ணங்கள் இருந்தன. அவைகளை பயன் படுத்தி பழைய நாள்காட்டிகளின் பின் புறத்தில் வண்ண ஓவியங்களை வரைய தொடங்கினார். இந்த கலையில் தேர்ச்சி பெற்றபின், தன் தாயின் உதவியுடன் கான்வாஸ் மீதும் வண்ண ஓவியங்கள் வரைய தொடங்கினார்.
 
நாளுக்கு நாள் மோசமாகி வரும் தன் உடல்நிலையைப் பற்றி கவலைப் படாமல் இருக்கிறார். “வருங்காலத்தை பற்றி நான் கவலை படுவதில்லை. என்னுடைய இலட்சியங்கள் எல்லாம் குறுகிய காலாகட்டத்துக்காகதான்! இன்று, நாளை – அவ்வளவே என் நினைவில் நிற்கின்றன!” என்று ஞானத்துடன் கூறுகிறார். சிறு வயதில் கர்நாடக சங்கீதம் பாடவும், இசை விசைப்பலகையிலும் (keyboard) தேர்ச்சி பெற்றார். அவரது தசைகள் வலு இழந்த போது keyboard பயன் படுத்துவதை நிறுத்திவிட்டார். ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்தாமல் தொடர்கிறார். கையால் ஓவியம் வரைய முடியாமல் போன போது முதலில் கைபேசியிலும் பிற்பாடு iPad சாதனத்தாலும் ஓவியங்களை தீட்ட தொடங்கினார். அவருடைய டிஜிட்டல் ஓவியங்களுக்கு இணைய தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது Instagram இணையதளத்தில் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன. அவர் சொந்தமாக  YouTube channelம் கொண்டுள்ளார்.
 
“நான் எதாவது பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தால், இதுவரை நான் வென்று வந்த மலை அளவு மிகப் பெரிய பிரச்சனைகளை நினைத்து பார்த்து, அவற்றை விட தற்போது சந்திக்கும் பிரச்சனைகள் கடுகளவே என்று எண்ணி தைர்யம் அடைவேன். ஒருவர் தாம் ஊனம் என்று நினைத்தாலே ஒழிய ஊனமுள்ளவர்களாக மாட்டார்கள்”

புகைப்படங்கள்:

விக்கி ராய்