Icon to view photos in full screen

“நான் இதுவரை என் பிறந்த நாளை கொண்டாடியதே இல்லை. ஒவ்வொரு நாளையும் நாம் கொண்டாட வேண்டும். நாளை என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாதே!”

காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாகாணத்தில் உள்ள வாகாம் என்ன கிராமத்தில் அமீர் ஹுசைன் லோனே பிறந்தார். பிறந்த வருடம் சரியாக தெரியாது.. கிட்டத் தட்ட 1989ம் ஆண்டு என்று யூகிக்கறார், பிறந்த வருடம்தான் தெரியாதே தவிர் “_அந்த நிகழ்ச்சி_” நடந்த நாள் அவர் நினைவிலிருந்து அழிக்கவே முடியாது! 1997ம் ஆண்டு, ஒரு ஞாயிறு! மரம் அறுக்கும் ஆலை ஒன்றில் பணி புரியும் தன் மற்றொரு மகனுக்கு மதிய உணவு அளிக்க அமீரை அவர் தந்தை அனுப்பினார்.

“மரம் அறுக்கும் ரம்பத்தை இயக்கும் இயந்திரத்தின் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தேன். அப்போது சற்றும் எதிர்பாராமல், அந்த இயந்திரம் நான் அணிந்திருந்த மேலுறையை உறிஞ்சி இழுத்தது. அது இழுத்த வேகத்தில், அந்த ஆடையை அணிந்திருந்த என்னையும் சேர்த்து உறிஞ்சுவது போல இழுத்துக்கொண்டது. இதனால், என் இரண்டு கைகளும் முற்றிலும் துண்டிக்கப் பட்டு, நான் தூரே வீசி எறியப் பட்டேன்”, என்று பதட்டத்துடன் நினைவு கொள்கிறார். எவ்வளவோ வருடங்கள் கடந்தாலும்,இந்த பயங்கரமான நினைவுகள் அவர் மனத்தில் பசு மரத்து ஆணி போல பதிந்து விட்டன. சில கிராமத்தினர் இவர் இறந்தே விட்டார் என்று நினைத்து, இவரை புதைக்க ஏற்பாடு செய்ய முற்பட்டனர்! ஆனால் ஒருவர் மட்டும், அச்சமின்றி அந்த இயந்திரத்தின் அருகில் சென்று இவரை மீட்டு எடுத்து, அருகில் இருந்த ராணுவ முகாமிற்கு எடுத்து சென்றார். அங்கே ராணுவ வீரர்கள் முதலுதவி கொடுத்த பின்னர், அருகே பாரமுல்லா கிராமத்தில் இருக்கும் “Bone and Joints Hospital (எலும்பு மற்றும் மூட்டுகள் சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனை)க்கு அழைத்து சென்றனர். இவர் தந்தை தன் நிலத்தை விற்றே இவரது சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடிந்தது என்பதை மிகவும் துக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.
 
நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியபோது இவருக்குள் ஒரு புத்துணர்ச்சியும், உத்வேகமும் ததும்பின. “காஷ்மீரின் கடும் குளிர் காலம் முடிந்து, இனிமையான வசந்த காலத்தில் நுழைவது போல இருந்தது!” என்கிறார். ஆனால் அந்த கிராமத்தில் இருந்த சிலரின் கொடூரமான மனப்பாங்கு மாறவே இல்லை. இவருடைய பெற்றோர்களிடம் “இவன் வாழ்ந்து என்ன பயன்? இவனை விஷம் கொடுத்து கொன்று விடுங்கள்” என்றும் “உணவை மேஜையின் மீது வைத்து விடுங்கள். கைகள் இல்லாவிட்டாலும், வாயாலேயே சாப்பிடட்டும்” என்றெல்லாம் ஈவு இரக்கம் இல்லாமல், துர்போதனை செய்தார்கள். இவருடைய பாட்டி பாசி இவருக்கு உறுதுணையாக இருந்து, ஊக்குவித்து, வளர்த்து ஆளாக்கினார். மக்களின் கொடூரமான வார்த்தைகளாலும், செயல்களாலும் மனமுடைந்து இருக்கும் போதெல்லாம், இவருக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் புகட்டி நல்ல பாதையில் செலுத்தினார். பாட்டியின் உந்துதாலேயே இவர் மர்ஹாமா கிராமத்தில் உள்ள பள்ளிக்கு செல்ல தொடங்கினார்.

வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் பலரால் அவமானப் படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் அதிலிருந்து ஒரு பாடம் பயின்று முன்னேற்றப் பாதையில் வீறு நடை போட்டார்.  ஒரு முறை மசூதியில் உள்ளே வர அனுமதி மறுக்கப் பட்டது. காரணம்? இவருக்கு தன் உடம்பை முறைப்படி சுத்தம் செய்து கொள்ள முடியவில்லை என்பதே! இதற்கு பிறகு முயற்சி எடுத்து இதனை கற்றறிந்தார். மற்றொரு முறை ஒரு திருமணத்திற்கு சென்ற போது யாருமே இவர் விருந்து உண்ண உதவவில்லை. மிகுந்த துக்கத்துடன் அழுது கொண்டே வீடு திரும்பி தன் பாட்டியிடம் முறையிட்டார். மேலும் ஒரு கரண்டியை எப்படி உபயோகிப்பது என்று பாட்டியிடம்  கற்றறிந்தார். “இறைவன் அருளால் இனிமேல் நீ யார் கையையும் எதிர்பார்க்காமல் இருப்பாயாக!” என்று பாட்டி ஆசி கூறினார்.
 
வாழ்க்கையில் அனுபவித்த பற்பல கசப்பான அனுபங்களால், யாரையும் சார்ந்து இருக்ககூடாது என்ற மன வலிமையையும் திறனையும் மெள்ள மெள்ள பெற்றார். ஒரு முறை பள்ளிக்கு செல்லும் போது இவருடைய பேண்ட்டின் பொத்தான் அறுந்து போயிற்று. அதனால் பேன்ட் கீழே சரிந்து விட்டது. வெட்கத்திலே கூனிக்குறுகி, சாலை ஓரமாக ஒரு புதரில் ஒதுங்கி, ஒளிந்து கொண்டு, அந்த சாலையில் செல்பவர்களை எல்லாம் உதவும்படி மிகவும் மன்றாடினார். ஆனால் ஒருவர் கூட உதவ முன்வரவில்லை. அப்படியே இரவு வரை புதரில் மறைந்து கொண்டிருந்து, இருட்டின பிறகு, தன் பேன்ட்டை தன் வாயால் கவ்விக்கொண்டு வயல்வெளிகள் வழியாக யார் கண்ணுக்கும் படாமல் ஓடி, வீட்டை வந்தடைந்தார். மற்றொரு முறை, பள்ளி ஆசிரியர் ஒரு மாணவனை இவருக்கு எழுத உதவுமாறு கேட்டால் அந்த மாணவன் கொஞ்சமும் மனிதாபிமானமே இல்லாமல், “”நான் ஒன்றும் அவனுடைய வேலைக்காரன் இல்லை” என்று பதிலளித்தான்! இதனால் ரோஷமும் கோபமும் நிறைந்த அமீர் அன்று பள்ளி முடிந்தவுடன் அடர்த்தியாக மரங்கள் இருந்த இடம் ஒன்றை அடைந்து அங்கே மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த காய்களையும் பழங்களையும் கல்லால் அடித்து, கீழே விழுந்த காய்களை விற்று கிடைத்த ஐந்து ரூபாயில் ஒரு பேனா வாங்கினார். மேலும் ஒரு துணி வியாபாரியிடம் இருந்து பழைய அட்டைகளையும் வாங்கி, அந்த அட்டைகளை தோள், கன்னம் இவை இடையில் பிடித்து, அதில் பேனாவில் எழுத பயின்றார்.
 
