Icon to view photos in full screen

“நான் கணினி திரையை படித்து காட்டும் மென்பொருளை பயன் படுத்துகிறேன்… இருந்தாலும் என் மனைவி மக்களே என் கண்கள்!”

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அலிஞ்சிக்குப்பம் என்ற கிராமத்தில் ஒரு விவசாயி ஆண்டு முழுவதும், தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு, நெல், வாழை, கரும்பு மற்றும் பற்பல விதமான காய்கறிகளை பயிர் செய்து வந்தார். தன் குடும்பத்தின் தேவைக்கு மேலே மிஞ்சி இருக்கும் பண்டங்களை மாட்டு வண்டியில் 60 கி.மீ தூரத்தில் உள்ள சந்தைக்கு சென்று விற்று வருவார்.

அவருக்கு 5 பெண் குழந்தைகள், மற்றும் 2 ஆண் குழந்தைகள். அந்த 2 ஆண் குழந்தைகளுக்கும், 5 பெண்களில் மூவருக்கும் பிறவியிலேயே கண் பார்வை சரி இல்லாமல் இருந்தது. இந்த 7 பேரில் கடைசியாக பிறந்த Dr A சிதம்பரம் அவர்களுக்கு தற்போது 49 வயது ஆகிறது. இவர் பாண்டிச்சேரி பல்கலை கழகத்தில் உள்ள Centre for the Study of Social Exclusion and Inclusive Policy துறையில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரின் பெற்றோர்கள் இருவருமே முறையாக பள்ளி சென்று பாடம் கற்றதில்லை. தங்கள் கையெழுத்து போட மட்டுமே தெரியும். தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக்கூடத்திற்கே அனுப்பினார்கள். ஐந்து குழந்தைகளின் பார்வை முழுவதும் சரியாக இல்லாதது 10-11 வயதில்தான் தெரிய வந்தது. வகுப்பில் கரும் பலகையில் எழுதியது சரியாக கண்ணுக்கு தெரியவில்லை என்பதை தவிர, மற்ற எதிலும் கஷ்டம் இருக்கவில்லை. இதனால் அவர்களின் குறைபாடு ரகசியமாகவே வைக்க பட்டது. அதிலும், திருமணத்திற்கு தேடும் பொது,பரம ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது.

சிதம்பரம், படிக்கும்போதே பணம் சம்பாதிக்கவும் தொடங்கினார். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தன் உறவினரின் துணிக்கடையில் முதலில் பகுதி நேரங்களில் மட்டும் பணி புரிந்து நாளுக்கு 50 பைசா பணம் ஈட்டினார். பின்னர், அந்த உறவினர் வைத்து இருந்த உரங்கள் விற்கும் கடையில் முழு நேரம் பணி புரிந்தார். இந்த கால கட்டத்தில் அவர் பார்வை இன்னும் மோசமாக தொடங்கியது. அருகில் உள்ளவர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூட மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும், தானாகவே பள்ளி படிப்பு முடிக்க உறுதி கொண்டார். 1990ம் ஆண்டு ஆம்பூர் ஹிண்டு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வுக்கு முயன்றார். பரீட்சைக்கு முந்தின நாள், தனக்கு வினாத்தாளை படித்து காட்ட ஒருவரை நியமிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரியிடம் விண்ணப்பம் செய்தார். (நம் நாட்டில் ஊனமுற்றோர்களுக்கான உரிமைகள் பற்றிய சட்டம் அமலுக்கு வருவதற்கு ஐந்து வருடம் முன்னாள் இது நடந்தது). இதனால், கேள்வி தாளை படித்து காட்ட ஒரு ஆசிரியரை நியமித்தது மட்டுமின்றி, கோடுகள் போடாத விடை தாள்களும் அளிக்க பட்டன. அந்த ஆசிரியர், இவரின் புத்தி கூர்மையையும், திறமையையும் உணர்ந்து, பாராட்டி, இவர் மேற் படிப்புக்கு செல்ல வேண்டும் என்று பரிந்துரைத்தார்.


12ம் வகுப்பு முடித்தவுடன், சிதம்பரம் சென்னை ப்ரெசிடென்சி கல்லூரியில் BA பட்ட படிப்பிற்கு சேர்ந்தார். அவருடைய மூத்த சகோதரி National Institute for the Visually Handicapped (பார்வை குறைபாடுகளுக்கு தேசிய நிறுவனம்) பணி புரிந்து கொண்டு, அவருக்கு பண உதவி செய்தார். பொருளாதார மற்றும் ஜாதி அடிப்படையில் சிதம்பரத்திற்கு தங்க இடமும், உணவும் இலவசமாக கிடைத்தது. ஆனால் கல்லூரிக்கு 20 கிலோமீட்டர் பயணிக்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு வாரமும், கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பாடங்களை படித்து காட்டும் மையத்திற்கு சென்று அங்குள்ள தன்னார்வு தொண்டர்கள் மூன்று மணி நேரம் அந்த வாரத்து பாடங்களை படித்து காட்ட, அதனால் அந்த வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டிய பயிற்சிகளை எல்லாம் முடித்து விடுவார்.