இம்மாதிரியான மன உறுதியே அவருக்கு  தானே முக க்ஷவரம் செய்து கொள்ள உதவியது. ஒரு நாள் ஒரு நாவிதன் அவரை அவமதித்ததால் இனி தானே முக க்ஷவரம் செய்து கொள்ள வேண்டும் என்று நிச்சயித்து, பயிலவும் செய்தார். மற்றொரு முறை பிற மாணவர்கள் ஜீலம் நதியில் நீச்சல் அடிப்பதைப் பார்த்து, தானும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று ஆவலுடன் நதியில் குதித்தார். ஆனால் வெள்ளத்தை சமாளிக்க முடியாமல், கிட்டத்தட்ட மூழ்கியே போனார்! கூட இருந்த சிலர் உதவியதால் உயிர் பிழைத்தார். ஆனால் இதனால் துவண்டு போகாமல், அடுத்த நாளும் நதிக்கரைக்கு வந்து வாத்துக்கள் எவ்வாறு தங்கள் கால்களால் தண்ணீரை விலக்கி மிதக்கின்றன என்பதை உன்னிப்பாக கவனித்து, அதை பின்பற்றவும் தொடங்கினார்.  
 
சிறு வயது முதலே அவருக்கு கிரிக்கெட் ஆட்டம் மீது ஒரு அலாதியான ஊக்கம் – ஏன், வெறி என்று கூட சொல்லலாம்! கிரிக்கெட் போட்டிகளை அண்டை வீடு ஒன்றில் உள்ள தொலைகாட்சியில் பார்க்க மிகவும் முயற்சி எடுப்பார். ஒரு முறை இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றுக் கொண்டிருத்த போது, அதை பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார். ஆனால் அந்த வீட்டின் சொந்தக்காரர் வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி விட்டார்! அப்படியும், ஜன்னல் இடுக்கில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாக ஒரு கண்ணை பதித்து பார்த்தார்! அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 90 ரன் அடித்து இந்தியா வெற்றி பெற்றது. இதனால் அமீரின் கிரிக்கெட் ஆர்வம் மேலும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அன்று முதல் ஒரு சின்ன கட்டையை பேட்டாக உபயோகித்து, அதை கன்னத்திற்கு கீழ் பிடித்துக் கொண்டு, பந்தை காலின் இரு விரல்கள் நடுவே பிடித்துகொண்டு தன் பாட்டியுடன் “கிரிக்கெட்” விளையாட பல மணி நேரம் பயின்றார்!
முதன் முதலில் ஓர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற நாள் அவர் வாழ்வில் மறக்க முடியாத நாள்! எதிர் அணியில் ஒரு பேட்ஸ்மென் இரண்டு சிக்ஸர் அடித்து பிரமாதமாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் அமீர் தன் முதல் பந்திலேயே அவரை அவுட் ஆக்கி விட்டார்! தன்னுடைய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட் வீழ்த்தினார். மேலும் 10 ரன்கள் அடித்தார். இதனால் “ஆட்ட நாயகன்” விருதையும் வென்றார். அவர் மேலும் 2016ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ஊனமுற்றோர் கிரிக்கெட் குழுவின் தலைவரானார். அதே வருடம் மும்பையில் இந்தியாவும் மேற்கிந்திய தீவுகளும் ஆடும் உலக கோப்பை T20 பந்தையத்தை நேரில் காண கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா இவருக்கு பணம் கொடுத்து, வாய்ப்பையும் அளித்தார். 2017ல் Punjab Swabhimaan விருதினை பெற்ற போது அந்த விழாவிற்கு தலைமை தாங்கிய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங்க் சித்து இவரை புகழ்ந்து ஒரு பாடலை இயற்றி பாடினதை கேட்டு பேருவகை கொண்டார்!
 
நாங்கள் அமீரை சந்தித்த நாளன்று அனந்தநாகில் அடுத்த நாள் நடக்க இருக்கின்ற கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அவருடைய மிக மதிப்பு மிக்க சொத்து சச்சின் கை எழுதிக் கொண்ட ஓர் பேட்! அவரின் வாழ்க்கை கனவு” “குருநாதர்” சச்சினை நேரில் காண வேண்டும் என்பதே!

புகைப்படங்கள்:

விக்கி ராய்

வீடியோ:

சந்தன் கோமேஸ்