1998ம் ஆண்டு சமூக பணி துறையில் முதுகலை பட்டம் முடித்து Deepam Education Society for Health (DESH) என்னும் நிறுவனத்தில் நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பை பெற்றார். DESH நிறுவனத்தின் நிறுவனர் சரஸ்வதி சங்கரன் அவர்கள் சிதம்பரத்திற்கு உறுதுணையாக இருந்து, அவருக்கு மேன்மேலும் உயர்த்த பதவிகளையும், பொறுப்புகளையும், சம்பள உயர்வையும் அளித்து அவரை முன்னேற்ற பாதையில் ஊக்குவித்தார். இதனால் சிதம்பரம் சமூகப் பணியில் M. Phil பட்டம், சிறப்பு கல்வி முறைகளில் B. Ed பட்டம் முதலிய சாதனைகளை படைத்து, முனைவர் (Ph. D) பட்டமும் பெற்று வெற்றி வாகை சூடினார்.

இவ்வளவு படிப்பும், பட்டங்களும் மட்டுமின்றி, ஊனமுற்றோர்களின் உரிமைகளுக்காகவும் தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டார். 2004ம் ஆண்டு, ஊனமுற்ற 324 பேர்களின் விவரங்களையும், சாதனைகளையும் தொகுத்து தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார். இதன் பயனாக அந்த 324 பேர்களுக்கும் அரசாங்க வேலை கிடைத்தது. அந்த கால கட்டத்தில், யாரையுமே பணியில் அமர்த்த முடியாதபடி முடக்கம் செய்திருந்தாலும், இதை அடைய முடிந்தது பெரும் சாதனையே!

2005ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் District Disabled Welfare Officeல் (மாவட்ட ஊனமுற்றோர் நலனை பேணும் நிறுவனம்) Vocational Guidance Officer (வேலை வாய்ப்புக்கு வழி காட்டும் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மாவட்டத்தில் உள்ள ஊனமுற்றோர்களை கணக்கெடுத்து, அந்த விவரங்களை தமிழக முதல்வருக்கு சமர்ப்பித்தார். 2006ம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்பு, ஊனமுற்றோர் உரிமைகளுக்கு பாடு படும் அனைத்து நிறுவனங்களையும் ஒன்று சேர்த்து, ஒரு மாபெரும் பேரணியை நிகழ்த்தி காட்டினார். இதன் பயனாக பல கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் ஊனமுற்றோர்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப் பட்டன. இதனால் 2007ம் ஆண்டு அரசு ஊனமுற்றோர்களுக்கு அளிக்கும் மானியங்கள் அதிகரிக்க பட்டு, மேலும் பல ஊனமுற்றோர்களும் இதனால் பயன் அடைந்தனர்.

அக்டோபர் 2009 முதல் சிதம்பரம் பாண்டிச்சேரி பல்கலை கழகத்தில் M.A. Human Rights (மனித உரிமைகளில் முதுகலை பட்டம்) பாடத்தில் ஆசிரியராக பணி புரிகிறார். இவர் முயற்சியால் ஊனமுற்றோர்களுக்கு இலவச கல்வி அளிக்கும் திட்டம் இந்த பல்கலை கழகம் துவங்கி உள்ளது. மேலும் UGC எனப்படும் பல்கலை கழக மானிய கமிஷனின் சிறப்பு திறனாளிகளுக்கு மேல் படிப்பு வழங்கும் முயற்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல் புரிகிறார்.

2004ம் ஆண்டு தன் வாழ்க்கை துணைவியை தேடி மணமுடித்தார். அவர் மனைவி வடிவுக்கரசி வணிகம் மற்றும் நூலக துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர்களுக்கு 17 வயதான வர்ஷா என்னும் மகளும், 12 வயதான சுபாஷ் சந்தர் என்னும் மகனும் உள்ளனர். Dr சிதம்பரம் ஊனமுற்றோர்களின் உரிமைகளுக்கும், மேம்பாட்டிற்கும் கடுமையாக உழைத்து வெற்றி கொண்டுள்ளார். இதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். ஊனமுற்றோர்களின் நலனுக்காக பாடு படும் அனைத்து நிறுவனங்களையும் ஒன்று சேர்த்து, ஒரு குடையின் நிழலில் செயல் படுத்த வேண்டும் என்பதே இவரின் அவா. "தற்போது சிறு நிறுவனங்கள் போதிய உதவி இல்லாமல் இருக்கின்றன. அனைவரும் ஒன்று சேர்ந்தால் நம்மால் இன்னும் எவ்வளவோ சாதிக்க முடியும்" என்று ஆவலுடன் கூறினார்.


புகைப்படங்கள்:

விக்கி ராய்